திக்... திக்... திரில்லிங்வித்தி யாசமான கிரைம், திரில்லிங் படங்களைப் பார்க்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காகவே ‘நெட்ஃப்ளிக்ஸி’ல் இறங்கியிருக்கிறது ‘கோலேட்டரல்’ என்ற ஆங்கிலப் படம். ஜென்டில்மேன் என்று நினைத்து ஒரு ஹிட்மேனை காரில் ஏற்றிய டாக்ஸி டிரைவரின் போராட்டமே இந்தப் படம்.

லாஸ் ஏஞ்சலஸில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி இளைஞன் மேக்ஸ். வாடிக்கையாளர்களிடம் நேர்மையாக, நண்பனைப் போல நடந்துகொள்பவன். கையில் கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு பிசினஸ் செய்யலாம் என்ற திட்டத்தில் இருக்கிறான். ஓர் அதிகாரியை இறக்கிவிட்டு ஆசுவாசும் அடைவதற்குள் டிப்டாப்பாக உடை அணிந்த வின்சென்ட், மேக்ஸின் காரில் ஏறுகிறான். ஜென்டில் மேன் போல காட்சியளித்த வின்சென்ட்டின் மீது எந்த சந்தேகமும் மேக்ஸிற்கு ஏற்படுவதில்லை. மகிழ்ச்சியுடன் காரை எடுக்கிறான்.

கடுமையான டிராஃபிக் நடுவில் லாவகமாக கார் ஓட்டும் மேக்ஸை, வின்சென்ட்டிற்கு பிடித்துப்போகிறது. ‘ஒரு பிசினஸ் விஷயமாக லாஸ் ஏஞ்சலஸ் வந்திருக்கிறேன். இரவு முழுவதும் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். அதற்கு உன் உதவி தேவை’ என்று மேக்ஸிடம் சொல்கிறான் வின்சென்ட்.

இரவு முழுவதும் கார் ஓட்டும் திட்டம் இல்லாததால் ஆரம்பத்தில் மறுக்கிறான் மேக்ஸ். 600 டாலர்கள் தருவதாக வின்சென்ட் சொல்கிறான். பிசினஸ் செய்ய உதவும் என்று வின்சென்ட்டின் பேரத்துக்கு ஒப்புக்கொள்கிறான் மேக்ஸ்.

பயணம் ஆரம்பமாகிறது. ஓர் இடத்தில் வின்சென்ட்டை இறக்கிவிட்டு, அவன் திரும்பும் வரை காரிலேயே காத்திருக்கிறான் மேக்ஸ். வின்சென்ட் சென்ற சில நிமிடங்களில் மாடியிலிருந்து ஒரு பிணம் மேக்ஸின் கார் மேல் விழுகிறது.  அப்போது அங்கே வரும் வின்சென்ட், ‘நான்தான் அவனைக் கொன்றேன். பிணத்தை காரின் டிக்கியில் வை. இன்னும் சிலரைக் கொல்ல வேண்டும்’ என்று அதிகாரத்துடன் சொல்கிறான். அதிர்ச்சியில் உறைந்து போகிறான் மேக்ஸ். வேறு வழியின்றி வின்சென்ட் சொல்வதை எல்லாம் கேட்கிறான்.

பணத்துக்காக கொலை செய்யும் ஹிட்மேனான வின்சென்ட்டிற்கு ஒரு பணயக் கைதி போல ஆகிறான் மேக்ஸ். அந்த இரவில் இன்னும் ஐந்து பேரைக் கொலை செய்யப் போவதாகச் சொல்கிறான். மீண்டும் மேக்ஸ் - வின்சென்ட்டின் பயணம் ஆரம்பிக்கிறது. வின்சென்ட் எப்படி தன் திட்டத்தை நிறைவேற்றினான்... வின்சென்ட்டிடம் மாட்டிக்கொண்ட மேக்ஸ் எப்படி தப்பிக்கிறான்... என்பதே திக்... திக்... திரில்லிங் திரைக்கதை.

இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது கதை. கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் ஜெட் வேகத்தில் பறக்கிறது திரைக்கதை. வின்சென்ட்டாக டாம் க்ரூஸும் மேக்ஸாக ஜேமி ஃபாக்ஸும் அதகளப்படுத்தியிருக்கின்றனர். என்றென்றும் மறக்க முடியாத ஒரு திரில்லிங் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் மான்.

தொகுப்பு: த.சக்திவேல்