தனித்துவமான ஆக்‌ஷன் படம்!



தற்காப்புக் கலையை மையமாக வைத்து வெளியான திரைப்படங்களில் தனித்துவமான படைப்பாகக் கொண்டாடப்படுகிறது ‘பிசோரோ’. போர்ச்சுக்கீசிய மொழிப்படம் இது. அமேசான் ப்ரைமில் ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது. நடனமும் இசையும் கலந்த தற்காப்புக் கலை, கபோயிரா.
16ம் நூற்றாண்டில் பிரேசிலில் அடிமையாக இருந்த ஆப்பிரிக்கர்களால் உருவானது இந்தக் கலை. பல வருடங்களாக கபோயிராவுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதில் தலைசிறந்தவரான பிசோரோவின் நிஜ வாழ்க்கை கதைதான் இந்தப் படம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். பிரேசிலின் பாஹியா மாநிலத்தில் உள்ள காட்டுப்பகுதி. வெள்ளைக்கார நிலப்பிரபுக்கள் கருப்பின மக்களை அடிமைப்படுத்தி அதிகமாக வேலை வாங்குகின்றனர். பெண்களிடம் தவறாக நடந்துகொள்கின்றனர். இப்படியான ஒரு சூழலில் ஐந்து வயதிலேயே கபோயிரா கலையைத் தேர்ந்த மாஸ்டரிடம் ரகசியமாக கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான் சிறுவன் பிசோரோ. ஆம்; வெளிப்படையாக கபோயிரா பயிற்சி பெற முடியாது.

அப்படி பயிற்சி பெறுவது வெள்ளைக்காரர்களின் கண்ணில் பட்டுவிட்டால் கடுமையான தண்டனை. நாளுக்கு நாள் வெள்ளைக்காரர்களின் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இருபது வயதிலேயே கபோயிரா கலையில் யாராலும் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவானாக விஸ்வரூபம் எடுக்கிறான் பிசோரோ. காட்டுக்குள் ரகசியமாக வாழ்ந்து தன் மக்களுக்காக வெள்ளைக்காரர்களை எதிர்த்து சண்டையிடுகிறான்.

 இதில் சில வெள்ளைக்காரர்கள் கொல்லப்படுகின்றனர். பிசோரோவைக் கொல்வதற்காக நாலாப்பக்கமும் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது வெள்ளைக்காரர்களின் படை. ஆனால், அவன் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை.துப்பாக்கி போன்ற ஆயுதங்கள், நூற்றுக்கணக்கான அடியாட்கள் என பெரிய பலம் வாய்ந்த வெள்ளைக்காரர்களை ஒற்றை ஆளாக பிசோரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பதே பரபரக்க வைக்கும் மீதிக்கதை.

இதுவரை பார்த்திராத அரிதான சண்டைக்காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து. போராட்டத்துக்கு நடுவில் பிசோரோவின் மெல்லிய காதல் நெகிழ்ச்சி. ஹாங்காங் மாஸ்டர் ஹுயான் சியூ கு-தான் இப்படத்துக்கு ஸ்டண்ட் இயக்குனர். ‘தி மேட்ரிக்ஸ்’, ‘கில் பில்’ உட்பட அதிரடி மன்னன் ஜெட்லியின் படங்களுக்கும் இவர்தான் ஸ்டண்ட் மாஸ்டர். படத்தின் இயக்குநர் டானியல் டிக்கோமிராஃப்.

பிசோரோவிற்குப் பிறகு வந்தவர்களும் கபோயிராவை ரகசியமாகத்தான் கற்று வந்தனர். எழுபதுகளில்தான் கபோயிராவை ஒரு கலை என பிரேசில்வாசிகள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். பிரேசிலில் கபோயிராவைக் கற்றவர்கள் உலகம் முழுவதும் அதை எடுத்துச் சென்றனர். 2008ல் கபோயிரா பிரேசிலின் பாரம்பரிய கலையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. யுனெஸ்கோவும் கபோயிராவைப் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய கலையாக அங்கீகரித்தது. கபோயிராவின் பெருமைக்கு காட்சி ரீதியான சாட்சியாக மிளிர்கிறது இந்தப் படம்.