நான் - கே.எஸ்.ரவிகுமார்



‘எந்த வேலை செய்தாலும் சின்சியரா செய்யணும்…’ இதுதான் அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டது. தாத்தா, அப்பா எல்லாருக்கும் சென்னைதான் சொந்த ஊரு. அப்பா கே.சுப்பிரமணியன், அந்தக் காலத்திலே பெரிய அளவிலே ரெண்டு ஆட்டோமொபைல் ஷோரூம் வெச்சிருந்தார். அம்மா எஸ்.ருக்மணி, அண்ணன் சேகர், அக்கா குமாரி, நான், தம்பி சந்தர், தங்கை பிரபா. இடையிலே ஏற்பட்ட விபத்து காரணமா ஆட்டோ மொபைல் தொழிலை விட்டுட்டு அப்பா ரியல் எஸ்டேட் செய்யத் துவங்கினார்.

மயிலாப்பூரில் சொந்த வீடு. பிறக்கும் போதே வசதிகள் சூழப் பிறந்தவன். ஸ்கூலுக்கெல்லாம் கார் அல்லது ஆட்டோரிக்‌ஷாதான். இந்தியாவிலேயே முதன்முதல்ல ரெண்டு கேரவன் அறிமுகமானப்ப அதிலே ஒன்றை எங்க அப்பா வாங்கினார். உள்ளேயே பெட்ரூம், கிச்சன், சின்ன ஹால், பாத்ரூம் எல்லாம் இருக்கும்.

சொந்தமா இடம் வாங்கி பிளாட் போட்டு விற்கிறதுதான் அப்பாவின் வேலை. கடினமா உழைச்சார். அதற்கு பலனா நிறைய இடங்கள், சொத்துக்கள். 2005ல அப்பா இறந்ததும் அவர் வாங்கி வெச்சிருந்த இடங்களை எல்லாம் நாங்க விற்க ஆரம்பிச்சு ஆறு மாசத்துல எந்த இடமும் இல்லாம முடிச்சிட்டோம். அப்பறம் பார்த்தா ரியல் எஸ்டேட் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய அளவிலே வளர்ச்சி அடைஞ்சது. கொஞ்சம் அவசரப்படாம இருந்திருக்கலாம்.

வீட்டுக்குப் பின்னாடி ராஜா முத்தையா ஸ்கூலில் படிப்பு. ‘ஏ’ செக்‌ஷனில் ஆங்கில மீடியம். கிரேஸி மோகன் தம்பி மாது, தேவா பிரதர்ஸ் இப்படி நிறைய பேர் அந்த ஸ்கூல்லதான் படிச்சாங்க. பியூசி குருநானக் கல்லூரியிலே படிச்சேன். துரைப்பாக்கம் பி.பி.ஜே கல்லூரில பி.ஏ எகனாமிக்ஸ்.

என் பிரதர்ஸ் எல்லாம் அப்பா வழியிலே ஆளுக்கொரு பிஸினஸ் செய்தாங்க. என் நண்பர் ஒருத்தர் சிங்கப்பூரில் இருந்தார். அவருடன் சேர்ந்து எஃப்.எம்.எஸ் சினிமா ரைட்ஸ் பிஸினஸ் செய்துட்டு இருந்தோம். ‘ஃபெடரேஷன் ஆஃப் மலேசியா & சிங்கப்பூர்’ - அதாவது சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு தமிழ், மலையாளப் படங்களை வாங்கி அனுப்புறது.

அங்க இருக்கற எஸ்டேட் பணியாளர்களுக்கு பெரிய திரை கட்டி படம் போடுவாங்க. நான் அனுப்புற ஒவ்வொரு படமும் குறைஞ்சது ஒரு வருஷம், ரெண்டு வருஷம்னு எஸ்டேட் எஸ்டேட்டா சுத்தி வரும். அந்நேரம்தான் இந்த பைரஸி என்ட்ரி. 1980 துவக்கத்திலேயே பைரஸி வந்துடுச்சு. இங்க இருந்து ஒரு டாலருக்கு படத்தை வாங்கிட்டு போயி வாடகைக்கு விடத் துவங்கிட்டாங்க. ஆளுக்கொரு பெரிய டிவி, வீடியோ பிளேயர் எல்லாம் வெச்சு மக்கள் பைரஸி மூலம் சுலபமா படம் பார்க்க ஆரம்பிச்சாங்க.

எங்க தேவை குறைய ஆரம்பிச்சது. பிஸினஸ் அடி. இதிலே இலங்கை ரைட்ஸ் வேறு தனி. அப்ப தமிழர்களும் இந்த மூணு நாடுகள்ல மட்டும்தான் இருப்பாங்க. அப்பறம் ஐடி வந்துச்சு, படிப்பு வளர்ந்துச்சு. துபாய், அமெரிக்கா, இங்கிலாந்துன்னு தமிழர்கள் பரவத் துவங்கினாங்க. பின்னர் சினிமா ஓவர்சீஸ் ரைட்ஸ் ஆகிடுச்சு. பிஸினஸ் அடி வாங்கினதும் விட்டுட்டேன். சில பிஸினஸ் ஐடியாக்கள் எல்லாம் நண்பர்கள் கொடுத்தாங்க. அதிலே எல்லாம் பெரிய உடன்பாடு ஏற்படலை.

சினிமாக்களை வாங்கி விற்கற நேரத்திலே அந்தந்த படங்களுடைய ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்குப் போறதுண்டு. அங்கே இந்த இயக்குநர்களுடைய கேப்டன்ஷிப் வேலை மேலே ஓர் ஆர்வம். ஆனால், எங்கேயும் போயி அஸிஸ்டென்ட்டாக வேலை வேணும்னு கேட்கவே இல்லை.
பிறக்கும் போதே வசதியா இருந்ததால் யார்கிட்டேயும் வேலை வேணும்னு கேட்க கூச்சப்படுவேன். அப்பா பிஸினஸ்மேன். நூறு பேர்களை வைத்து வேலை வாங்கினவர். அதனாலேயே நான் யாரிடமும் கேட்டு நின்னதில்லை. தானா வந்த வாய்ப்புகளாக சுமார் 10 வருஷங்கள் அப்போதைய எல்லா இயக்குநர்கள்கிட்டேயும் அஸிஸ்டென்டா வேலை செய்தேன்.  

அதிலே கடைசிப் படமாக ‘புதுவசந்தம்’ படத்திலே இணை இயக்குநரா வேலை செய்தேன். அந்தப் படத்துடைய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சார் ‘ஒரு கன்னடப் படம் ரைட்ஸ் வாங்கப் போறேன், அதுக்கு நீதான் திரைக்கதை எழுதணும். அந்தப் படத்திலே கமர்சியலா  கலர்ஃபுல் விஷயங்கள் ஏதும் இருக்காது. அதை நீ சேர்த்து திரைக்கதை எழுது’ன்னு சொன்னார்.

ஏற்கனவே படம் இரண்டரை மணி நேரம். இதிலே டூயட், காமெடி சீன்ஸ் எல்லாம் சேர்த்து இரண்டரை மணி நேரத்திற்கு திரைக்கதை எழுதிக் கொடுத்தேன். ‘சரி, நாளைக்கு எஸ்.ஏ.ராஜ்குமாரை அனுப்பறேன். சீன் சொல்லி பாட்டு வாங்கிடு’னு ஆர்.பி. சார் சொன்னார். ‘சார் அதெல்லாம் டைரக்டர் வேலை... என்னுடைய வேலை இல்லையே சார்’னு சொன்னேன். ‘அட நீதான்யா டைரக்டர்’னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டார்.
கன்னடப் படத்திலே ஒரு கொலைதான் இருக்கும். நான் இன்னொரு கொலையையும் சேர்த்து காமெடி சீன்ஸ், பாடல்கள், ஆக்‌ஷன் சீன்ஸ் இப்படி எல்லாத்தையும் சேர்த்து படமாக்கினேன். அப்படி முதன் முதலில் நான் இயக்கிய படம்தான் ‘புரியாத புதிர்’.

பத்து வருடங்கள் அசிஸ்டென்டாக வேலை. காரணம் சுவாரஸ்யமானது. ‘இந்த படம் ஹிட்டானா அடுத்த படம் நீதான் இயக்குநர்’னு சொல்லிட்டு போவாங்க. ஆனா, என் ராசிப்படி நான் அசிஸ்டென்டா வேலை செய்த படம் ஒண்ணு ரிலீஸ் ஆகாது, ரிலீஸ் ஆனா ஹிட் ஆகாது! ‘புது வசந்தம்’ இந்த ராசியை மாத்தினது!

ஆரம்பத்தில் நான் ‘புரியாத புதிர்’ செய்ய மாட்டேன்னு சொன்னேன். முதல்படம் என்னுடைய சொந்தக் கதையா இருக்கணும்னு விரும்பினேன். தவிர ‘புரியாத புதிர்’ திரில்லர் கதை. ஃபேமிலி ஆடியன்ஸ், பெண்கள் கூட்டம் இந்தப் படத்துக்கு வராது. முதல் படமே இப்படி இருந்தால் நல்லா இருக்காது அப்படின்னு அடுத்த நாள் வந்து செளத்ரி சார்கிட்ட சொன்னேன்.

‘இந்தப் படம் ஃப்ளாப் ஆனாலும் அடுத்த படம் உனக்கு தரேன்’னு வாக்குறுதி கொடுத்தார். ‘புரியாத புதிர்’ 100 நாள் ஓடுச்சு. அடுத்த படம்தான் ‘சேரன் பாண்டியன்’. இதுவும் கதை என்னுடையது இல்லை. ‘கதையைக் கேளு... உனக்கேத்த மாதிரி மாற்றி அமைச்சு இயக்கு’னு செளத்ரி சார் சொல்லிட்டாரு.

நிறைய மாற்றங்கள் எல்லாம் செய்து படத்தை 33 நாட்களில் இயக்கி முடிச்சேன். அடுத்தடுத்து வரிசையாக படங்கள் அவங்க பேனர்லயே செய்தேன். சினிமா துறையில் எழுச்சியை ஏற்படுத்தணும், மக்களுக்கு கருத்து சொல்லணும், விழிப்புணர்வு கொடுக்கணும்... இப்படி எதுவும் கிடையாது. ஒரு பார்வையாளனா நான் சீட்டில் உட்கார்ந்தா ஒரு படத்தை எப்படி ரசிப்பேன்..? அவ்வளவுதான்.

அதை மட்டும் மனசுல வச்சுக்கிட்டு படம் எடுத்தேன். என் அப்பா ஒரு பிஸினஸ்மேன். என் அண்ணன் ஒரு பிஸினஸ்மேன். என்னுடைய பிஸினஸ் சினிமா. தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கொடுக்கிற காசை என் காசா நினைச்சு எவ்வளவு சிக்கனமாக திட்டமிட்டு செய்யணுமோ அப்படி இந்த பிஸினஸை செய்தேன். இப்படி திட்டமிடும்போது ஒருசில நேரங்களில் மிஸ் ஆகும். அந்த நேரத்துலதான் கோபப்பட்டு யாராக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டுவேன். மத்தபடி நான் கோபக்காரன் இல்ல.

ரஜினி, கமல் கூட நிறைய படங்கள் செய்த காரணம் அவங்கள நான் ஒரு ரசிகனாதான் முதல்ல பார்க்கறேன். அதனால்தான் அவர்களுக்கு என்ன தேவையோ அதை என்னால திரையில் கொடுக்க முடிந்தது. அவர்களையும் திருப்திப்படுத்த முடிஞ்சது. ஒரு ரசிகனாக இருந்து சக ரசிகனுடைய மனசையும் சந்தோஷப்படுத்த முடிந்தது.

இப்படிப்பட்ட நேரம்தான் கமல் என்னைக் கூப்பிட்டு ‘ஒரு படம் தயாரித்து இயக்கறேன். அதேமாதிரி நீங்க ஏன் ஒரு படம் தயாரித்து இயக்கக் கூடாது’னு கேட்டார். அப்படி அவர் இயக்கி எடுத்த படம் ‘ஹேராம்’. நான் இயக்கி எடுத்த படம் ‘தெனாலி’.இதுக்கு அப்புறம் நடந்த சம்பவங்கள், என் பயணம் எல்லாமே உங்களுக்கு தெரியும். இப்ப ‘கூகுள் குட்டப்பன்’ படத்தை நானே தயாரிக்கிறேன். இடையிலேயே ஏன் தயாரிக்கலைன்னு நிறைய பேர் கேட்டாங்க. இயக்கத்தில் பிஸி. நடிப்பும் உடன் சேர்ந்துக்கிச்சு. தவிர யார்கிட்டேயும் போய் ‘நீங்க நடிக்கணும்’னு கால்ஷீட் கேட்டு நிற்க விருப்பமில்ல.

என்னுடைய மிகப்பெரிய பலம் சென்டிமென்ட். குடும்ப ஆடியன்ஸை தியேட்டருக்கு வர வைக்கணும். இதுதான் என்னுடைய குறிக்கோள். காமெடி காட்சிகளை அதிகம் நம்பினேன். ‘புரியாத புதிர்’ படத்தில் எதார்த்தமாக ஒரு சீன்ல நடிச்சேன். அடுத்து நிழல்கள் ரவி டேட் கிடைக்கல. ‘அந்த கேரக்டரை நீயே செய்திடு’னு ஆர்.பி.செளத்ரி சார் சொன்னார்.‘புத்தம் புது காலை’ல விஜயகுமார் சார் மொட்டை அடிக்க மாட்டேன்னு சொன்னார்.. நான் மொட்டை அடிச்சு நடிச்சேன். இப்படி நடிக்க ஆரம்பிச்சு, பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் கூட ‘நீங்க இந்தப் படத்தில் எப்ப வர்றீங்க... உங்களுக்கு என்ன கேரக்டர்’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி ஆரம்பிச்சதுதான் நடிப்பு.

அப்புறம் நட்புக்காக சில கேரக்டர்கள். முதல்ல இயக்குநர் ஹரி ‘அருள்’ படத்துல நடிக்க கேட்டார். மறுத்தேன். அவரே சம்பளத்துக்கு நடிக்கக் கேட்டார். கால்ஷீட் பேசி சம்பளம் வாங்கி நடிச்சேன். பிறகு நிறைய படங்கள். ‘லிங்கா’ வரைக்கும் தமிழ்ல இயக்கினேன். அப்புறம் தெலுங்கு, கன்னட மொழியில டைரக்ட் பண்ணினேன். அதுவும் பெரிய நடிகர்கள்தான்.

என் திருமண வாழ்க்கை பத்தி சொல்லணும் இல்லையா..? ஆரம்பத்தில் சினிமாக்காரன்னு யாரும் பொண்ணு கொடுக்க முன்வரலை. என் மாமனார் சி.கே. பாலகிருஷ்ணன், ‘எல்லாத் துறைகள்லயும் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான்’னு என்னை நம்பி அவருடைய ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்தார்.

அவங்க பேரு கற்பகம். திருவண்ணாமலையைச் சேர்ந்தவங்க. எனக்கு ஜனனி, மாலிகா, ஜஸ்வந்தினு மூணு மகள்கள். ரெண்டு பேருக்கு திருமணம் ஆகிடுச்சு. ஒரு மகள் டாக்டருக்கு படிச்சுட்டு இருக்காங்க. எந்தத் துறையா இருந்தாலும் ‘கான்சன்ட்ரேட் ஆன் யுவர் ஒர்க்…’. இதை சின்சியரா செய்தா போதும். வெற்றி உண்டு.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்