அதிமுகவின் கோட்டையா கொங்கு மண்டலம்?பல்ஸ் பார்க்கும் அரசியல் விமர்சகர்கள்



கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கரூர், திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை கொங்கு மண்டலம் என்பார்கள். இந்த மண்டலத்தில் கொங்கு வேளாளர் எனும் கவுண்டர் சமூகத்தினர் அதிகம். அடுத்து வன்னியர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள்.

ஒரு காலத்தில் கொங்கு மண்டல வாக்காளர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தார்கள். எம்ஜிஆரின் வருகைக்குப் பின்பு அதிமுகவின் வாக்கு வங்கியாக கொங்கு மண்டலம் மாறியது. இதில் எம்ஜிஆரின் ரசிகர்கள் உட்பட திமுகவில் இருந்த அவரது அபிமானிகளும் அடக்கம்.
எம்ஜிஆர் ஆண்ட 10 வருட காலத்தில் அதிமுகவிற்குப் பெரிய பிரச்னை இல்லை. கொங்கு மண்டல மக்களுக்கும் பெரிய அதிருப்திகள் இல்லை. அதனால் அந்த 10 ஆண்டுகளில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக மிளிர்ந்தது.

பிறகு இந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்தது தனிக்கதை. அரசியலில் கோட்டை எல்லாம் உதவாது என்பதற்கு இந்தக்கதை ஓர் அரசியல் பாடம். ஆனாலும் இன்றைய அதிமுக உடைந்த கோட்டையை உறுதியாக நம்பி வருகிறது. அரசியலில் கோட்டை, கொத்தளம்... என்று கட்சிகள் நெஞ்சை நிமிர்த்துவது எடுபடுமா... என்று அரசியல் நிபுணர்களைக் கேட்டோம்.

‘‘அரசியலில் கோட்டை என்று எதுவும் கிடையாது. மண் கோட்டைகள் அவ்வப்போது எழும். பிறகு சரிந்துவிழும். உதாரணமாக எம்ஜிஆர் காலத்தில் கொங்கு மண்டலத்தில் அதிமுக தொடர்ச்சியாக ஜெயித்தது. ஆனால், ஒரு தேர்தலில் தமிழகம் முழுவதும் ஜெயித்த எம்ஜிஆரால் சென்னையில் ஒரு சீட்டுக்கு மேல் வெற்றிபெற முடியவில்லை. அப்போது சென்னை திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டது.

எம்ஜிஆருக்குப் பிறகு இந்த கொங்குக் கோட்டையை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி பிடித்திருக்கிறது. 1996ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவால் இந்தக் கோட்டையில் வெறும் 4 இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது. பர்கூரில் சுகவனம் எனும் ஓர் இளைஞனிடம் ஜெயலலிதாகூட தோற்றுப்போனது வரலாறு...’’ என்று ஆரம்பித்த அரசியல் விமர்சகர் கணபதியிடம், ‘கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக பெருவாரியாக ஜெயித்தது.

இதை பிரதமர் வேட்பாளருக்கான தேர்தலாக மட்டுமே பார்த்தது அதிமுக. இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் சமாளித்ததை வைத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலம் உட்பட தமிழகத்தில் வெற்றிக்கொடி நாட்டுவோம் என்று அதிமுக சூளுரைத்து வருவது பலனைத் தருமா..?’ என்றோம்.

‘‘பாராளுமன்றத் தேர்தல் பிரதமருக்கானது, சட்டமன்றத் தேர்தல் மாநிலத்துக்கானது என்று சொல்வதே தவறான பார்வை. உதாரணமாக 2014ம் வருட பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லாமலேயே ஜெயலலிதா 39 தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்தார். ஆகவே எந்த தேர்தல் என்றாலும் மக்களின் மனநிலைதான் முக்கியம்.

இன்றைய அமைச்சர்களான தங்கமணியின் குமாரபாளையம், வேலுமணியின் தொண்டாமுத்தூர், செங்கோட்டையனின் கோபிச் செட்டிப்பாளையம் உட்பட கொங்கு மண்டல பாராளுமன்றத் தொகுதிகளில் திமுகதான் வெற்றியைச் சுவைத்தது. பாராளுமன்றத் தேர்தல் என்றாலும் உள்ளூர் பிரச்னைகளின் அடிப்படையிலேயேதான் மக்கள் வாக்களிக்கிறார்கள்...’’ என்றவரிடம், ‘இந்தக் கோட்டையைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளுமா..?’ என்றோம்.

‘‘கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேரவில்லை. இருந்தாலும் பாஜக அதிகமாக வாக்குகள் வாங்கியது. ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வியடைந்தது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்றால் கூட்டணி வைத்திருந்த பாஜக வெற்றிபெற்றிருக்க வேண்டுமே. உண்மையைச் சொன்னால் இன்றைய நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் முழுவதும் திமுகவிற்குப் போய்விடும்.

ஒருவேளை அந்தக் கூட்டணி இல்லையென்றால் பெரிய கட்சிகள் இரண்டுக்குமே வாக்குகள் பிரிந்து போகும். சாதிய ஓட்டுகளைப் பொறுத்தளவில் இரண்டு கட்சிக்குமே வாக்குகள் பிரிந்துபோகும்...’’ என்ற கணபதியிடம், ‘கொங்கு மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தேர்தலைப் பாதிக்குமா..?’ என்றோம்.

‘‘நிச்சயம் பாதிக்கும். ஜிஎஸ்டி, மின்சாரக் கட்டணம், புலம்பெயர் தொழிலாளர்கள் காலி செய்தது எல்லாம் இந்தப் பகுதியின் தொழில்களை வெகுவாக பாதித்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால்தான் தொழிற்சங்கவாதிகளான கம்யூனிஸ்ட்டுகள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்தார்கள்.

பொங்கலுக்கு ஆட்சியாளர்கள் கொடுத்த 2500 ரூபாய் எல்லாம் தேர்தல் காலங்களில் மறந்துபோகும். ஒருவேளை தேர்தல் நெருங்கும் சமயங்களில் கொடுக்கப்படும் பணம் கூட ஓரளவுதான் பாதிப்பை உண்டாக்கும்.

பொதுவாக இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத்தான் பெருவாரியாக வாக்குகள் கிடைக்கும். ஆனால், இந்த முறை எதிர்க்கட்சியான திமுகதான் சரிசமமாக ஜெயித்திருக்கிறது. அதுவும் இந்த இரண்டு தேர்தல்களும் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் நடந்தவை. கொரோனாவுக்குப் பிறகான இன்றைய காலத்தில் கூட ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.

இது கொங்கு மண்டலத்திலும் பிரதிபலிக்கும். இப்போதைய நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுக 60 சதவீத இடங்களைப் பிடித்து வெற்றிவாகை சூடும் வாய்ப்புண்டு...’’ என்று கணபதி முடிக்க, பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான எஸ்.பி.லட்சுமணன் தொடர்ந்தார்.

‘‘கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராகுலை முன்னிறுத்தி ஓட்டு கேட்டதால் மட்டுமே ஸ்டாலின் ஜெயித்தார் என்று சொல்வது முற்றும் சரியல்ல. அதற்கு ஒரு பங்கு இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்...’’ என்கிற லட்சுமணன் கொங்கு மண்டலத்தின் நிலையைப் பற்றி விவரித்தார்.

‘‘எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருந்தது உண்மைதான். 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட திமுக மற்ற இடங்களில் ஜெயித்தபோது, கொங்கு மண்டலத்தில் இருந்த 16 தொகுதிகளில் 10ஐ அதிமுக ஜெயித்து கோட்டை என நிரூபித்தது.

இன்றைய ஆட்சியில் கொங்கு அமைச்சர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். சாதிப் பாசம் இருக்கும்தான். ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடியின் சொந்தத் தொகுதியான சேலத்தில்கூட அதிமுகவால் ஜெயிக்கமுடியவில்லை. திமுகதான் ஜெயித்தது.
 
ஆகவே, கொங்கு மண்டலத்தில்கூட சாதி பாசம் வேலை செய்யவில்லை. இதன் அர்த்தம், எடப்பாடி ஒரு மக்கள் தலைவராக உருவாகவில்லை என்பதையே காண்பிக்கிறது. அதற்காக வரும் தேர்தலை குறைத்து மதிப்பிடமுடியாது...’’ என்ற லட்சுமணன் கள நிலவரங்களை விளக்கினார்.
‘‘கடந்த ஜனவரி மாதத்தில் திமுகவின் தலைமைச் செயற்குழு, பிறகு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அதில், நம்மை சுலபமாக வெற்றியடைய வைக்கமாட்டார்கள் என்று வெளிப்படையாகப் பேசினார்.

ஸ்டாலினை ஆட்சியில் அமர வைக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை பாஜக செய்து வருகிறது. இதனால்தான் ஸ்டாலின் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆகவே, திமுகவுக்கு இந்த தேர்தல் அதிக வேலையைக் கொடுத்திருக்கிறது. தவிர, அதிமுகவின் பத்து வருட ஆட்சியில் அதிருப்தி என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. திமுகதான் ஜெயிக்கும் என்ற பேச்சும் கேட்கிறது.

ஆனாலும் கொஞ்சம் தீவிரமாக வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில்தான் திமுக இருக்கிறது. காரணம், திமுகவுக்கு ஆதரவாக பெரிய எழுச்சி ஏதும் இல்லாத காலம் இது. அத்துடன் கொரோனா போன்ற பிரச்னைகளால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது.

உதாரணமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த மகேந்திரன், கொங்கு மண்டலத்தில் ஒன்றேகால் லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இதை சட்டமன்றத்துக்கு பிரித்துக்கொடுத்தால் ஒரு தொகுதிக்கு 15 ஆயிரம் வாக்குகளாவது வரும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதே வாக்குகள் அந்தக் கட்சிக்குக் கிடைக்குமா என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால், திமுகவின் கூட்டணி வலிமையாக இருக்கிறது. இப்போதைக்கு கொங்கு மண்டலம் இரண்டு கட்சிக்குமே சரிபாதி என்ற நிலையில் உள்ளது. வரும் காலங்களில் இந்தப் பாதிகள் கொஞ்சம் கூடவோ அல்லது குறையவோ செய்யலாம். அதனால் இப்போதைக்கு இந்தப் பகுதியை அதிமுகவின் கோட்டை என்று சொல்வது சரிப்பட்டுவராது...’’ என்று உறுதியாக முடித்தார் லட்சுமணன்.

டி.ரஞ்சித்