யாரிடமும் ஒளிப்பதிவு கற்கவில்லை...



ஊரில் ஸ்டூடியோ வைத்து படங்கள் எடுத்தவர் இன்று திரைப்பட ஒளிப்பதிவாளராக முத்திரை பதிக்கிறார்...

“நினைச்சா இப்பவும் ஆச்சர்யமாக இருக்கு. எந்த இடத்தில் போட்டோகிராபியில் பிரியம் வந்ததுன்னு இன்னும் சரியாக தெரிய மாட்டேங்கிது.கேமராவைப் பிடிச்சு, ஊர்ல ஸ்டூடியோ தொடங்கி, அதற்குப் பிறகு இந்த சினிமாவிற்கு வந்ததற்கான முதல் விதை எங்கே விழுந்ததுன்னு ஞாபகமே இல்லை.
ஆனால், விதை விழுந்ததும் மொத்த புழங்குகிற இடமே வித்தியாசமாக இருந்தது. அதிகம் உழைப்பைக் கேட்கிற தொழில் இந்த ஒளிப்பதிவு. இதில் எல்லாம் எந்த முன்மாதிரியெல்லாம் வைச்சிட்டு செய்யமுடியாது. எல்லாமே யோசிச்சு யோசிச்சு செய்யணும்.

போட்டோகிராபின்னு ரசனை வந்த பிறகு மலைகள் எல்லாம் வேற மாதிரி தெரிஞ்சது. பிரம்மாண்டம் தவிர்த்து அதன் நுட்பங்கள், அழகு, அது சொல்ல வருகிற செய்தினு ஏதேதோ புரிஞ்சது. அப்புறம் சினிமாவுக்குள்ளே வந்து ‘கற்றது தமிழ்’, ‘சிவப்பதிகாரம்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’ன்னு சினிமா ஃபர்ஸ்ட்லுக் பண்ணிக்கொடுத்தேன்.

நான் பேசினது, சினிமாவைப் புரிஞ்சுகிட்டது, சுசீந்திரன்கிட்டே தயக்கமில்லாமல் பகிர்ந்துகிட்டது எல்லாம் அவரைக் கவர்ந்து ‘அழகர்சாமியின் குதிரை’யில் அறிமுகம் ஆனேன். இன்னிக்கு ‘பேச்சிலர்’, ‘கர்ணன்’ வரைக்கும் வந்திருக்கேன்...” பக்குவமாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். யாரிடமும் கேமரா பயிலாமல் இங்கே வலுவாக வேரூன்றியது எப்படி ?

இயக்குநர் ராம் எனது நண்பர். ஒருநாள் பாலு மகேந்திரா சார் கிட்டே கூட்டிட்டுப்போக அவர் எனது புகைப்படங்களை வாங்கிப் பார்த்தார். ஆச்சர்யப்பட்டு ஒவ்வொரு படத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதற்கான விபரங்களை கேட்க ஆரம்பித்து விட்டார். ‘நீ என்னை எப்போ வேண்டுமானாலும் பார்க்கலாம்’னு அனுமதி வேறு. இதெல்லாம் இன்னிக்கு யாருக்கும் கிடைக்காத இடம்.

அவர் பெர்சனலாக என்னை அன்பாக பார்த்துக் கொண்டார். ஒளிப்பதிவாளர் சங்கத்தில், ‘இவரோட ஒர்க் என்னை ஆச்சர்யப்படுத்துது. யார்கிட்டேயும் உதவியாளராக இருந்து வேலை செய்யவில்லை என்பதெல்லாம் ஒரு குறையாகத் தெரியவேயில்லை. சத்யஜித் ராய் கிட்டே ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்த சுப்ரதா மித்ரா முதல்படம் செய்வதற்கு முன் கேமராவை இயக்கிய அனுபவம் இல்லாதவர். அவரைப் போன்ற அனுபவசாலி யாக எனக்கு ஈஸ்வர் தென்படுகிறார்’னு எழுதிக் கொடுத்தார்.

என்னை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொண்டார்கள். அதெல்லாம் எனக்கு கிடைத்தற்கரிய பேறு. ஆரம்பத்தில் பி.சி.ராம், கே.வி.ஆனந்த் என சந்தித்து உதவியாளராக முயன்றிருக்கிறேன். அந்த வாய்ப்பு கிட்டியதில்லை.

ஒளிப்பதிவை சுலபமாக எப்படி புரிந்துகொள்ளணும்..?

சொல்லப்போனால் ஒளிப்பதி வாளர்கள் அதிகமாக வெளியே தெரிய வேண்டிய அவசியம் கூட இல்லை. நல்ல சினிமாவிலே ஒளிப்பதிவு வெளியே தெரியாது. கதையும், கதைக் களத்தையும் நோக்கியே படம் பயணம் போகணும்.

இன்னிக்கும் ‘பருத்தி வீரனை’ப் பார்த்தாலே ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் ஓர் அடி கூட கதையை விட்டு ஒளிப்பதிவு நகராது. சினிமாவுக்கான முக்கியமான புரிதலே இதுதான். இயக்குநரின் காட்சிப்படுத்துதலை அப்படியே கொண்டு வந்து, அதுவும் வேகமும் தரமுமாய் தருவதுதான் எங்களோட வேலை. ஒரு நல்ல கதை இயக்குநரால் சொல்ல முடியும்போது, அது எங்களையும் அப்படியே கொண்டு வந்து வழி நடத்தும். அதை நான் பல சமயங்களில் உணர்ந்திருக்கேன்.

நீங்க ஃபிலிம், டிஜிட்டல் இரண்டிலும் வேலை செய்திருக்கீங்க…

இன்னிக்கு வரைக்கும் ஃபிலிம் ஆச்சர்யம்தான். அது ஒரு கெமிக்கல் மீடியம். வேதியியல் வினை புரிந்து ஒரு இமேஜ் உருவாவது எல்லாம் நிச்சயம் புதுமைதான். கெமிக்கல் எலெக்ட்ரானிக் டிவைசாக மாறி டிஜிட்டல் ஃபார்மெட்க்கு மாறிவிட்டது. டிஜிட்டல் அடுத்து வெர்ச்சுவல் ரியாலிட்டியாகி நியூட்ரான்களாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் நடக்கிறது.

சினிமாவில் புதுமை கூடி, கண்ணுக்கு முன்னாடி சட்னு மாற்றங்கள் வரப் போகுது. கண்ணின் கண்மணிதான் உங்க சிஸ்டத்தின் பாஸ்வேர்டாக மாறப் போகுதுன்னு சொல்றாங்க. எவ்வளவோ ஆச்சர்யங்களையெல்லாம் கடந்து வந்திருக்கோம். கருப்பு வெள்ளை கண்ணுக்கு வண்ணங்கள் புலனாவதே வியப்புதான்.

ராம், கௌதம் மேனன், லெனின் பாரதி, மாரி செல்வராஜ் என வெவ்வேறு களத்தில் இயங்கும் இயக்குநர்களோடு பணிபுரிகிறீர்கள்…
ராம் எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தெரியும். அவருடைய கதைக்களனும் உணர்ந்து செய்ய வேண்டிய அளவில் இருக்கும். அவரோட ஸ்கிரிப்ட்தான் படத்தோட பெரும் பலமாக நிற்கும். எங்களுக்குள்ளே ஒரு தீராத நட்பும், புரிதலும் இருந்துக்கிட்டே இருக்கு.

என்னை விடுங்க, அவருடைய உதவி இயக்குநர்கள் மாரி செல்வராஜ் முதற்கொண்டு பாருங்க, அவர்கிட்டே குருகுலம் மாதிரி பாடம் படிப்பாங்க. அவர் அப்படித்தான். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யை லெனின் பாரதி பண்ணும்போது இன்னும் மனசுக்கு நெருக்கமாக இருந்தது. அது நான் பிறந்த நிலத்தை ஒட்டியது. மனசுக்கும், உணர்வுக்கும் சேர்ந்து ஒட்டிய கதை. அப்புறம்... அவரே அப்படித்தான். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கணும்னு நினைக்கிறவர். அப்படிப்பட்ட கதைகளை மட்டுமே காட்சிப்படுத்த நினைக்கிற அருமையான மனிதர்.

கௌதம் சார் என்னை கவனிச்சு ‘அச்சம் என்பது மடமையடா’வில் கூப்பிட்டார். அவரோட தொடர்ந்து விளம்பரப் படங்களில் இருக்கிறேன். ஒரு ஆல்பம் வெளியிட ரெடியா இருக்கு. மாரி செல்வராஜ் பிரமாதமான கதை ஆசிரியர். சாமானியனின் வாழ்க்கையை ‘கர்ணனி'ல் எடுத்து வைக்கிறார். இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் அவர் முக்கியமான இயக்குநராக வெளியே வந்து விடுவார்.

‘நாச்சியாரி'ல் பாலாவோடும், ‘பேச்சிலரி'ல் சதிஷ் செல்வகுமாரோடு இணைந்ததும், ‘பாவக்கதைகள்’ வெப் சீரிஸில் விக்னேஷ் சிவனோடு இணைந்ததும் நல்ல அனுபவமே.

ஒளிப்பதிவில் யார் ரொம்பவும் கவர்கிறார்கள்..?

இன்னிக்கு டிஜிட்டலில் ஒளிப்பதிவாளர்கள் அருமையாக வெளிப்படுகிறார்கள். நிறைய பரிசோதனை செய்ய சாத்தியங்கள் இருக்கு. அவரவருக்கான திறமை இருக்க, எனக்கு வேல்ராஜ், பி.எஸ்.வினோத், மனோஜ் பரமஹம்சா, ஜார்ஜ் வில்லியம்ஸ்னு குறிப்பிட்டு சொல்லத் தோணுது.

எப்படி இருக்கீங்க..?

எனக்கு பயணங்களில் தீராத ஆசையிருக்கு. பார்க்க வேண்டிய நிலங்களும், மனிதர்களும் இன்னும் இருக்காங்க. மனிதனுக்கு பயணமே  பல பாடங்களையும், புரிதலையும், அனுபவச் செறிவையும் அளிக்கும்னு நம்புறேன். என் மனைவி கவிதாவும், மகள் சௌமியாவும், மகன் தனுஷும் என்னைப் பாதுகாக்கிறார்கள்.

நா.கதிர்வேலன்