மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை!



பாலிவுட் நட்சத்திரம் இர்பான் கானின் இறுதிப்படம், ‘அங்ரேஜி மீடியம்’. ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது இந்த இந்திப்படம்.
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தையின் கதைதான் இந்தப் படம்.உதய்ப்பூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார் சம்பக். எப்போதும் ஒருவித குழப்ப மனநிலையிலே இருப்பவர். அவருடைய மனைவி, மகள் தாரிகாவைப் பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். தாரிகா பிளஸ் 2 படித்துவருகிறாள்.

சம்பக்கின் சகோதரர் கோபியும் ஒரு ஸ்வீட் கடையை நடத்திவருகிறார். இருவருடைய கடைகளும் அருகருகே இருப்பதால் பலத்த போட்டி. ஆனால், ஒருவரை இன்னொருவர் விட்டுக்கொடுக்காமல் நெருக்கமாக இருக்கிறார்கள்.  லண்டனுக்குச் சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது தாரிகாவின் கனவு. இறுதித்தேர்வில் முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்களுக்கு லண்டனில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்று பள்ளியின் முதல்வர் அறிவிக்கிறார்.

தாரிகா படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை. நன்றாக படிக்கும் ஒரு மாணவனின் உதவியால், இரவு பகல் பாராமல் படித்தும் கூட அவளால் நான்காவது ரேங்க்தான் எடுக்க முடிந்தது. முதல் ரேங்க எடுத்த மாணவி ஐஐடியில் சேர விரும்புவதால் நான்காவதாக வந்த தாரிகாவுக்கு லண்டனுக்குச் செல்ல ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. மகிழ்ச்சியில் தத்தளிக்கிறாள் தாரிகா.

மகள் வெளிநாடு சென்றுவிட்டால் தனியாகிவிடுவோம் என்று கவலைப்படுகிறார் சம்பக். அதை அவர் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. பள்ளி ஆண்டுவிழாவில் பேசுவதற்காக சம்பக்கை அழைக்கிறார் முதல்வர். சிறப்பு விருந்தினராக ஒரு நீதிபதி வருகிறார். அவர் கோபியிடம் லஞ்சம் வாங்கியவர்.

ஆண்டு விழாவில் நீதிபதி யார் என்பதை மாணவர்கள், ஆசிரியர்களின் முன்னணியில் புட்டுப் புட்டு வைக்கிறார் சம்பக். அதிர்ச்சியடையும் நீதிபதி, சம்பக் பேசிக்கொண்டிருக்கும்போதே அரங்கத்தை விட்டு வெளியேறிவிடுகிறார். அந்த நீதிபதி, முதல்வரின் கணவர். தன்னுடைய கணவரை அவமானப்படுத்திய சம்பக்கை பழிவாங்க, தாரிகாவின் ஸ்காலர்ஷிப் கடிதத்தைக் கிழித்து வீசுகிறார் முதல்வர்.

தன்னால்தான் இப்படியானது என்று உடைந்துபோகும் சம்பக் தன் மகளை எப்படியாவது லண்டனுக்கு அனுப்பி படிக்க வைப்பேன் என்று முதல்வரிடம் சவால் விடுகிறார். இந்த சவாலில் சம்பக் ஜெயித்தாரா... தாரிகாவின் கனவு நனவானதா... என்பதே நெகிழ்வான திரைக்கதை.

உலகின் எந்த மூலைக்குச் சென்று படித்தாலும், வேலை செய்தாலும் சொந்த ஊரில் வாழ்வதைப் போல இருக்காது.

குழந்தையாக இருக்கும்போது நம் கைகளைப் பெற்றோர்கள் பற்றிக்கொண்டனர். வயதான பிறகும் அவர்களுக்குத் தேவைப்படும்போதும் பிள்ளைகள் பெற்றோர்களின் கைகளைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்பதை அப்பா - மகள் உறவினூடாக மென்மையாக சித்தரிக்கிறது இந்தப் படம்.வழக்கம்போல அற்புதமான ஒரு நடிப்பைத் தந்திருக்கிறார் சம்பக்காக வாழ்ந்த இர்பான் கான். படத்தின் இயக்குநர் ஹோமி அடஜானியா.

தொகுப்பு: த.சக்திவேல்