ராஜ்யசபாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை... நடைபெறும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அக்கட்சிக்கு முக்கியம்!



மத்தியில் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. அன்று முதல் 2018ம் ஆண்டு முடியும் வரை நேரடியாகவும், மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்தும், ஒருசில மாநில அரசுகளை கைப்பாவையாக வழிநடத்தியும், கிட்டத்தட்ட 21 மாநிலங்களில் அங்கம் வகித்தது பாஜக. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம். ஆனால், 2019ம் ஆண்டு மத்தியில் அதிக பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அரியணை ஏறிய பாஜக, அதன்பின் நடந்த பல மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இதனால், அதிரடியாக தனது தேர்தல் யுத்திகளைக் கையாண்டு பல வெற்றிகளைக் குவித்த பாஜகவின் செயல் இப்போது என்னவானது? அல்லது பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜகவுக்கு வாக்களிக்க யாரும் தயராக இல்லையா? அல்லது மோடி-அமித்ஷா கூட்டணிக்குப் பின் பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்ற ஜே.பி.நட்டாவை மக்கள் ஏற்கவில்லையா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பாஜகவுக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கேள்வியை பத்திரிகையாளரும், ‘தன்னாட்சி தமிழகத்தை’ச் சேர்ந்தவருமான ஆழி செந்தில்நாதனிடம் முன்வைத்தோம். “பாஜகவைப் பொறுத்தவரை அவர்களின் முக்கிய கவனம் மேற்கு வங்கம்தான். எட்டு கட்டங்களாகப் பிரித்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக தன் கையில் கொண்டு வருவதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

மம்தா பானர்ஜி ஒருவேளை ஜெயித்தால் கூட அந்தக் கட்சியை உடைத்து அவர்களால் ஆட்சியைக் கொண்டு வர முடியும். ஏனெனில் மம்தா தலைவராக இருக்கும் திருணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே, திருணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலும் பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தன் பக்கம் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கும். அப்படித்தான் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்தது.  அதேநேரம் தமிழகம், கேரளாவை பாஜக கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. இவ்விரு மாநிலங்களிலும் பாஜக ஒரு சீட் ஜெயித்தாலும் லாபம்தான். அவர்களுக்கு இப்போது மேற்கு வங்கம்தான் முக்கியம்.

அசாமில் கூட மீண்டும் ஆட்சி அமைக்க நினைக்கலாம். அங்கு ஒருவேளை தோல்வியைச் சந்தித்தாலும் அது சின்னசறுக்கலாக இருக்கலாமே தவிர, பெரிதாக இருக்காது. நடக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாஜகவுக்கு லாபம்தான். யார் வந்தாலும் தங்களுடைய ஆட்சியாக மாற்றுவதற்கு எல்லா வேலைகளையும் பார்ப்பார்கள்...’’ என்கிறார் ஆழி செந்தில்நாதன்.


“இந்த ஐந்து மாநில தேர்தல் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு மிகப்பெரிய சவால்...” என்கிறார் சமூக செயற்பாட்டாளர் முனைவர் மு.இனியவன்.  

‘‘2018ல் இருந்த நிலைமை 2020ல் பாஜகவுக்கு இல்லை. 2018ன் பிற்பகுதியில் சத்திஸ்கரில் முதல் தோல்வியை அக்கட்சி சந்தித்தது. அடுத்து ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட். இதனையடுத்து நெருக்கடியான கூட்டணி ஆட்சியாக அரியானாவில் அமைகிறது. 2019ல் மகராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் போட்டி யிட்ட சிவசேனா, தேர்தல் முடிவுக்குப் பின் எதிர்த்தரப்புடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்தது. இது பாஜக எதிர்பார்க்காத டுவிஸ்ட். வழக்கமாக பாஜகதான் இதுபோன்ற செயல்களைச் செய்து பல மாநிலங்களில் காலூன்றியிருக்கிறது; ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா தலைமை ஏற்ற பின் 2020ல் தில்லி மாநில தேர்தலில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்தது. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட போதிலும் எதிர்க்கட்சிகள் வலுவான வாக்கு சதவீதத்துடன் உள்ளனர். இந்த சூழலில் ஐந்து மாநில தேர்தல் பாஜகவுக்கு ஆசிட் டெஸ்ட்தான்.சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களில் - ராஜ்யசபா எம்பி - மெஜாரிட்டிக்கு வேண்டிய 123 எம்பிக்களில் இப்போது பாஜகவுக்கு 95 எம்பிக்கள்தான் இருக்கிறார்கள்.

இதனால் மக்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் இருக்கிறது. இதற்கு, நடைபெறும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் அல்லது பாஜக ஆதரவுக் கட்சி அந்த மாநிலங்களில் ஆட்சியில் அமர வேண்டும். அப்பொழுதுதான் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களும் பாஜக ஆதரவாளர்களாக அமைவார்கள்.

இந்தத் தேர்தலில் பாஜக மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்துவது உண்மைதான். ஏனெனில் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதனால், சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற நோக்கில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்...” என்று கூறும் இனியவன், 2019ம் ஆண்டிற்குப் பிறகு மாநில அரசியலில் பாஜக சறுக்குவதற்கான காரணங்களை முன்வைத்தார்.

“2019, 2020 காலக்கட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக விலைவாசி உயர்வு, பொருளாதாரத் தேக்கம் போன்ற அம்சங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் பாதிப்பினை உருவாக்கி யிருக்கிறது. அது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. முக்கியமாக, பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் மற்றும் CAA சட்டங்கள். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கடுத்து நேரு காலத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கும் சிறுபான்மையினர் நலன். இதை இந்துத்துவா சக்திகள் மறுத்துக் கொண்டு வந்தார்கள். அரசியலமைப்பில் சொல்லப்படும் மதச்சார்பின்மை என்பதை விட்டு, இந்து - இந்தி என்ற அஜண்டாவை நோக்கி பாஜக செல்கிறது. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே சிக்கல்களை அக்கட்சி சந்திக்கிறது.

அடுத்து பாஜக தலைமையில் பெரும் சிக்கல் இருக்கிறது. அமித்ஷாவுக்கு அடுத்து ஜே.பி.நட்டா பாஜக தலைவராகப் பொறுப்பேற்றாலும் மோடி, அமித்ஷா போல் இவரது பெயர் நாடு முழுக்கச் சென்றடையவில்லை. தவிர இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க பாஜக தவறியிருக்கிறது.

அதேபோல் ஆர்எஸ்எஸ் திட்டமிட்ட படி CAA, அயோத்தி பிரச்னை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய திட்டங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் பிரதமர் மோடி. முன்பெல்லாம் ஆர்எஸ்எஸ் வெளியிலிருந்து, பாஜகவுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் காட்டிக்கொண்டு செயல்படும். இப்போது சதீஷ், சுதன் சிங், ஷிவ் நாராயணன் என்ற மூன்று பிரச்சாரகர்களை நேரடியாக நியமித்து வேலை திட்டங்களை ஆர்எஸ்எஸ் செய்கிறது. இதை மற்ற பாஜக தலைவர்கள் விரும்பவில்லை.

மேலும் இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ச்சியாக தனியாரிடம் தாரைவார்ப்பது, பாதுகாப்புத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் அதிகரித்து வரும் நேரடி அன்னிய முதலீடு ஆகியவை பாஜக முன்வைக்கும் தேசியம், இந்தியம் ஆகிய முழக்கங்களின் தன்மையை அதன்  தொண்டர்களிடம் நீர்த்துப் போகச் செய்துள்ளன...” என்று கூறும் இனியவன், தென்னிந்தியாவில் பாஜகவின் செயல் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதையும் விளக்கினார்.

“எப்படியாவது தென் இந்தியாவில் கால் பதித்திட வேண்டும் என்கிற நோக்கில் ‘ஆபரேஷன் கமலம்’ என்கிற பெயரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  தென்னிந்தியாவிலுள்ள 102 மக்களவை உறுப்பினர்களில், பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான். இந்த சட்ட மன்றத் தேர்தலில் அவர்களின் முக்கிய டார்கெட்டாக கேரளா இருக்கிறது. கடந்த தேர்தலில் ஒரு எம்எல்ஏ வெற்றி பெற்ற நம்பிக்கையில் இந்த முறை 115 இடங்களில் நேரடியாக களம் இறங்கி இருக்கிறார்கள்.

கேரளாவில் ராஷ்டிரிய இந்து அமைப்பு போலவே, ராஷ்டிரிய கிறிஸ்டியன் மஞ்ச், ராஷ்டிரிய முஸ்லீம் மஞ்ச் என்று தீவிர மதவாத அமைப்புகளை உருவாக்கும் வேலையை 2016ம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டார்கள்.இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுவது, வட மாநிலங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றைச் செய்துகொடுத்ததுதான் என்கிறார்கள். ஆனால், தென்னிந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற அடிப்படை வசதிகள் வந்துவிட்டன.

வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான திட்டங்களை பாஜக அறிவிக்காததன் விளைவே தென்னிந்தியாவில் இன்னும் அக்கட்சி கால் பதிக்காததற்கு காரணம். சொல்லப் போனால், பாஜக எதையெல்லாம் வளர்ச்சித் திட்டங்களாக அறிவிக்கிறதோ அதெல்லாம் தென்னிந்தியாவில் ஏற்கனவே இருக்கிறது. 1971லேயே கலைஞர் ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க திட்டம் கொண்டு வந்தார்.

இப்போதுதான் ஒரு சில வட மாநிலங்களில் இத்திட்டம் வந்திருக்கிறது. இது போல் ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
தவிர பாஜக முன்வைக்கும் மதவாதம், தேசியவாதம் ஆகியவை சமூகவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கும் தென்னிந்திய மாநிலங்களில் எடுபடுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...” என்கிறார் இனியவன்.

அன்னம் அரசு