சன் டிவியின் மெகா தொடர் டைரக்டர்!



கலைஞரின் எழுத்தில் மூன்று சீரியல்களை இயக்கியவர்...
இஸ்கான் ஆன்மிக நிறுவனத்துக் காக நாடகக் குழு நடத்துபவர்...
2 வெப் சீரிஸ்களில் முத்திரை பதித்தவர்...

இன்று சன் டிவியின் மெகா தொடர் டைரக்டர்!

‘‘மெகா தொடர்னாலே, வீட்டுக்குள்ள ஒரு பத்து, பனிரெண்டு ஆர்ட்டிஸ்ட்கள் சூழ்ந்து இருக்கற மாதிரி மூணு நாலு ட்ராக் வச்சுதான் பல சீரியல்கள் போயிட்டிருக்கு. அதுல எங்க தொடர் வித்தியாசமானது. ஒரு அப்பா, கவுதம்... அந்த அப்பாகிட்டேந்து பாசம் கிடைக்காத பொண்ணு, மீரா. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்துவைக்க நினைக்கற ஹீரோ, யுவா. இவங்கதான் மெயின் ரோல்ஸ்.

இதையும் தாண்டி, கதைல முக்கியமான ஹீரோவா அப்பாவுடைய ரெண்டாவது மனைவி யமுனாவை சொல்லலாம். சித்தினாலே கொடுமைக்காரினு நினைப்பு வரும். ஆனா, இந்த சித்தி அப்படியில்ல. பாசிட்டிவ் சித்தி. மீராவை தனக்கு பிறந்த பெண் மாதிரி அன்பைப் பொழியும் அம்மா. இதுதான் சன் டிவில திங்கள் - சனி இரவு 8.30க்கு டெலிகாஸ்ட் ஆகும் எங்க ‘கண்ணான கண்ணே’ சீரியல்...’’ எனர்ஜியாக பேசுகிறார் இந்த மெகா தொடரின் இயக்குநரான தனுஷ்.

இதற்குமுன் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘ரோமாபுரிப் பாண்டியன்’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘இராமானுஜர்’ ஆகிய தொடர்களை இயக்கியவர் இவர்.‘‘பூர்வீகமே சென்னைதான். அடிப்படைல நான் நடிகன், நாடகக்காரன். ‘இஸ்கான்’ (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா) சார்பில் ஒரு டிராமா ட்ரூப் நடத்திட்டு வர்றேன். பாகவதத்தில் இருந்து பல கதைகளைக் கொண்டு, இருபது மேடை நாடகங்கள் நடத்தியிருக்கோம்.

மேடைல நடிகர்கள் பின்னாடி எல்.இ.டி. திரை, வாய்ஸ் ஓவர், லிப் சிங்க் எல்லாம் செட் பண்ணிதான் அந்த பக்தி நாடகங்களை அரங்கேற்றுவோம். கோகுலாஷ்டமி மாதிரி தினங்கள்லதான் நாடகம் நடக்கும். நான் சீரியல் இயக்குவேன்னு நினைச்சதில்ல. கலைஞர் ஐயாவை சந்திக்கறதுக்கு முன்னாடி வரை, அவரோட நூல்கள் எதையும் வாசிச்சதில்ல. திடீர்னு ஒருநாள் எல்லாம் அமைஞ்சது. குட்டிபத்மினி மேடத்தால்தான் சீரியலுக்குள் வந்தேன். ஏன்னா, அவங்களோட சீரியல்கள்ல அப்ப நடிச்சுட்டு இருந்தேன்.

கலைஞர் எழுதின ‘ரோமாபுரிப்பாண்டியன்’, ‘இராமானுஜர்’, ‘தென்பாண்டிச் சிங்கம்’ தவிர ‘63 நாயன்மார்கள்’ சீரியலையும் இயக்கியிருக்கேன்.

சினிமா அனுபவமும் கொஞ்சம் உண்டு. ‘கதை’ படத்து இயக்குநர் அபிஷேக்கிட்ட உதவியாளரா ஒர்க் பண்ணியிருக்கேன். சரித்திரத் தொடர்கள் பக்கம் இருந்த என்னை ‘தமிழ்ச் செல்வி’ சீரியல் மூலம் சமூகத் தொடர்கள் பக்கம் கூட்டிட்டு வந்தது சன் டிவிதான். ‘ரோஜா’ தொடரின் முதல் 50 எபிசோடுகளை இயக்கும்போதுதான், ‘கண்ணான கண்ணே’க்குள் வந்தேன்.

இந்தத் தொடருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்க காரணம் சன் டிவிதான். அவ்ளோ உற்சாகமும், சுதந்திரமும் கொடுக்கறாங்க. ஸோ, சன் டிவிக்கும், இந்த சீரியலோட தயாரிப்பாளர் அன்புராஜா சாருக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ்...’’ புன்னகைப்பவரின் பேச்சு, கலைஞர் பக்கம் தாவியது.

‘‘கலைஞர் ஐயா எழுதின மூணு மெகா தொடர்களை இயக்கும் வாய்ப்பு கிடைச்சதை ரொம்ப பெருமையா நினைக்கறேன். வாரத்துல மூணு நாட்கள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமையும்.

விட்ட குறையா தொட்டகுறையானு தெரியல. அடிக்கடி அவர்கிட்ட இருந்து போன் வந்திடும். ‘வாங்க பேசலாம்’னு கூப்பிட்டு கதைகளை விவாதிப்பார். எல்லாமே நேரடியா டீல் பண்ணுவார். அவரோட எனக்கு ரொம்ப சிங்க் ஆச்சு. அவருக்கு போன்செய்து, ‘தனுஷ் பேசுறேன்’னு சொன்னா, ‘டைரக்டரா’ம்பார். வயசுல சின்னவனா இருந்தாலும் பார்த்ததும், ‘உட்காருங்க’ம்பார். அவரோட ஒர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது எதேச்சையா அமைஞ்ச விஷயம்.

குட்டிபத்மினி மேம் ஒருநாள் என்கிட்ட, ‘கலைஞர் ஐயா ‘ரோமாபுரிப் பாண்டியன்’னு ஒரு நாவல் எழுதியிருக்காங்க. அதை ஒரு டிரெய்லரா பண்ண விரும்புறாங்க. ஐயாவை போய்ப்பாருங்க’னு சொன்னாங்க. அவரைச் சந்திக்கறதுக்கு முன்னாடி அந்த நாவலை படிச்சேன். படிக்கப் படிக்க ஒவ்வொரு பக்கமும் விஷுவலா விரிஞ்சது. ரொம்ப டீடெயில் பண்ணியிருந்தார். உடனே நான் மேம்கிட்ட ‘இதை டிரெய்லரா பண்றதைவிட தொடராகவே பண்ணலாம்’னு சொல்லி கேரக்டர்கள் வச்சு, வாய்ஸ் ஓவர் கொடுத்து தொடர் டிரெய்லர் மாதிரியே பண்ணினேன். எட்டு நிமிஷம் வந்துச்சு.

அவ்ளோ நேரம் அவர் பார்க்க டைம் கிடைக்குமானு தெரியல. ஆனா, அதை ஐயாகிட்ட காட்டினதும், ரசிச்சுப் பார்த்தவர், திரும்பவும் பார்த்து ரசிச்சார்.

‘இதைப் பண்ணினது யார்’னு கேட்டார். என்னை அறிமுகப்படுத்தினாங்க. ‘என் கதையை எனக்கே அறிமுகப்படுத்தியிருக்கே’னு புன்னகையோடு சொன்ன வர், என்னை நம்பி, அவ்ளோ பெரிய தொடரை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். ஒருநாள் கூட அவர் ஷூட்டிங் ஸ்பாட் வந்ததில்ல. ஆனா, ஒவ்வொரு எபிசோடும் அவர் பார்த்த பிறகுதான் டெலிகாஸ்ட் ஆகும். ‘ரோ பா’ அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போய், ‘இராமானுஜர்’ இயக்கற வாய்ப்பையும் கொடுத்தார்.

அதை ரொம்ப பெரிய விஷயமா பாக்குறேன். அவரோட ஒர்க்கிங் ஸ்டைலும் பிரமிக்க வச்சது. நைட் பேசுவோம். ‘காலைல அஞ்சு சீன்களோட வாங்க’ன்னு சொல்வார். மறுநாள் அதிகாலை அஞ்சு மணிக்கு ‘சீன் ரெடியாச்சா’னு போன் பண்ணி கேட்டுட்டு. ‘உடனே வீட்டுக்கு வாங்க’னு கூப்பிடுவார்.போனா... அவர் டேபிள்ல குறைஞ்சது இராமானுஜர் பத்தி 25 புக்ஸ் இருக்கும். அத்தனையும் படிச்சு முடிச்சு பாயிண்ட்ஸ் எடுத்து வச்சிருப்பார். அந்த வயசிலும் அவர் வேகம் பிரமிக்க வைக்கும்.

‘இராமானுஜர்’ சீரியலை கலைஞர் எழுதினதாலதான் பெரியளவுல ரீச் ஆச்சு...’’ என்னும் தனுஷ், 150 எபிசோடுகளில் ‘தென்பாண்டிச் சிங்கம்’ நாவலை கச்சிதமாக எடுத்திருக்கிறார். ‘‘கலைஞர் ஐயா, தான் எழுதின ‘பாயும்புலி பண்டாரக வன்னி யன்’ நாவலை படமா பண்ண விரும்பினார்.

அதை ஸ்கிரிப்ட் பண்ணி ரெண்டு மணி நேர கதையா அவர்கிட்ட சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. அவரது உடல்நலம் காரணமா அப்ப அதை படமா எடுக்க முடியல. ஆனா, அதை எப்ப வேணாலும் படமா பண்ண வாக்களவுல அவர்கிட்ட அனுமதி வாங்கியிருக்கேன். ஒருவேளை சினிமா டைரக்டரா நான் வந்தா... நிச்சயம் அதை படமா எடுப்பேன்...’’ என்னும் தனுஷ், ‘குருதிக்களம்’, ‘போலீஸ் டைரி 2.0’ ஆகிய வெப் சீரிஸ்களையும் இயக்கியிருக்கிறார்.

‘‘வெப்சீரிஸ் இங்க முழுவதுமா ஆக்ரமிக்க இன்னும் பத்து வருஷங்களாவது ஆகலாம். வெளிநாடுகள்ல நிறைய ஆப்ஷன்கள் இருக்கு. எந்த ஜானர்ல விருப்பம் இருக்கோ, அதை பார்க்கலாம்.இப்ப மெகா சீரியல்ஸ் ரொம்ப இம்ப்ரூவ் ஆகியிருக்கு. வெப் சீரிஸோ, சினிமாவோ, சீரியலோ எல்லாத்துக்குமே ஹார்டு ஒர்க் அவசியம். அதேநேரம்  கிரியேட்டிவிட்டி, ஷாட் கம்போஸிங்ல வித்தியாசங்கள் இருக்கு. சீரியலுக்குனு ஒரு மேக்கிங் இருக்கு. அந்த ஸ்டைல்ல ஒர்க் பண்ணினா மட்டும்தான், ஆடியன்ஸ்கிட்ட எடுபடும். ஆனா, என் மனநிலைக்கு வெப் சீரிஸ் செட் ஆகாது...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் தனுஷ்.
                       
செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்