இடஒதுக்கீட்டுக்கு ஆப்பு வைப்பவர்களுக்கா உங்கள் ஓட்டு..?



‘‘இடஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்...’’ என்று மராத்திய இட ஒதுக்கீடு குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கை பாதிக்குமா... குறிப்பாக தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டிற்குச் சிக்கல் வருமா... போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கான விடைகளை சொல்கிறார் தொடக்க காலம் முதல் இடஒதுக்கீடு தொடர்பான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவரும், மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து  அய்யாவின் அணுக்கத் தொண்டருமான முனைவர் முத்தமிழ்.

இவர் பெரியாரியல் அறிஞர், தோழர் வே.ஆனைமுத்து பதிப்பித்த ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ நூல் தொகுப்புப் பணியில் அவரோடு முழுமையாகப் பணியாற்றியதோடு, அவரது எல்லா வெளியீடுகளுக்கும் துணைநின்று வருபவர்.

இடஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்கள் என்ன..?

இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்போது அந்தத்துறை மத்திய பட்டியலில் உள்ளதா, மாநிலப்பட்டியலில் உள்ளதா, பொதுப்பட்டியல் என்னும் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதா என்பதைப் பொறுத்தே சிக்கல்கள் அமையும்.  தமிழ்நாட்டு அரசு வேலைகளில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை எதிர்த்துத் தனியாக இதுவரை எந்த வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் விளைவாகத்தான் தொடர்ந்து இடஒதுக்கீட்டில் சிக்கல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து ஒத்திசைவுப் பட்டியல் என்னும் பொதுப்பட்டியல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருக்கும் கல்வி உள்ளிட்ட உரிமைகள் அனைத்தையும் போராடித் திரும்பப் பெறுவதுதான் இதற்குத் தீர்வாக அமையும்.எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

ஒரு குறிப்பிட்ட சாதியினரே எல்லா வாய்ப்புகளையும் பெற்று வருவதை எதிர்த்து, எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்கிற மக்கள் நாயகக் கொள்கையில் முகிழ்த்ததே இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக் கொள்கை. கல்வியில், வேலையில், சமூகத்தில், வாழ்வியலில் சீரான சமநிலை ஏற்படுகிற வரை இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சரியானதா?

26.01.1950ல் நடப்புக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கு வழி சொல்கிற விதி 15(4), 16(4) ஆகியவையோ அல்லது வேறெங்கிலுமோ பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே முரணானது. இடஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக்கூடாது என்று கூறும் நீதிபதிகள், முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு என்று வரும்போது மவுன சாமியார்களாக இருப்பது ஏன்? அவர்கள் கூற்றுப்படியே அது 60% விழுக்காடாக மாறிவிடாதா?இடஒதுக்கீடு அடிப்படை உரிமையா?

இந்தியக் குடிமக்கள் எவரும் தாங்களே விரும்பி எந்த வருண சாதியிலும் பிறக்கவில்லை. அவர்கள் பிறந்த பிறகே அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அந்தச் சாதி என்ன என்பதை அவர்கள் அறிகிறார்கள். இச்சாதியை அரசமைப்புச் சட்டமே பாதுகாக்கிறது. சாதியைப் பாதுகாக்கிற ஒரு பிரிவான இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 372(3) என்னும் பிரிவைத்தான் தந்தை பெரியார் 1957ல் எரித்தார். 3000 தமிழர்கள் எரித்துத் தண்டனை பெற்றனர். ஆக, பிறப்பினடிப்படையில் அமைந்த சாதி இழிவைப் போக்குவதற்கான ஏற்பாடான இடஒதுக்கீடு என்பது பிறப்புரிமையாகத்தானே இருக்கமுடியும்..?உள்சாதிகள் குறித்து..?  

பட்டியலினத்தைப் பொறுத்தவரை, அண்ணல் அம்பேத்கரால் 1935ல் அடையாளம் காணப்பட்ட தீண்டப்படாத உள்சாதிகள், 429. 1950ல், இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது 689 உள்சாதிகள் சேர்க்கப்பட்டு 1108 ஆகியது. 2012ல் கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்கள் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் 11 உள்சாதிகள் 21.05.2012ல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, 24.08.2013ல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

அதனடிப்படையில் இப்போது இந்திய அளவில் பட்டியல் சாதிகள் எண்ணிக்கை, 1129. இவை அனைத்துக்கும் சேர்த்துத்தான் இந்திய அளவில் 15% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதைப்போலவே, தந்தை பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 30.03.1955ல் அளித்த அறிக்கையின்படி இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட உள்சாதிகள் எண்ணிக்கை, 2399; இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட உள்சாதிகள், 839.

அப்போதே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற ஒரு தனி வகுப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நேரு அமைச்சரவை இந்த அறிக்கையையே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதால் இக்கோரிக்கை முகிழ்த்தெழவில்லை.தோழர் வே. ஆனைமுத்து 1978 முதல் இந்திய அளவில் மேற்கொண்ட தொடர் முயற்சிகளாலும், போராட்டங்களாலும் 01.01.1979ல் அமைக்கப்பட்டு, 31.12.1980ல் அன்றைய பிரதமதர் இந்திரா காந்தியிடம் கையளிக்கப்பட்ட பி.பி. மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட உள்சாதிகள், 3743.

1999 - 2004ல் ஆட்சியிலிருந்த வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு 600 உள்சாதிகளை இப்பட்டியலில் சேர்த்தது. 2006ல், காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட உள்சாதிகளின் எண்ணிக்கை 5013 ஆக உயர்ந்தது. இந்த 5013 உள்சாதிகளுக்கும் சேர்த்துத்தான் மொத்த 27% இடஒதுக்கீடு அரைகுறையாக நிறைவேற்றப்படுகிறது.

ஆக, இதர பிற்படுத்தப்பட்டோர் என்கிற வகுப்புக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப முதலில் 57% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அதற்குள் சில பகுப்புகளைச் செய்து உள் வகுப்புகளை உருவாக்கி அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வழங்குவதும்; அதைப்போலவே, பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடியின வகுப்புகளிலும் உள் வகுப்புகளை உருவாக்கிப் பங்கீடு அளிப்பதுதான் முறையான மக்கள் நாயகப் பங்கீடாக அமையமுடியும்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்ட பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் எந்தளவு உயர்ந்துள்ளது?

இடஒதுக்கீடும், மண்டல் குழு பரிந்துரைகளும் அரசுக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மட்டும் நடைமுறைக்கு வந்த பிறகு மூன்றாம், நான்காம் நிலைப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் ஓரளவுக்குப் பயன்பெற்றுள்ளனர் என்பது உண்மை. ஆனால், அதிகாரம் வாய்ந்த பதவிகளான இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS) உள்ளிட்ட இந்தியாவை உண்மையாக ஆளுகிற அதிகாரப் பணிகளிலும், இந்திய அரசின் அரசியல், பொருளியல், சமூகவியல் கொள்கைகளை வகுக்கிற பணிகளிலும், இந்திய வரவு - செலவுத் திட்டங்களில் கல்வி - ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிகளில் 80 விழுக்காட்டுக்கு மேல் பெற்று கல்விக் கட்டமைப்புகளில் உயர்ந்து நிற்கும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இப்போதும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முற்றாகப் புறந்தள்ளப்படுகிறார்கள்.

அங்கு தகுதி என்கிற ஒரு ஏமாற்றுச் சொல்லை வைத்துக்கொண்டு இவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமையான இடங்களே மறுக்கப்பட்டுள்ளன என்பதைப் பல நேரங்களில் இந்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. மண்டல் பரிந்துரைகள் என்பது நூற்றுக்கும் மேற்பட்டவை. அதில் இரண்டு பரிந்துரைகளைக்கூட நாற்பதாண்டுகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்திய நீதி - நிர்வாகத் துறைக்கும் அவமானம்.

இந்தத் தீர்ப்பு வருகிற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?கட்டாயம் எதிரொலிக்கப்படவேண்டும். மக்கள் தங்கள் இனம், மொழி, மண், சமூக உரிமைகளைப் பாதுகாக்க அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது தக்க பாடம் புகட்டுவதாகத் தேர்தல்கள் அமையவேண்டும். அதற்கு வெகுமக்களாக இருக்கிற 85% ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் படுத்த வேண்டும்.

நிரந்தரத் தீர்வுதான் என்ன?

இந்தியாவில், மத்திய - மாநில அரசுகளின் கல்வி, வேலை, தொழில், வணிகம், கடன் என எல்லாத் துறைகளிலும், அதைப்போலவே எல்லா தனியார் துறை நிறுவனங்களிலும் இந்து - இஸ்லாமியர் - கிறித்தவர் - பவுத்தர் - சீக்கியர் என எல்லா மதங்களையும் சார்ந்த 1) முற்பட்ட வகுப்பினர், 2) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 3) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 4) பட்டியல் வகுப்பினர், 5) பட்டியல் பழங்குடியினர் ஆகிய ஐந்து வகுப்புகளுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப சமமான எண்ணிக்கையில் விகிதாசார அடிப்படையில் பங்கீடு அளிப்பதே நேரிய தீர்வாகும்.=

அன்னம் அரசு