Family Tree-15 தலைமுறைகளாக ஓட்ஸ் தயாரிக்கும் நிறுவனம்!



முன்பு ஐரோப்பியர்களால் மட்டுமே விரும்பி உண்ணப்படும் ஓர் உணவாக இருந்த ஓட்ஸ், இன்று உலகின் முக்கிய காலை உணவாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சமைக்கத் தேவையில்லாத அதன் செயல்முறையும், ஊட்டச்சத்துமே இதற்குக் காரணம். ஆனால், ஓட்ஸ் பிரபலமாக இன்னொரு காரணமும் இருக்கிறது. அதன் பெயர், ‘மோர்ன்ஃப்ளேக்’.

ஓட்ஸில் இருக்கும் சிறப்பம்சங்களை உலகுக்கு வெளிப்படுத்தி அதை முக்கிய உணவுப்பொருளாக மாற்றிய நிறுவனம் இது. 346 வருடங்களாக ஓட்ஸ் தயாரிப்பில் இயங்கிவரும் குடும்ப நிறுவனமும் கூட.  இங்கிலாந்தைச் சேர்ந்த இந்நிறுவனம் சர்வதேச அளவில் உணவின் தரத்துக்காக ஐம்பதுக்கு மேற்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறது. கால்நடைகளுக்குத் தீனியாக இருந்த ஓட்ஸை மனிதனுக்கு உகந்த உணவாக பரிணமிக்க வைத்ததும் ‘மோர்ன்ஃப்ளேக்’தான்.

*வில்லியம் லீ

பதினேழாம் நூற்றாண்டின் மத்திய வருடங்கள். இங்கிலாந்தில் போக்குவரத்துக்காகவும் சுமை தூக்கவும் குதிரைகளைப் பயன்படுத்தி வந்த காலம் அது. குதிரைகளை நம்பி வில்லியம் லீயின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் மனிதர்கள் கொடுக்கும் வேலைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தன்னுடைய குதிரைகள் சோர்வடைவதைக் கண்டு வருந்தமடைந்தார் வில்லியம் லீ.

குதிரைகளின் சோர்வுக்கான காரணத்தை அருகிலிருந்து கண்காணித்து, இறுதியாக ஓர் உண்மையைக் கண்டறிந்தார். ஆம்; வேலை செய்யும் அளவுக்கு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள தீவனம் குதிரைகளுக்குக்  கிடைப்பதில்லை என்பதுதான் அந்த உண்மை.இரவு, பகல் பாராமல் மூளையைக் கசக்கி குதிரைகள் வலிமையுடன் இருப்பதற்காக அவர் கண்டுபிடித்த ஒரு தீவனம்தான் ஓட்ஸ்.

ஆரம்ப நாட்களில் ஓட்ஸை அரைப்பதற்காகக் காற்று மற்றும் தண்ணீரின் மூலமாக சுழலும் சக்கரங்களைப் பயன்படுத்தினார். லீ தயாரித்த ஓட்ஸை சாப்பிட்ட குதிரைகள் மற்ற குதிரைகளைவிட சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இயங்கின. லீ நினைத்த விஷயம் நடந்ததால் உற்சாகத்துடன் ஓட்ஸை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். இங்கிலாந்தில் குதிரைகள் மட்டுமல்லாமல் கால்நடைகளின் முக்கியமான தீவனமாக ஓட்ஸ் பரிணமித்தது.

நாலாப்பக்கமும் ஓட்ஸின் தேவை அதிகரிக்க, இங்கிலாந்தில் உள்ள செஷையர் கவுண்டியில் 1675ம் வருடம் ‘மோர்ன்ஃப்ளேக்’ நிறுவனத்துக்கு அடித்தளமிட்டார் வில்லியம் லீ. ஓட்ஸ் தயாரிக்க சுழலும் சக்கரம் இருக்கும் சிறு அறைதான் நிறுவனத்தின் தலைமையகம். நம்முடைய தொழில் சிறப்பாக வளர வேண்டுமானால் நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற தொழில்களும் வளர்வதற்கு நாம் பங்களிக்க வேண்டும் என்பது வில்லியமின் தொழில் கொள்கை.

அதனால் ஓட்ஸுக்குத் தேவையான தானியங்களை உள்ளூர் விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்தார். வேலைக்கும் செஷையரில் வாழும் ஆட்களை மட்டுமே நியமித்தார். இவருக்குப்பின் வந்த சந்ததிகள் நிறுவனத்தைப் பல மடங்கு முன்னேற்றி விட்டாலும் கூட வில்லியமின் கொள்கைகளைப் பின்பற்றத் தவறுவதில்லை.

வில்லியமிற்குப் பிறகு அவரது மகன் ஜான் லீயின் கைக்கு நிர்வாகம் வந்தது. இவருக்குப் பின் வந்த தலைமுறைகளும் கால்நடை தீவனத்தில் மட்டுமே கவனம் செலுத்தின. அடுத்த 200 ஆண்டுகள் கால்நடைகளுக்கான ஓட்ஸ் தயாரிப்பதில் ஜாம்பவனாக திகழ்ந்தது ‘மோர்ன்ஃப்ளேக்’.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி மூலம் ஓட்ஸைத் தயாரிக்க, உற்பத்தி பெருகியது. ஓட்ஸின் தரமும் சுவையும் கூடின.
போக்குவரத்துக்கும் சுமைகளைத் தூக்கவும் மோட்டார் வாகனங்கள் வர, குதிரைகளின் தேவை குறைந்தன. கால்நடைக்கான தீவனத்தை நம்பி நிறுவனம் தொடர்ந்து இயங்க முடியாத சூழல்.

இந்நிலையில் காலத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை அப்டேட் செய்துகொண்டது ‘மோர்ன்ஃப்ளேக்’. ஆம்; மனிதர்களின் காலை உணவைச் சிறப்பிக்கும் விதமான ஓட்ஸை தயாரிக்க ஆரம்பித்தது. இது ஒரு பரிசோதனை முயற்சி தான். சோதனை மாபெரும் வெற்றி கண்டதால் இன்றும் நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிறது.நீராவி மூலம் மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஓட்ஸை வேகமாக உற்பத்தி செய்ய முடியவில்லை. மின்சாரத்தின் வருகை ‘மோர்ன்ஃப்ளேக்’கிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓட்ஸை வேகமாகத் தயாரிக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய இயந்திரத்தை பிரத்யேகமாக வடிவமைத்தது. இப்போது அந்த இயந்திரங்கள் வெகு நவீனமாகிவிட்டன. அந்த இயந்திரங்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தைக் காற்றலை மற்றும் சோலார் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்ந்துவிட்டது ‘மோர்ன்ஃப்ளேக்’.

*பிலிப் லீ

இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப நாட்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் பாதுகாப் பான இடத்தைத் தேடி மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். உணவும் தண்ணீரும் கூட கிடைக்காத நெருக்கடியான சூழல். இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த ஒவ்வொரு இளைஞனையும் போரில் பங்கேற்க அழைத்துக்கொண்டிருந்தது அரசு. காரணம், போர்வீரர்கள் பற்றாக்குறை.

இங்கிலாந்து இளைஞர்களும் போரில் பங்கேற்று தேசத்தைப் பாதுகாக்க ஆயத்தமாக இருந்தனர். குறிப்பாக விமானப்படையில் சேர்ந்து நாட்டுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தார் ‘மோர்ன்ஃப்ளேக்’கின் நிர்வாகியான பிலிப் லீ. போரில் பத்து பேரை எதிர்த்து சண்டையிடும் ஆற்றல், அஜானுபாகுவான தோற்றமிருந்தும் பிலிப் லீயின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது இங்கிலாந்து அரசு.

‘‘நீயும் போருக்கு வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கு யார் உணவளிப்பது? போய். உன்னுடைய வேலையைப் பார். போரைவிட மக்களுக்கு உணவு தயாரிப்பது ரொம்பவே முக்கியமானது...’’ என்று லீக்கு அரசு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியது வரலாறு. போர்க் காலத்தில் அரசிடம் சிறப்பு அனுமதி வாங்கி ஓட்ஸ் தயாரிப்பதற்காக குரூவ் என்ற இடத்தில் நிறுவனத்தை விரிவுபடுத்தினார். அந்த இடத்தில்தான் இப்போதும் நிறுவனம் இயங்கிவருகிறது.

இயற்கையாகவே அதிக நார்ச்சத்தும் பி வைட்டமினும் கொண்ட உணவு ஓட்ஸ். தவிர, இரத்தத்தில் கலக்கும் கொழுப்பின் அளவையும் கட்டுப்
படுத்துகிறது. போர்க் காலத்தில்தான் ஓட்ஸின் இந்த அருமையை உணர்ந்தது இங்கிலாந்து அரசு. அதனால் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் போர்வீரர்களின் உணவாக மாறியது ஓட்ஸ். மட்டுமல்ல, இரண்டாம் உலகப்போரின் நாட்களில் இங்கிலாந் தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் முக்கிய உணவே ‘மோர்ன்ஃப்ளேக்’கின் ஓட்ஸ்தான்.

இந்த நெருக்கடியான சூழலில் லாப நோக்கமில்லாமல் பிலிப் லீ இயங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய கொரோனா லாக்டவுனில் பசியில் வாடிய பலருக்கு உணவளித்து பிலிப் லீயைக் கவுரவப்படுத்தியிருக்கிறது ‘மோர்ன்ஃப்ளேக்’.

*தயாரிப்புகள்

ஜம்போ ஓட்ஸ், ஓட்ப்ரான், சூப்பர் ஃபாஸ்ட் ஓட்ஸ், ஆர்கானிக் ஓட்ஸ், முசிலி, ஓட் கிரானோலா, ஓட் மீல் என அனைத்து வகையான ஓட்ஸ்கள்.

*முக்கிய நிகழ்வுகள்

250 வருடங்களாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகளின் மூலம் ஓட்ஸ் டெலிவரி செய்யப்பட்டது. 1922ம் வருடம் ஓட்ஸை மோட்டார் காரில் டெலிவரி செய்ய ஆரம்பித்தனர். பல வருடங்களாக  நிறுவனத்திலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். ஓட்ஸ் விற்பனை செய்வதற்காக 1945ம் வருடம் பிரத்யேகமாக ஒரு கடை திறக்கப்பட்டது.

பிசினஸை விரிவாக்கும் நோக்கில் 1956ம் வருடம் மார்க்கெட்டிங் துறை ஆரம்பிக்கப்பட்டது. முதல் முறையாக 1958ல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கியது. இன்று அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா உட்பட 62 நாடுகளில் ‘மோர்ன்ஃப்ளேக்’ ஓட்ஸ் ஏற்றுமதியாகிறது.
‘மோர்ன்ஃப்ளேக்’ ஓட்ஸின் முதல் விளம்பரம் 1960ம் வருடம் இங்கிலாந்தின் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பாகியது.

சாக்லேட் கலந்த ஓட்ஸ் 1980ல் அறிமுகமானது. இன்று மேற்கத்திய நாடுகளில் வாழும் குழந்தைகளின் விருப்ப உணவே சாக்லேட் ஓட்ஸ்தான். 1990ம் வருடம் மிருதுவான ஓட்ஸையும், 2015ல் குளூட்டன் இல்லாத ஓட்ஸையும் அறிமுகம் செய்து புது வரலாறு படைத்தது.

*தனித்துவம்

பொதுவாக உணவுத்துறை சார்ந்த நிறுவனங்களில் உற்பத்தியின்போது வெளியாகும் கழிவு களும் வீணாகும் குப்பைகளும் அதிகம். மறுசுழற்சி செய்த பிறகும் கூட குப்பைகளின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், ‘மோர்ன்ஃப்ளேக்’கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு, குப்பைகளின் அளவு வெறும் 0.01 சதவீதம் மட்டுமே. இதையும் கூட கால்நடைகளுக்கான தீவனமாக உருமாற்றுகிறது ‘மோர்ன்ஃப்ளேக்’.

இப்போது ஓட்ஸுக்குத் தேவையான மூல தானியங்களை உற்பத்தி செய்வதற்காக இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸில் விவசாயம் நடக்கிறது. இருந்தாலும் உள்ளூர் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வதை கைவிடவில்லை. அத்துடன் நிலத்துக்கு உகந்த மாதிரி சிறந்த தானிய விதைகளைப் பயிரிடுவதற்கான ஆலோசனை களையும் விவசாயிகளுக்கு வழங்குவருகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் நல்லுறவு பாதுகாக்கப்படுகிறது.

*இன்று

இயற்கை விவசாயத்தில் விளைந்த தானியங்களைக் கொண்டு பிரசித்திபெற்ற காலை உணவுகளைத் தயாரிக்கும் ‘மார்னிங் ஃபுட்ஸ்’ என்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனமாக  வளர்ந்துவிட்டது. இதன் துணை நிறுவனமாக இயங்கிவருகிறது ‘மோர்ன்ஃப்ளேக்’.

கொரோனா காலத்திலும் உற்பத்தி பாதிக்கவில்லை. டெலிவரி மட்டுமே கொஞ்சம் தாமதமானது. இப்போது எல்லாமே சரியாகிவிட்டது. 15ம் தலைமுறையைச் சேர்ந்த ஜான் லீ தனது மகன்கள் ஜேம்ஸ் மற்றும் எட்வர்ட்டுடன் இணைந்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். 2019ம் வருடத்தின் ஆண்டு வருமானம் சுமார் 116 கோடி ரூபாய்.

த.சக்திவேல்