நண்பரின் மகளைக் கடத்திய கும்பலை பந்தாடும் ஹீரோ!



உலகெங்கும் வசூலைக் குவித்த அட்டகாசமான ஆக்‌ஷன் படங்கள், நெட்பிளிக்ஸில் வெளியாகி அப்ளாஸை அள்ளுகின்றன. அதில் ஒன்று, ‘ரஷ் ஹவர்’ என்ற ஆங்கிலப்படம். இருபது வருடங்கள் பழமையான இப்படம், புதுப்படங்களுக்கு மத்தியில் பார்வைகளை அள்ளி டிரெண்ட் ஆகியிருப்பது ஹைலைட். அதுவும் கடந்த வாரம் இந்திய அளவில் OTTயில் டிரெண்டான டாப் 10 படங்களின் பட்டியலில் ‘ரஷ் ஹவர்’ இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நண்பரின் மகளைக் கடத்திய கும்பலைத் துவம்சம் செய்யும் அதிரடி நாயகனின் சாகசமே படத்தின் கதை. ஹாங்காங்கின் நிழல் உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான் தாதா ஜுன்டாவோ. இவன் யார் என்பது பரம ரகசியம். அவனைப் பிடிப்பதற்காக செல்கிறார் உளவுத்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் லீ. ஜுன்டாவோ அங்கே இருப்பதில்லை. அவனுடைய வலது கையான சாங்கும் லீயிடமிருந்து தப்பித்துவிடுகிறான். ஜுன்டாவோவின் அடியாட்கள் சிலரை துவம்சம் செய்துவிட்டு, அவன் திருடி வைத்திருக்கும் சீனாவின் பொக்கிஷங்களைக் கைப்பற்றுகிறார் லீ. இன்னொரு பக்கம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சீனத்தூதரின் செல்ல மகள் கடத்தப்படுகிறாள்.

தூதருக்கு நெருங்கிய நண்பர் லீ. அதனால் ஹாங்காங்கில் இருந்து லீயை அவசரமாக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வரவழைக்கிறார் தூதர். ஹாங்காங்கைச் சேர்ந்த லீ, அமெரிக்காவில் விசாரணையில் இறங்கினால் தூதரின் மகள் கடத்தப்பட்டது சர்வதேச பிரச்னையாகிவிடும் என்று தயங்குகிறது எஃப்.பி.ஐ. அதனால் லாஸ் ஏஞ்சல்ஸின் துப்பறிவாளர் ஜேம்ஸ் கார்ட்டரை தங்களின் சார்பாக நியமிக்கிறது. ரொம்பவே ஜாலியான ஆள் கார்ட்டர். அதே நேரத்தில் திறமைசாலி. எஃப்.பி.ஐக்காக வேலை செய்ய வேண்டும் என்பது அவரது கனவு.

ஆனால், விசாரணையில் இறங்கவிடாமல் லீயைத் தனது கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே கார்ட்டருக்கு எஃப்.பி.ஐ கொடுத்த வேலை. இந்நிலையில் தூதரின் மகளை ஜுன்டாவோவின் ஆட்கள்தான் கடத்தியிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிய வருகிறது. 50 லட்சம் டாலர் பணத்தைக் கொடுத்தால் மகளை உயிருடன் திருப்பிக்கொடுப்பதாக கடத்தல்காரர்கள் சொல்கிறார்கள். லீயின் திறமையை அறிந்து அவருக்கு உதவ முன்வருகிறார் கார்ட்டர். லீயும் கார்ட்டரும் சேர்ந்து எப்படி தூதரின் மகளை மீட்டார்கள்... ஜுன்டாவோ யார்? என்பதே அதிரடியான
திரைக்கதை.

எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத கதை. ஆக்‌ஷனுடன் நகைச்சுவையைக் கலந்துகொடுத்து விருந்து படைத்தது புது அனுபவமாக படம் ரீலிசானபோது பார்க்கப்பட்டது. உயிரைப் பணயம் வைத்து சண்டைக்காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார் லீயாக நடித்த ஜாக்கி சான். கார்ட்டராக நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் கிறிஸ் டக்கர். படத்தின் இயக்குநர் ப்ரெட் ராட்னர். ரஷ் ஹவரின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வசூலைக் குவித்தது வரலாறு.