ஜோஜி



மலையாள சினிமாவிற்கு மேலும் ஒரு மகுடத்தைச் சூட்டியிருக்கிறது, ‘ஜோஜி’.  ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கிறது.ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற படைப்பான ‘மேக்பெத்’தை தழுவியது இந்தப் படத்தின் கதை. ஊரிலேயே பெரும் செல்வந்தர் குட்டப்பன். அவருக்கு ஜோமோன், ஜெய்சன், ஜோஜி என்று மூன்று மகன்கள். குடிப்பழக்கத்தால் விவாகரத்தாகி, தோளுக்கு மேல் வளர்ந்த மகனுடன் அப்பாவின் வீட்டிலேயே வசித்து வருகிறான் ஜோமோன். ஜெய்சனும் தனது மனைவியுடன் அதே வீட்டில் வசிக்கிறான்.

திருமணம் செய்துகொள்ளாமல் அதே வீட்டில் ஒரு சிறிய அறையில் தனது உலகத்தில் மூழ்கிக்கிடக்கிறான் ஜோஜி. பாதியிலேயே படிப்பை விட்டவன். எந்த வேலைக்கும் அவன் போவதில்லை. மகன்கள், சொத்து, தொழில் என எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் குட்டப்பன். அவர் சொல்வதை மட்டுமே மகன்கள் கேட்க வேண்டும். எதிர்த்துக் கூட பேசக்கூடாது. குறிப்பாக ஜோஜியை அவர் ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை.

இந்நிலையில் குட்டப்பன் பக்கவாதத்தால் முடங்கிப்போகிறார். அவர் இறந்தால் சொத்து தங்களது கைக்கு வரும் என்று மகன்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அவர் அறுவை சிகிச்சை மூலம் சக்கர நாற்காலியில் உட்காரும் நிலைக்கு வந்துவிடுகிறார். வீடு திரும்பும் குட்டப்பனை மகன்கள் மூவரும் ஏமாற்றத்துடன் வரவேற்கின்றனர். சக்கர நாற்காலியில் இருந்தபோதும் கூட அதே அதிகாரத்துடன் இருக்கிறார் குட்டப்பன். மகன்கள் சொத்தைக் கேட்கும்போது அதை உதாசீனப்படுத்துகிறார்.

குட்டப்பன் சாப்பிடும் மாத்திரைகளை மாற்றி வைத்து அவரைக் கொன்றுவிடுகிறான் ஜோஜி. இது ஜெய்சனின் மனைவி பின்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பின்சியும் சொத்துக்காக காத்திருப்பதால் ஜோஜிக்கு உறுதுணையாக இருக்கிறாள். உடல்நலமில்லாமல் குட்டப்பன் இறந்துவிட்டதாக வெளி உலகிற்கு ஜோடிக்கப்படுகிறது. நாட்கள் நகர்கிறது. மூன்று மகன்களும் சொத்துகளைப் பிரித்துக்கொள்ள முடிவு செய்கின்றனர்.

இந்நிலையில் அப்பா இறக்கும்போது ஜோஜி வெளியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக ஒரு தகவல் ஜோமோனின் காதுக்கு வருகிறது. அப்பாவின் மரணத்தில் ஜோஜி சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஜோமோனுக்கு வலுக்கிறது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஜோஜி என்ன செய்தான் என்பதே சற்றும் எதிர்பாராத  திரைக்கதை.

ஜோஜி மாதிரியான மனிதர்களின் மீது கவனத்தையும் கனிவையும் கோருகிறது திரைக்கதை. கேரளாவின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது சைஜு காலித்தின் கேமரா. வழக்கம்போல நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ஃபகத் ஃபாசில். அவருடன் போட்டி போட்டு மற்றவர்களும் நடித்திருப்பது சிறப்பு. த்ரில்லிங் உணர்வைக் கூட்டி அசத்துகிறது பின்னணி இசை. ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை அசாதாரணமான திரைக்கதையாக்கியிருக்கிறார் ஸ்யாம் புஸ்கரன். இயக்குநர் திலீஷ் போத்தனுக்கு மற்றுமொரு வெற்றிப் படைப்பு.  

தொகுப்பு: த.சக்திவேல்