பசுமைத் திருமணம்!



தில்லியைச் சேர்ந்த ஆதித்யா அகர்வால் மற்றும் மாதுரி பலோடி தம்பதியினர், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தங்கள் திருமணத்தை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

திருமண மேடை, நுழைவு வாயில், அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வடிவமைத்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திருந்ததோடு, தனிமனித இடைவெளி பின்பற்ற திருமணத்திற்கு ஒரு சிலரையே அழைத்துள்ளனர். அதுவும் அழைப்பிதழ் அச்சடிக்காமல், நிகழ்ச்சியை விவரிக்கும் செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர் தம்பதியர். 
வந்திருந்த விருந்தினர்களுக்கு இனிப்பு களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திருமணமான தம்பதியினருக்கு உறவினர்கள் கொண்டு வந்த பரிசுகள் கூட கிப்ட் கவர் அல்லாமல் செய்தித்தாளில்தான் மூடப்பட்டிருந்தன.“திருமணம் என்பது மகிழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நிரம்பியது. மகிழ்ச்சிக்கு பணம் தேவையில்லை. மிக ஆரம்பரமாக திருமணங்கள் செய்து பலரும் பணத்தை வீணடிக்கின்றனர்...’’ என்கிறார் மண
மகன்.

பசுமைத் திருமணத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய மணமகள், “நாங்கள் இருவரும் இயற்கைக் காதலர்கள். எங்கள் திருமணத்திற்கு புதிதாக பொருட்களை வாங்குவதற்கு பதிலாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த திட்டமிட்டோம்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல், குறைவாக பணம் செலவழித்து அதிக மகிழ்ச்சி அனுபவிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டோம்.

உறவினர்கள் இதையெல்லாம் கேலி செய்வார்களோ என்கிற பதற்றம் எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால், திருமண நாள் முடிவில், எங்கள் திட்டம் சிறப்பாக முடிந்தது. அனைவரும் எங்களைப் பாராட்டினர்...” என்கிறார்.            

தொகுப்பு: அன்னம் அரசு