பக்லைட்



‘நெட்ஃப்ளிக்ஸி’ன் டாப் 10 டிரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திப் படம் ‘பக்லைட்’.ஓர் இளம் விதவை சந்திக்கும் மன ரீதியான போராட்டங்களும், அந்தப் போராட்டங்களில் இருந்து அவள் எப்படி மீண்டாள் என்பதுமே படத்தின் கதை.சந்தியாவுக்குத் திருமணமான ஐந்து மாதங்களிலேயே அவளுடைய கணவன் ஆஸ்திக் இறந்து விடுகிறான். ஆஸ்திக்கின் சம்பளத்தை நம்பித்தான் அவனுடைய பெற்றோர்கள் இருந்தனர். அத்துடன் வீட்டு லோன் வேறு.

மகனை இழந்த துக்கமும் கடனை எப்படி கட்டப்போகிறோம் என்ற கவலையும் ஒன்றுசேர ஆஸ்திக்கின் பெற்றோர் ரொம்பவே உடைந்துபோகின்றனர். தன் மீது ஆஸ்திக்கிற்கு காதல் இருந்ததாக சந்தியா ஒருபோதும் உணர்ந்ததே இல்லை. அதனால் கணவன் இறந்ததைக் குறித்து அவளுக்கு எந்த துயரமும் இல்லை.

எப்போதும் போல இயல்பாக இருக்கிறாள். துக்க நிகழ்வுகளிலிருந்து விடுபடுவதற்காக ஓர் அறையில் முடங்கிக் கொள்கிறாள்.அவளுக்குத் துணையாக இருப்பதற்காக தோழி ஒருத்தி வருகிறாள். துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் 13 நாள் மரணச் சடங்கு முடியும்வரை ஆஸ்திக்கின் வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு ஆஸ்திக்கிற்கு ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது சந்தியாவுக்குத் தெரிய வருகிறது. ஆஸ்திக் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, ஆஸ்திக்கின் காதலியைச் சந்தித்து சண்டைபோடு கிறாள் சந்தியா. திருமணத்துக்குப் பிறகு ஆஸ்திக்கிற்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று அந்தக் காதலி சொன்னாலும் சந்தியாவால் சமாதானம் ஆக முடியவில்லை. நிலைகுலைந்து போகிறாள்.

அப்போது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிகாரி ஒருவர் ஆஸ்திக்கின் வீட்டுக்கு வருகிறார். ஆஸ்திக் 50 லட்ச ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்ததாகவும், தனக்குப் பிறகு நாமினியாக சந்தியாவை நியமித்திருப்பதாகவும் சொல்லி அவளிடம் காசோலையை ஒப்படைக்கிறார் அந்த அதிகாரி.

முறைப்படி பெற்றோருக்குத்தான் இன்சூரன்ஸ் பணம் சேர வேண்டும் என்று ஆஸ்திக்கின் குடும்பத்தினரும் உறவினர்களும் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்கின்றனர். சந்தியா மட்டும்தான் நாமினி என்று ஒரேயடியாக அதிகாரி சொல்ல, அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.  

இன்னொரு பக்கம் ஆஸ்திக்கின் தம்பியும், துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களில் ஒருவரும் சந்தியாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். இந்நிலையில் அந்தக் காசோலையை சந்தியா என்ன செய்தாள்? மறுமணம் செய்துகொண்டாளா? மீதி வாழ்க்கையை அவள் எப்படி வாழப்போகிறாள்... என்பதே பெண்ணிய திரைக்கதை.

கணவன் இறந்தவுடன் மனைவியுடைய வாழ்க்கை முடிந்துபோவதில்லை. அதற்குப் பிறகும் அவளால் புது வாழ்க்கையைத் தொடங்கி வாழ முடியும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது திரைக்கதை. சந்தியாவாக அசத்தியிருக்கிறார் சான்யா மல்கோத்ரா. படத்தின் இயக்குநர் உமேஷ் பிஸ்ட்.