பெண்கள் நடத்தும் உணவுச் சந்தை



‘‘நாம் ஆரோக்கியமா இருக்கணும்னா சாப்பிடுற உணவு நல்லாயிருக்கணும். ஆனா, இன்னைக்கு நிறைய உணவுப் பொருட்கள்ல கெமிக்கல் இருக்கிறதால அதுவே உடலில் பலவித நோயை ஏற்படுத்திடுது. இது எதுல போய் முடியும்னு தெரியாது. நமக்குப் பின்னாடி வரக்கூடிய தலைமுறைக்கு உடல் ஆரோக்கியத்தை மட்டுமே நம்மால் தரமுடியும். அதனால, நாங்க ரசாயனம் கலக்காத இயற்கையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை தேடித் தேடி வாங்குறோம்.

இப்படி வாங்கின பொருட்கள் நம்மைச் சுத்தியிருக்கிறவங்களுக்கும் கிடைக்கணும்னு முதல்ல ஒரு ஆர்கானிக் கடையை ஆரம்பிச்சோம். இப்ப அந்த உணவுப் பொருட்களை வழங்கும் உற்பத்தியாளர்களை மக்களுடன் நேரடியா தொடர்பு படுத்த உணவுச் சந்தையை நடத்த ஆரம்பிச்சிருக்கோம்…’’ நிறுத்தி நிதானமாகச் சொல்கிறார்கள் மிர்ராவும், கௌரியும். அதை ஆர்வமாக கவனித்தபடி உற்சாகமாக நிற்கிறார்கள் செங்காவும், உஷாவும், காமினியும், சத்யாவும்.

மதுரை மாநகரில், ‘யாதும் ஹெல்த்தி ஃபுட் மார்க்கெட்’ என்கிற பெயரில் இந்த ஆறு பெண்களும் இணைந்து ஓர் உணவுச் சந்தையை முன்னெடுத்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரியில் முதல் சந்தையும், மார்ச்சில் இரண்டாம் சந்தையும் நடத்தி அசத்தியுள்ளனர். இதில், 23 உற்பத்தியாளர்கள் கடை விரிக்க, அறுநூறு பேர் பார்வையிட்டு தங்களுக்கு வேண்டிய ரசாயனமில்லா இயற்கை உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

‘‘நாங்களும், எங்க கணவர்களும் ஐடியிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வேலை செய்தவங்க. ஆனா, யாரும் வேலை பிடிக்காமல் வெளியில் வரல. எல்லோருமே மாற்றத்தை விரும்பினவங்க. இயற்கை சார்ந்து ஏதாவது பண்ணணும்னு உந்துதல் இருந்தவங்க. ஒருகட்டத்துல எல்லோரும் ஒண்ணு சேர்ந்தோம்.
அதுதான் எங்க ‘யாதும் சமூகம்’. இப்ப சரண்யா, இசைநாயகினு இன்னும் ரெண்டு குடும்பம் எங்க சமூகத்துல இணைஞ்சிருக்காங்க. ஆரம்பத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல இருந்து வேலை செய்தோம். இப்ப எல்லோருமே மதுரைக்கு வந்திட்டோம்…’’ என கௌரி முடிக்க, மிர்ரா தொடர்ந்தார்.

‘‘எங்க ஆறு குடும்பமும் சேர்ந்து தொழில்ரீதியா மூன்று விஷயங்கள் செய்றோம். ஒண்ணு, பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றான துணிப்பை. இதை கௌரி கணவர் கிருஷ்ணனும் என் கணவர் ராமஜெயமும் பார்த்துக்கிறாங்க. ரெண்டாவது பணி பேப்பர் டிசைன் பண்றதும், பேக்கேஜிங் செய்றதும். இதுல பேக்கேஜிங் வேலையை உஷா கணவர் அஸ்வின் செய்றார். அவர் கடந்த பத்தாண்டுகளாகவே சென்னையில் இகோ ஃப்ரண்ட்லி பேக்கேஜிங் செய்திட்டு இருந்தவர். இப்போது மதுரையில் அதைத் தொடர்றார்.

அடுத்து, காமினி கணவர் புருசோத்தமனும், சத்யா கணவர் கோமணி ராஜனும் எல்லாவற்றையும் மொத்தமா ஒருங்கிணைக்கிறாங்க. இதுல செங்கா கணவர் பழனியப்பன்தான் ‘யாதும்’னு பெயர் வச்சவர். அவர் ஏற்கனவே, சென்னையில் மாற்று நிகழ்வுகள் நடத்துவதற்காக இடம் ஒன்றை வச்சிருந்தார். அதுக்கு ‘யாதும்’னு பெயர். அந்தப் பெயரை எடுத்து நாங்க ‘யாதும் சமூகம்’னு மாற்றினோம்.

அடுத்து மூன்றாவதா யாதும் பெயர்ல ஒரு ஆர்கானிக் பலசரக்குக் கடை நடத்துறோம். இதை பெண்கள் எல்லோரும் சேர்ந்து முன்னெடுத்து செய்றோம்.யாதும் பலசரக்கு கான்செப்ட்டை இந்தக் கொரோனா காலத்துலயே தொடங்கினோம். இதுக்கான பொருட்களை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியா பெற்று குடும்பங்களுக்குக் கொடுக்குறோம். இதை கடந்த நாலு வருஷமாவே ெசய்றோம். ஆனா, அப்ப தெரிஞ்ச நண்பர்களுக்கு மட்டும் கொடுத்திட்டு இருந்தோம். இப்ப டோர்டெலிவரியா மாற்றி செய்றோம்.

எங்க யாதும் ஷாப்ல ஏழு வகையான பாரம்பரிய அரிசிகளும், கம்பு, தினை, கேழ்வரகு, சாமை உள்ளிட்ட தானியங்கள்னு எல்லாமே கிடைக்கும். இவற்றையெல்லாம் பல இடங்கள்ல இருந்து தருவிக்கிறோம். அப்புறம், செக்கு எண்ணெய்களை இங்கேயே ஒரு நண்பர்கிட்ட வாங்குறோம். அவங்க வீட்டுல ஒரு செக்கு வச்சு எண்ணெயை ஆட்டி எடுக்குறாங்க.

இதேபோல பால் ஒரு நண்பர் தர்றார். அவரே நெய்யும் காய்ச்சி கொடுக்குறார். டீத் தூள் கேரளாவுல இருந்து வருது. மிளகு மாதிரியான மசாலா ஐட்டங்கள் இடுக்கியில் இருந்து பெறுகிறோம். காய்கறிகள் கொடைக்கானல்ல இருந்து வரும். இப்படி ஒவ்வொரு பொருட்களையும் பார்த்து பார்த்து ரசாயனம் கலக்காத, இயற்கையில் விளைவிக்கப்பட்டதா வாங்குறோம்.

நாங்க ஆரம்பிக்கும்போது 30 கிமீ சுற்றளவுக்குள்ள இருக்கிற உற்பத்தியாளர்களிடம் வாங்கலாம்னுதான் இருந்தோம். ஏன்னா, போக்குவரத்து எளிது, செலவும் குறைவுனு நினைச்சோம். ஆனா, களத்தின் நிலவரம் அப்படியா இருக்கல. அதனால, தமிழ்நாடு, கேரளானு வாங்கிக்கிட்டு இருக்கோம்.  

அதேமாதிரி இந்தப் பொருட்களை முதல்ல எங்க வீடுகள்ல பயன்படுத்துவோம். எங்களுக்கு மனநிறைவா இருந்தா மட்டும்தான் அதை வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கிறோம். அப்புறம் உற்பத்தியாளர்கள்கிட்ட நேரடியா வாங்குறதால அவங்களுக்கும் ஒரு சந்தை உருவாகுது...’’ என யாதும் செயல்பாடுகளை மிர்ரா விரிவாக முடிக்க, கௌரி உணவுச் சந்தை பிறந்த கதைக்குள் வந்தார்.

‘‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற கருத்தாக்கம்தான் இது. அதாவது, நாங்க பொருட்கள் வாங்குற உற்பத்தியாளர்களை மக்களே நேரடியா சந்திச்சு பொருட்களை வாங்க வைக்கிற முயற்சிதான். அதனால, மாசம் ஒரு உணவுச் சந்தை நடத்தலாம்னு முடிவெடுத்தோம். இதனால, இதே அலைவரிசையில் உள்ள புதிய உற்பத்தியாளர்கள் வருவாங்க. தவிர, நல்ல பொருட்களைத் தேடுற புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பாங்க. நிறைய அறிமுகமும் பல்வேறு புதிய விஷயங்களும் கிடைக்கும்னு நினைச்சோம்.

அப்புறம், இதனுடன் ஆரோக்கியமான விஷயங்களைப் பத்தி பேசுறதுனு முடிவெடுத்தோம். எங்க சந்தையின் அமைப்பே பொருட்கள் விற்பனை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் நல்ல விஷயங்களைப் பேசுறது மாக இருக்கும். இப்ப முதல் சந்தையில் பத்து தலைப்பு வச்சிருந்தோம். உதாரணத்துக்கு, மதுரையில் இயற்கை சம்பந்தமா ஆர்வம் உள்ளவரை அழைச்சோம். அதன்பிறகு அதைப் பத்தின விவாதம் நடத்தினோம். ஒவ்வொருத்தரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகிட்டாங்க.

அடுத்து, மதுரையைச் சுத்தி இருக்கிற இடங்கள் பத்தியும், கலை சார்ந்து மதுரையை எப்படி பார்க்கிறாங்க என்பது பத்தியும் பேசினாங்க.அப்புறம், மாற்றுக் கல்வி சம்பந்தமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு விவாதம் நடந்தது. இப்படியா முதல் சந்தை சிறப்பா முடிஞ்சது.

ெரண்டாவது சந்தையில் நாட்டு நாய்களை அறிமுகப்படுத்தினோம். அதுல கலந்துகிட்டவங்க நாய்கள் பத்தின விஷயங்களை நிறைய தெரிஞ்சுகிட்டாங்க. இதில் கலந்துகிட்ட ஒருத்தர் தெருவில் அடிபட்ட நாய்களைத் தத்தெடுத்து வளர்ப்பவர். அவர் சந்தைக்கு ரெண்டு நாய்களை எடுத்திட்டு வந்திருந்தார். அதை அங்கிருந்த ஒருவர் தத்ெதடுத்துக் கொண்டார்.

அப்புறம், உணவுப் பொருட்கள் அல்லாமல், ரசாயனம் கலக்காத, சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் இந்தச் சந்தையில் கலந்துகிட்டாங்க. உதாரணத்துக்கு, ஈரோட்டிலிருந்து கைத்தறி ஆடை உற்பத்தியாளர் ஒருவர் கலந்துகிட்டார். இப்படியானவர்களும் வரும்போது சந்தை இன்னும் சிறப்பானதா மாறுது. நாங்களும் இப்படியான மக்களைத்தான் அழைக்கிறோம்.

அதாவது, நேர்மறையான எண்ணமுள்ள உற்சாகமான மக்களையே விரும்புறோம். ஏன்னா, பாசிட்டிவ் எனர்ஜி நம்மை மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவங்களையும் நல்லெண்ணத்துடன் வச்சிருக்கும்.அப்புறம், சந்தைக்கு வர்ற உற்பத்தியாளர்களை முதலிலேயே அடையாளப்படுத்திடுறோம். ஏன்னா, ஒரே பொருளை ரெண்டு பேர் கொண்டு வந்து சிக்கலாகிடக் கூடாது. அதனால, முன்கூட்டியே பதிவு செய்திட சொல்லிடுவோம்.
இப்ப ரெண்டு சந்தையை சிறப்பா நடத்தி முடிச்சிருக்கோம்.

அடுத்த சந்தையை இந்த மாசம் நடத்த இருக்கோம். அதுக்கான பணிகள் நடந்திட்டு இருக்குது. ஒருவேளை கொரோனாவால் சில நிபந்தனைகள் வந்தால் திட்டம் மாறும். ஆனா, அதன் பிறகு எங்க செயல்பாடுகள் தொடரும்…’’ என்கிறார் கெளரி.

‘‘எங்களைப் பொறுத்தவரை எவ்வளவுக்கு எவ்வளவு ரசாயனம் கலக்காத உணவுப் பொருட்கள் கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கொடுக்க முயற்சி செய்றோம். மக்களும் இயற்கை உணவுப் பொருட்களைத் தேடி வரணும்னு ஆசைப்படுறோம். அது காலத்தின் தேவையாகவும் இருக்கு. அப்பதான் எதிர்காலத் தலைமுறையை சிறப்பானதா உருவாக்க முடியும்…’’ - அழுத்தமாகச் சொல்கிறார்கள் இந்த யாதும் சமூகப் பெண்கள்.

பேராச்சி கண்ணன்