Family Tree - சூப்பர் மார்க்கெட்டின் சூப்பர் ஹீரோ!



ஒவ்வொரு கனடா குடிமகனின் விருப்பமான பேக்கரி உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனம், ‘ஜார்ஜ் வெஸ்டன் லிமிட்டெட்’. 139 வருடங்களாக இயங்கி வரும் குடும்ப நிறுவனம் இது.
ரொட்டி, பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி உணவுகள் முதல் மருந்து, ரியல் எஸ்டேட், வங்கிச் சேவை, ஆடை என பல துறைகளிலும் ஜொலித்து வருகிறது இந்நிறுவனம்.
ஒரு நிறுவனம் தொடர்ந்து நீண்ட காலம் இயங்குவதற்கு ஒரேயொரு வழிமுறையைக் கடைப்பிடித்தால் போதும் என்ற பாடத்தைக் கற்பிக்கிறது இதன் வரலாறு. எவ்வளவு இக்கட்டான சூழலிலும் நிறுவனத்தைக் கைவிடாமல் இருந்தால் போதும் என்பதே அந்த வழிமுறை.

ஜார்ஜ் வெஸ்டன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆஸ்வேகோ எனும் சிற்றூர். அங்கே 1864ம் வருடம் பிறந்தார் ஜார்ஜ் வெஸ்டன். அவரது தந்தைக்கு நிலையான வேலை எதுவும் இல்லை. ஜார்ஜுக்கு 4 வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் கனடாவுக்குக் குடிபெயர்ந்தது. கல்வி கற்க டொரொண்டோவில் உள்ள ஓர் அரசாங்கப் பள்ளியில் சேர்ந்தார் ஜார்ஜ். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை.

பல இடங்களில் வேலை தேடி அலைந்தார். ஃபிட்டர் வேலைதான் கிடைத்தது. ஆனால், அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. இறுதியாக டொரொண்டோவில் உள்ள  ரொட்டி தயாரிப்பாளர் ஃப்ராக்லியிடம் பயிற்சியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது ஜார்ஜின் வயது 12. இந்த வேலைதான் ஜார்ஜ் வாழ்க்கையில் மட்டுமல்ல, கனடாவின் பேக்கரி தொழிலிலும் திருப்புமுனை.

பயிற்சியாளராக இருந்தாலும் ரொட்டி தயாரிப்புக்கு உதவி, வரவு, செலவு, பராமரிப்பு என அனைத்து வேலைகளையும் பொறுப்புடன் செய்வார். வாரத்துக்கு 1.75 கனடா டாலர் சம்பளம். வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்திலேயே ஃப்ராக்லியிடமிருந்து ரொட்டி தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டார். 

சின்ன வயதிலேயே ரொட்டி தயாரிப்பில் கில்லாடியாகி விட்டாலும் ஃப்ராக்லியிடமே வேலை செய்துவந்தார். டொரொண்டோவைவிட்டு வேறு இடத்துக்கு ஃப்ராக்லி நகர, பூவன் என்ற இன்னொரு ரொட்டி தயாரிப்பாளரிடம் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்தார் ஜார்ஜ். பூவனுடன் இணைந்து ரொட்டி தயாரிப்பதோடு, வீடு வீடாகச் சென்று ரொட்டி விற்கவும் செய்தார். இந்த அனுபவம் ரொட்டி வர்த்தகத்திலுள்ள சாதக, பாதகங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தது.

ஃப்ராக்லி மற்றும் பூவனிடமிருந்து கிடைத்த பாடங்களை முதலீடாக்கி, 1882ல், அதாவது தனது 18வது வயதில் ரொட்டி பிசினஸில் இறங்கினார் ஜார்ஜ். பூவனிடமே ரொட்டிகளைக் கொள்முதல் செய்து, தெருத்தெருவாக அலைந்து விற்கத் தொடங்கினார். இதிலிருந்து ‘ஜார்ஜ் வெஸ்டன் லிமிட்டெட்’ நிறுவனத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களில் பிசினஸ் நன்றாகப் போக, பூவனின் பேக்கரியைத் தன்வசமாக்கிவிட்டார் ஜார்ஜ்.

பேக்கரி சொந்தமானதும் முதல் நாளில் 250 லோப் ரொட்டிகளைத் தயார் செய்தார். அத்தனை ரொட்டிகளையும் தனியாளாக சரக்கு வண்டியில் ஏற்றிக்கொண்டு, சந்திப்பவர்களிடம் எல்லாம் ரொட்டியைச் சந்தைப்படுத்தி விற்றிருக்கிறார். ஆனால், கொண்டுபோன ரொட்டிகளில் 60 சதவீதம் விற்பனையாகவில்லை. அப்போது பெரும்பாலானோர் வீடுகளிலேயே ரொட்டியைத் தயாரித்தனர். வீட்டு ரொட்டிக்குப் பயன்படுத்தப்படும் கோதுமைக்கும், பேக்கரி ரொட்டியின் மூலப்பொருளான கோதுமைக்கும் தரத்தின் அடிப்படையில் நிறைய வித்தியாசம் இருந்தது. அதனால் பேக்கரியில் ரொட்டி வாங்குவதை மக்கள் தவிர்த்தனர்.

இதைக் கவனித்த ஜார்ஜ், ரொட்டி தயாரிக்க உயர் ரகமான கோதுமைகளைப் பயன்படுத்தினார். அத்துடன் ரொட்டியின் கவர் மீது ‘வீட்டு முறைப்படி ரொட்டி தயாரிப்பு’ என்ற வாசகத்தை பதித்தார். இன்று வீட்டு முறைப்படி சமையல் என்று பேனர் வைக்கப்பட்டிருக்கும் பல ஹோட்டல்களுக்கு முன்னோடியே ஜார்ஜ்தான்.ஜார்ஜின் வீட்டு முறைப்படி ரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, இரண்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்த்தார். அத்துடன் ‘ஜி.வெஸ்டன்’ஸ் ரொட்டி தயாரிப்பு ஆலை’ என்று தனது பேக்கரிக்குப் பெயரும் வைத்தார். முதன்முதலாக கனடாவில் ரொட்டி தயாரிப்பதற்காக நவீன இயந்திரங்களை அறிமுகப்படுத்தினார்.

பிசினஸ் சக்கைப்போடு போட, ஜார்ஜின் திட்டங்களும் பெரிதாகின. 1897ல் கனடாவிலேயே மிகப்பெரிய ரொட்டி தயாரிக்கும் ஆலையைத் திறந்தார். ‘மாடல் பேக்கரி’ என்பது அதன் பெயர். அங்கே வாரத்துக்கு 20 ஆயிரம் லோப் ரொட்டிகள் தயாராகின. பிசினஸை விரிவாக்க, ரொட்டிகளில் வித்தியாசம் காட்டினார். ஆம்; 30 வகையான ரொட்டிகள் அறிமுகமானது. அந்தக் காலத்தில் இவ்வளவு வகைகளில் ரொட்டிகளைத் தயாரிக்கும் ஒரே நிறுவனம் என்ற பெருமையைத் தன்வசமாக்கியது ஜார்ஜின் பேக்கரி.

எவ்வளவு உயரத்துக்குச் சென்றபோதும் ‘வீட்டு முறைப்படி ரொட்டி தயாரிப்பு’ என்ற பிசினஸ் மந்திரத்தை அவர் கைவிடவில்லை. இதற்கிடையில் அவருக்குத் திருமணமாகி குழந்தைகளும் பிறந்தன. ரொட்டியுடன் பிஸ்கட், கேக்குகளையும் தயாரிக்கத் தொடங்கியது ‘மாடல் பேக்கரி’. பிஸ்கட்டுகளை நவீனமான பாக்கெட்டுகளில் அடைத்து சந்தைப்படுத்தினார் ஜார்ஜ்.
1904ல் டொரொண்டோவைச் சுற்றியிருந்த 35 கடைகள் ஜார்ஜின் வாடிக்கையாளர்களாகின. அந்தக் கடைகளுக்கு வாரந்தோறும் பிஸ்கட்டுகளை அனுப்பினார். ரொட்டியைவிட பிஸ்கட் மற்றும் கேக்குகளில் அதிக லாபம் கிடைக்க, பிஸ்கட்டில் அதிக கவனம் செலுத்தினார்.

வழக்கம்போல முதல் உலகப்போர் ஜார்ஜின் பேக்கரி பிசினஸுக்கும் குறுக்கீடாக அமைந்தது. கனடாவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் போரில் பங்கேற்க ஐரோப்பாவிற்குச் சென்றனர். அவர்களுக்கு பிஸ்கட் போன்ற பேக்கரி உணவுகளை அனுப்புவதற்கான ஆர்டர் ஜார்ஜின் நிறுவனத்துக்கு வர, பிழைத்துக்கொண்டது ‘மாடல் பேக்கரி’. போர் தொடர்ந்தது. 1917ல் ஜார்ஜின் மகன் கார்ஃபீல்டு கனடா இராணுவம் சார்பாக முதல் உலகப்போருக்குச் சென்றார். கார்ஃபீல்டை போருக்கு அனுப்ப ஜார்ஜுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை.

கார்ஃபீல்டு போரில் இருந்த நேரம் அவருடைய தம்பி ஒருவன் தீ விபத்தில் இறந்துவிட்டான். மகன் இறந்த துக்கம் தாளாமல் பைத்தியம் பிடித்தது போல ஆகிவிட்டார் ஜார்ஜின் மனைவி. ஜார்ஜும் நிலைகுலைந்துபோனார். அவரால் பிசினஸில் மட்டுமல்ல, வேறு எந்த ஒன்றிலும் ஈடுபட முடியவில்லை. போட்டியாக உள்ள ஒரு நிறுவனத்திடம் தன் நிறுவனத்தை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். விற்பதற்கு முன் கார்ஃபீல்டிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்று கடிதம் எழுதினார்.

‘‘இந்த இக்கட்டான சூழலை நினைக்கும்போது ரொம்பவே கஷ்டமாயிருக்கு. இருந்தாலும் நான் திரும்பி வரும்வரை நிறுவனத்தை யாருக்கும் விற்க வேண்டாம். நல்ல ஆரோக்கியத்துடன் வீட்டுக்குத் திரும்பினால் பிசினஸை நான் பார்த்துக்கொள்கிறேன்...’’ என்று பிரான்ஸின் போர்க்களத்திலிருந்த ஓர் அகழியில் ஒளிந்துகொண்டு தந்தைக்கு பதில் கடிதம் எழுதினார் கார்ஃபீல்டு.
போர் முடிந்தது. 1919ல் டொரொண்டோவிற்குத் திரும்பிய கார்ஃபீல்டு மின்னல் வேகத்தில் பிசினஸைக் கையில் எடுத்தார். பிஸ்கட் தயாரிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்தார். அத்துடன் ஐரோப்பா முழுவதும் உள்ள பிரபலமான பிஸ்கட் ஆலைகளுக்கு விசிட் அடித்தார்.

அங்கிருந்த வகை வகையான பிஸ்கட்டுகள் கார்ஃபீல்டைக் கவர்ந்தன. 1922ல் கனடாவில் இங்கிலீஷ் பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் இங்கிலீஷ் பிஸ்கட்டுகளின் விற்பனை பட்டையைக் கிளப்பியது. குடும்ப நிறுவனத்துக்கு ஆழமாக அடித்தளமிட்ட ஜார்ஜ் 1924ல் மரணமடைந்தார். அவர் டொரொண்டோவில் உருவாக்கிய பேக்கரியை உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனமாக வளர்த்தெடுத்தார் மகன் கார்ஃபீல்டு. இவருக்குப் பின் வந்த வாரிசுகள் பேக்கரி உணவுகளுடன், மளிகைப் பொருட்கள், ரியல் எஸ்டேட் என பல துறைகளிலும் கால்பதித்து பிசினஸை விரிவாக்கினர்.

துணை நிறுவனங்கள்

‘லாப்லா கம்பெனிஸ் லிமிட்டெட்’, ‘சாய்ஸ் பிராப்பர்ட்டீஸ்’, ‘வெஸ்டன் ஃபுட்ஸ்’ என மூன்று துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது ‘ஜார்ஜ் வெஸ்டன் லிமிட்டெட்’.
கனடாவில் உணவு மற்றும் மருந்துத்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது, ‘லாப்லா’. சூப்பர் மார்க்கெட், சூப்பர் ஸ்டோர், ஹைப்பர்மார்க்கெட், டிஸ்கவுன்ட் ஸ்டோர், சூப்பர் சென்டர் என பல வகைகளில் கடைகளை நிர்வகித்து வருகிறது ‘லாப்லா’. இதன் கடைகளுக்கு வருடந்தோறும் 100 கோடி முறை வாடிக்கையாளர்கள் விசிட் அடிக்கின்றனர்.
கனடாவின் பிரபல பிராண்டுகளான ‘பிரசிடென்ட் சாய்ஸ்’, ‘நோ நேம்’, ‘ஃபார்மர்ஸ் மார்க்கெட்’, ‘ஜோ பிரஷ்’ போன்றவை இந்நிறுவனத்துக்குச் சொந்தமானவை. சுமார் 1.80 லட்சம் பேர் இதில் வேலை செய்கின்றனர்.

கனடாவின் நம்பர் ஒன் ரியல் எஸ்டேட் நிறுவனமாக கெத்து காட்டுகிறது ‘சாய்ஸ் பிராப்பர்ட்டீஸ்’. இதன் சமீபத்திய மதிப்பு 1,17,224 கோடி ரூபாய்.
வட அமெரிக்காவில் பேக்கரி என்றாலே ‘வெஸ்டன் ஃபுட்ஸ்’தான். அந்தளவுக்கு இதன் பெயர் பிரபலம். கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள 40 இடங்களில் ‘வெஸ்டன் ஃபுட்ஸ்’ இயங்கி
வருகிறது. இதில் 5 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். ‘வொண்டர்’, ‘ஏஸ் பேக்கரி’, ‘டி’இத்தாலியானோ’, ‘கன்ட்ரி ஹார்வஸ்ட்’ என இதன் பிராண்டுகளின் பெயர்கள் நீள்கின்றன.

இன்று கனடாவில் உள்ள டொரொண் டோவில் தலைமையகம் செயல்பட்டுவருகிறது. கனடா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே இந்நிறுவனம் இயங்குகிறது. இதில்
2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். நான்காம் தலைமுறையைச் சேர்ந்த  கேலன் வெஸ்டன் ஜூனியர்,  சேர்மன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். கடந்த ஆண்டின் மொத்த வருமானம் 3,18,485 கோடி ரூபாய்!   

த.சக்திவேல்