3 முறை குரூப் 2 தேர்வு... 4 முறை வங்கித் தேர்வு...5 முறை ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு...



3முறை குரூப் 2 தேர்வு 4 முறை வங்கித் தேர்வு...5 முறை ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு...

அனைத்திலும் வென்றவர் இப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தொழில் முனைவோராக மாறியிருக்கிறார்!

ஒரு கிராமத்துப் பெண்ணின் வெற்றிக் கதை


ஆம். மூன்று முறை குரூப்-2 தேர்விலும், நான்கு முறை வங்கித் தேர்விலும், ஐந்து முறை ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்விலும் வென்றவர் செந்தமிழ் விஜயன். இருந்தும் அரசுப் பணியைக் கையிலெடுக்கவில்லை இவர். மாறாக, அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை வளர்த்தெடுப்பதே முக்கியமெனக் கருதி அதனைத் தவிர்த்துவிட்டு இன்று ஒரு தொழில் முனைவோராக மாறியிருக்கிறார்.

தனியொருத்தியாக சென்னை வில்லிவாக்கத்தில் ‘பாரதி அகடமி’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செந்தமிழ் விஜயனின் குறிக்கோள் இரண்டே இரண்டுதான். ஒன்று, அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிப்பை முடித்த மாணவ - மாணவிகளுக்கு அரசுப் பணி தேர்வுகளுக்கும், படிக்கும் மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி கொடுப்பது.

இரண்டாவது, அனைத்து வழி பள்ளி மாணவ - மாணவிகளுக்கும் கல்வியை புரிந்து படிப்பதற்கான பயிற்சியை வழங்குவது. அதனை நோக்கியே தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார் இந்த இளம் பெண். ‘‘என்னுடைய கனவே ஐஏஎஸ் ஆகுறதுதான். அதுக்காகத்தான் பயிற்சி நிறுவனத்துல சேர்ந்து படிச்சேன். ஆனா, என்னைய மாதிரி கஷ்டப்படுறவங்கள பார்த்தப்ப ஐஏஎஸ் ஆகி செய்றவதைவிட அகடமி ஆரம்பிச்சு செய்றதுதான் முக்கியம்னு பட்டுச்சு…’’ சிரித்தபடியே பேச ஆரம்பித்தார் செந்தமிழ் விஜயன்.

‘‘சொந்த ஊர் மதுரை பக்கத்துல இருக்குற அரிட்டாபட்டி கிராமம். அப்பா விஜயன், நான் அஞ்சு வயசு இருக்கும்போதே இறந்திட்டார். எனக்கு எல்லாமே அம்மா மணிமேகலைதான். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. தமிழ்வழியில் அரசுப் பள்ளியில் படிச்சேன். நிறைய வாசிப்பேன். அப்ப என்னுடைய கனவு ஒரு பத்திரிகையாளரா ஆகணும்னு இருந்தது. பிறகு, பத்தாம் வகுப்புல நல்ல மதிப்பெண் வாங்கினேன்.

அந்நேரம், என்னுடைய இயற்பியல் டீச்சர் உமாதேவி மார்க்‌ஷீட்டை காட்டினாங்க. அதுல தேர்வுத்துறை இயக்குநர் கையெழுத்துல செந்தமிழ்ச்செல்வி
ஐஏஎஸ்னு இருந்துச்சு. என் பெயரும் செந்தமிழ்ச்செல்விதான். இப்ப அப்பா பெயரை சேர்ப்பதற்காக செந்தமிழ் விஜயன்னு மாத்திக்கிட்டேன். அப்ப டீச்சர், ‘இதுமாதிரி உன் பெயரும் ஒருநாள் வரணும்’னு சொன்னாங்க.

பிறகு, பிளஸ் டூவிலும் நல்ல மதிப்பெண் வாங்கினேன். அப்ப நுழைவுத் தேர்வெல்லாம் கிடையாது. மருத்துவம் படிக்க வாய்ப்பு அமைஞ்சது. ஆனா, செலவுக்கு பயந்து பி.ெடக் சேர்ந்தேன். தமிழ்வழியில் படிச்சு வந்ததால காலேஜ்ல ஆங்கிலத்தைக் கண்டு பயந்தேன். ஆனா, விடாமல் படிச்சு என் கிராமத்தின் முதல் பொறியியல் பட்டதாரியானேன்.

அப்புறம், கேம்பஸ் இன்டர்வியூல தேர்வானேன். ஐடி கம்பெனி, ஐந்து இலக்க சம்பளம்னு வாழ்க்கை சிறப்பா மாறுச்சு. அம்மாவை நல்லபடியா வச்சுக் காப்பாத்தணும்னு நினைச்சேன். ஆனா, ‘மாற்றம் ஒண்ணுதான் மாறாதது. மத்த எல்லாம் மாறும்’னு சொல்வாங்கல்ல, அதுமாதிரி என் வாழ்க்கையிலும் மாற்றம் நிகழ்ந்துச்சு...’’ என்கிறவர், அகடமி ஆரம்பித்த கதையைச் சொன்னார். ‘‘‘நல்ல வேலைக்குப் போறா. கல்யாணம் பண்ணி வச்சிடு’னு அம்மாவுக்கு உறவுகள்கிட்ட இருந்து அழுத்தம். நான் என்ன செய்றதுனு தெரியாமல் நின்னேன்.

அப்ப எங்கள் குடும்ப நண்பர் சக்திவேல் ஐயா, ‘நீ போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. உனக்கு பிடிச்சதை செய்’னு தைரியப்படுத்தி சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகடமியில் சேர்த்துவிட்டார். அப்பதான் என்னுடைய ஐஏஎஸ் கனவு விருட்சமா வளர ஆரம்பிச்சது. வேலையைவிட்டு முழுமூச்சா படிச்சேன். ஆனா, சாப்பாட்டுக்கும், தங்குவதற்கும் பணம் வேணுமே… அதனால, அகடமியில் கிளாஸ் எடுத்திட்டே படிக்கச் சொல்லி சங்கர் சார் சொன்னார்.

தேர்வுகள் எல்லாம் பாஸ் பண்ணினேன். ஆனா, ஐஏஎஸ்தான்னு உறுதியா படிச்சேன். ஆயிரம் மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுத்தேன். அப்ப என் வீட்டு பக்கத்துல விஜயபாரதி சங்கர் ஒரு பெண்மணி இருந்தாங்க. அவங்க கணவர் ஒரு விபத்துல இறந்திட்டாங்க. அதனால, அரசுத் தேர்வுக்கு படிச்சிட்டு இருந்தாங்க. அவங்க பி.எஸ்சி பி.எட் முடிச்சிருந்தும் ஆங்கில அறிவு இல்லாததால் பள்ளிகள்ல வேலை கிைடக்கல.

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இதுமாதிரியான பெண்களுக்கு அரசுப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கலாம்னு முடிவெடுத்தோம். ‘பாரதி பெண்கள் படிப்பகம்’னு ஒரு பெயர் வச்சு ஆரம்பிச்சோம். இதுல ஒரு பெண் வந்து சேர்ந்தாங்க. அவங்க குரூப் 2ல் பாஸானாங்க. அப்புறம், விஜயபாரதியும் பாஸாகி அரசு வேலைக்குப் போயிட்டாங்க.

எனக்குள்ள ஒரு நம்பிக்கை வந்தது. பிறகு, எல்லோருக்கு மான அகடமியா மாத்தினேன். அப்படியா, ‘பாரதி அகடமி’ உருவாச்சு. இதுக்காக இந்தியா முழுவதும் நடத்தப்படும் அரசுத் தேர்வுகளின் இருபது வருட வினாத்தாள்களை எடுத்தேன். அதை ஆராய்ந்து முதன்மை தலைப்புகளை சுருக்கி எளிமையா படிக்கிறமாதிரி தயாரிச்சேன்.

அதனால, இன்னைக்கு நிறைய மாணவ - மாணவிகள் சேர்ந்து, படிச்சு பாஸாகி அரசுப் பணிகளுக்குப் போயிருக்காங்க. இதுல அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிச்ச மாணவ - மாணவிகளுக்கும், விதவைப் பெண்களுக்கும் இலவச பயிற்சி கொடுக்குறேன். மற்ற மாணவ - மாணவிகளுக்கு மட்டும் பணம் வாங்குறேன்.

தவிர, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிச்ச மாணவ - மாணவிகள் அரசு போட்டித் தேர்வுகளுக்காக அணுகும்போது அவங்களுக்கு மெட்டீரியலும் இலவசமா அனுப்பி வைக்கிறேன். இதுல ஒரு ஆத்ம திருப்தி கிடைச்சது. சரி, இதுதான் நம் பணினு இப்ப போயிட்டு இருக்கேன்...’’ என்கிறவர், பள்ளி மாணவர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி பற்றி ெதாடர்ந்தார்.

‘‘‘பாரதி அகடமி’ ஒருபக்கம் போயிட்டு இருந்தப்ப என் வீட்டுக்குப் பக்கத்துல எட்டாம் வகுப்பு படிக்கிற பையன் தமிழ்ல சந்தேகம் கேட்டான். அவனால் தமிழ் வார்த்தைகளை சரிவர உச்சரிக்க முடியல. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. லட்சங்கள்ல பணம் கொட்டி பள்ளிகள்ல படிக்கிற குழந்தைங்களுக்கு புரிதலற்ற கல்வி கிடைக்குதுங்கிற ஆதங்கம் வந்துச்சு. இதுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு.

உடனே, பள்ளி மாணவர்களுக்காக ‘புரிதலுடன் பள்ளிக் கல்வி’ங்கிற பயிற்சியை ஆரம்பிச்சேன். ஒரு மாடலை இதுக்காக உருவாக்கினேன். இதுக்கும் நிறைய மாணவ - மாணவிகள் வந்தாங்க. படிச்சு நல்ல மதிப்பெண்கள் வாங்கினாங்க. இதைப் பார்த்த பெற்றோருக்கு எங்க அகடமி மேல நிறைய நம்பிக்கை வந்துச்சு. ஒரு ஆன்லைன் நிறுவனம் கூட என்னுடைய இந்த மாடலைக் கேட்டாங்க. ஆனா, நான் அதை நிராகரிச்சிட்டேன். ஏன்னா, பணத்தை மட்டும் குறிக்கோளா கொண்டு இதை செய்யல. வருங்காலக் குழந்தைகளின் எதிர்காலம் நல்லாயிருக்கணும்ங்கிறதே என் நோக்கம்.
 
பிறகு, இந்தக் குழந்தைங்களுக்கு நுழைவுத் தேர்வில் கவனம் செலுத்த முடிவெடுத்தேன். இந்நேரம்தான் நீட் தேர்வு வந்தது. அனிதாவின் மரணம் என்னை ரொம்பப் பாதிச்சது. ஏன்னா, நானும் சாதாரண கிராமத்துல இருந்து வந்த பெண். அந்த வேதனை என்னனு எனக்கும் தெரியும்.
இங்க நீட் தேர்வு தேவையில்லதான். ஆனா, கட்டாயமாக்கப்படும்போது ஒரு கல்வியாளரா என்ன செய்யப் போறோம்ங்கிற கேள்வி எனக்குள்ள எழுந்துச்சு.

அதனால, என்சிஇஆர்டி நடத்துற மருத்துவத் தேர்வுகளின் கேள்வித்தாள்கள் எல்லாத்தையும் எடுத்து பார்த்தேன். அப்பதான் 27 தலைப்புகளை உள்வாங்கி படிச்சா போதும்னு தெரிஞ்சது. இதுக்காக எந்த கோச்சிங் சென்டரும் போக வேண்டியதில்லனு புரிஞ்சது. இதை என் அகடமி மாணவர்கள்கிட்ட கொண்டு போனேன்.

தவிர, இந்த தலைப்புகள்ல உள்ள விஷயங்களை எல்லாம் இப்ப தமிழாக்குகிற முயற்சியில் இருக்கேன். இனி, அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு பத்தி பயப்பட வேண்டியதில்ல. இதிலுள்ள கேள்விகளை படிச்சாலே போதும்...’’ என உற்சாகமாகச் சொல்லும் செந்தமிழ் விஜயன் கொரோனா காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கியிருக்கிறார்.

‘‘நாங்க மாணவர்களுக்காக நிறைய நிகழ்ச்சிகள் பண்றோம். கேரியர் சக்தினு ஒரு திட்டத்தைத் துவக்கி ஆன்லைன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி கொடுத்தோம். ஏன்னா, அரசுத் தேர்வுகள் பத்தி சரியான வழிகாட்டுதல் மாணவர்களுக்குக் கிடைக்கணும் என்பதற்காக.

அப்புறம், கல்வி, சமூகம், பெண்கள்னு நிறைய நிகழ்ச்சிகள் நடத்துறோம்...’’ என்கிறவர், ‘‘இன்னைக்கு எனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிட்டேன். நல்லா சம்பாதிக்கிறேன். என்னால பத்து பேருக்கு வேலை கொடுக்க முடியுது. என் வருமானத்தின் ஒரு பகுதியை என்னுடைய கிராமத்துலயே ஒருங்கிணைந்த நாட்டுக் கோழி திட்டத்திற்கு முதலீடாக்கி இருக்கேன். இதன்மூலம் எங்க கிராமத்துப் பெண்களின் பொருளாதாரம் முன்னேறும்னு
நம்புறேன்.

பொதுவா, என்னை மாதிரி எந்த பின்புலமும் இல்லாமல் முயற்சியை முதலீடாக விதைக்கிற பெண்களுக்கு உதவணும்ங்கிறது என் ஆசை. தவிர, அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை வளர்த்தெடுக்க இலவசமாக பயிற்சியை வழங்குறது என் லட்சியம்.
இவங்களுக்காக ‘பாரதி அகடமி’யின் கதவு எப்பவும் திறந்திருக்கும். எந்நேரமும் எங்களை அணுகலாம்…’’ நம்பிக்கை மிளிர சொல்கிறார் செந்தமிழ்
விஜயன்.

பேராச்சி கண்ணன்