மணப்பெண்ணுக்கு நயன்தாரா சாயலை கொண்டு வருவோம்!



கல்லூரிப் படிப்பு ஒருபக்கம், கேமரா ஃப்ளாஷ்கள் மறுபக்கம் என்று மாடலிங் ஃபீல்டில் கலக்கும் இளம் பெண்களின் காலம் இது! அந்த மாடலிங் துறை, இன்றைய யுவதிகளின் ஆர்வத்துக்கும், நம்பிக்கைக்கும் உரிய எளிமையான துறையாக மாறி வருகிறது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண்களும் கூட இன்று மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். முயற்சியால் சாதிக்கலாம் என்பதே மாடலிங் துறையில் ஈடுபடுபவர்களின் நம்பிக்கை.

இவர்களின் நம்பிக்கைக்கு மேலும் ஒரு மகுடத்தை சூட்டி அதன் மூலம் அவர்களுக்கு மாடலிங் துறையில் ஒரு அழகான பாதையை தன்னுடைய ‘சாரா மேக்கோவர் ஸ்டூடியோ’ மூலம் அமைத்துத் தருகிறார் பிரியா.‘‘பிறந்தது, படிச்சது எல்லாம் சென்னைலதான். சின்ன வயசுல இருந்தே எனக்கு கலைத் துறை மேல தனி ஈடுபாடு. அந்த சமயத்தில்தான் எனக்கு ஸ்ரீப்ரியா தயாரிச்ச ‘சிந்துபாத்’ சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சின்ன பொண்ணு கதாபாத்திரத்துக்கு நடிக்க கூப்பிட்டிருந்தாங்க. நானும் ஆடிஷனுக்கு போனேன். தேர்வும் ஆனேன்.

மூணு வருஷ பிராஜக்ட். அப்புறம் பல சீரியல்கள்ல நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒரு பக்கம் படிப்பு, மறுபக்கம் நடிப்புனு என் பயணம் தொடர்ந்தது. இதற்கிடைல ஒரு சேனல்ல விஜேவா வேலை பார்த்தேன். என் நடிப்பை பார்த்து இயக்குநர் பன்னீர்செல்வம் ‘பதினெட்டு வயசு’ படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ‘வாலு’ படத்துல சந்தானத்துடன் நடிச்சேன். பள்ளி படிக்கும் மாணவி கதாபாத்திரம். ஆனா, நான் நடிச்ச பகுதில இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் நிறைய இருந்ததால அந்த போர்ஷனை அப்படியே நீக்கிட்டாங்க.

இந்த ஏமாற்றத்தால எதுலயும் கவனம் செலுத்த முடியலை. எல்லாவற்றில் இருந்தும் விலகினேன். அந்த பிரேக் என்னைப் பற்றி நான் தெரிஞ்சுக்க அவகாசம் கொடுத்தது.அப்புறம் ‘வம்சம்’ சீரியல்ல நடிச்சேன். தொடர்ந்து ‘வாணி ராணி’, ‘கல்யாணப் பரிசு’னு மூணு சீரியல்கள்லயும் மூணு வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிச்சேன். இப்ப ‘தெனாவட்டு’ கதிர் சார் ஒரு படம் இயக்கறார். அதுல நடிகர் சதீஷுக்கு ஜோடியா நடிச்சிருக்கேன்...’’ என்ற பிரியா இரு வருடங்களுக்கு முன் இந்த மேக்கோவர் ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளார்.

‘‘எந்த பெண்ணும், தான் அழகா இருக்கணும்னுதான் நினைப்பா. அதிகளவு இல்லைனாலும் கொஞ்சமா முகத்துக்கு ரோஸ் பவுடர், கண்களுக்கு மை, லிப்ஸ்டிக் போடணும்னு ஆசைப்படுவா.ஆனா, அடிப்படைல மேக்கப் கொஞ்சம் காஸ்ட்லி துறை. சாதாரணமா கை கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்யவே குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் செலவாகும். இதுவே கல்யாணப் பெண் அலங்காரம்னா ரூ.30 ஆயிரத்துக்கு மேல ஆகும். நடுத்தரவர்க்கத்துக்கு இது அதிகப்படியான தொகை.

அதனால நடுத்தரவர்க்கத்துக்காக இந்த ‘சாரா மேக்கோவர் ஸ்டூடியோ’ ஆரம்பிச்சோம். குறைந்த செலவுல தரமான கல்யாண மேக்கப் என்ற நோக்கத்துலதான் இதை தொடங்கினோம். மணப்பெண்ணுக்கு தேவையான காஸ்ட்யூம், நகை அலங்காரம், மேக்கப் உட்பட எல்லாமே கம்மியான விலை.இது ஸ்டூடியோ என்பதால மேக்கப்போடு போட்டோவும் எடுக்கறோம். பிரபல புகைப்பட நிபுணர்களான பாலுவும் சத்யாவும் எங்களுக்கு உதவியா இருக்காங்க...’’ என்ற பிரியா, மலேசியாவில் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலிங் பயின்றுள்ளார்.

‘‘12 வருஷங்களா நடிப்புத் துறைல இருக்கேன். இந்தத் துறைல நான் காலடி எடுத்து வைச்சப்ப சுந்தரம் சார்தான் எனக்கு மேக்கப் போட்டார். அவருக்கு அப்புறம் எந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் டும் செட்டாகலை. என்னதான் நான் மேக்கப் பத்தி படிச்சிருந்தாலும் எனக்கு நானே மேக்கப் போட்டுக்கறப்ப சில சமயம் சரியா அமையாது.

நடிப்பு தவிர விளம்பரம் மற்றும் மாடலிங் துறைலயும் இருந்ததால அப்பப்ப ஷூட்டிங், ரேம்ப் வாக் இருக்கும். அதுக்கு என்னை தயார்படுத்திக்கணும். இதுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் நானே தேடிப் போய் அலைந்து வாங்க வேண்டிய சூழல்.
எந்த மேக்கப் எனக்கு சரியா இருக்கும்... இருக்காதுனு கைட் செய்ய யாரும் இல்லை. பெரிய தொகை செலவு செஞ்சு மம்மூட்டி சாரின் பர்சனல் போட்டோகிராஃபரை வரவைச்சு போட்டோ ஷூட் எடுத்தேன்.

இப்படி என் துறைக்கு என்னையே தயார்படுத்த ரொம்பவே கஷ்டப்பட்டேன். என்னை மாதிரி வேற யாரும் அலைஞ்சு கஷ்டப்படக் கூடாதுனு இந்த ஸ்டூடியோவுல எல்லாமே இருக்கறா மாதிரி பார்த்துப் பார்த்து அமைச்சிருக்கேன். மேக்கப் மட்டு மில்ல, போர்ட்ஃபோலியோ எடுப்பது முதல் எல்லாமே ஒரே கூரைக்குள் அமைச்சிருக்கோம்...’’ என்ற பிரியாவின் கைவிரல்கள் பல பிரபலங்களை அழகுபடுத்தியுள்ளன.

‘‘பொதுவா ஒரு பெண்ணுக்கு குறிப்பிட்ட மேக்கப் செட்டாயிடுச்சுன்னா அதையேதான் பின்பற்றுவாங்க. வேற ஸ்டைலை டிரை செய்ய மாட்டாங்க. அவங்களுக்கு வேற ஒரு ஸ்டைல் கொடுத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு செய்றேன். அப்படிதான் பிக்பாஸ் ஜூலிக்கு ஹாலிவுட் லுக் டிரை செய்தேன். நல்ல ெரஸ்பான்ஸ் கிடைச்சது. இந்த மாதிரி வித்தியாசமா மேக்கப் செய்யறப்ப யாராவது ஒரு ஹாலிவுட் நடிகை அல்லது மாடல் புகைப்படத்தை குறிப்புக்காக வைத்துக் கொள்வோம். அப்படியே இல்லைனாலும், அதே ஸ்டைல் லுக்கை கொண்டு வருவோம்.

என் கான்செப்ட், சீரியல்ல அழறவங்களை அப்படியே வேற மாதிரி மாற்றி போட்டோ ஷூட் செய்வது தான். சீரியல்ல வில்லியா நடிக்கற கிருத்திகாவுக்கு அப்படித்தான் ஹாலிவுட் மற்றும் வட இந்திய பெண் மேக்கப் போட்டு போட்டோஷூட் செய்தோம்.அதேபோல டிக்டாக் இலக்கியானா கிளாமர் லுக்தான் நினைவுக்கு வரும். அவங்களுக்கு பட்டுப்புடவை உடுத்தி டிரெடி ஷனல் மேக்கப் போட்டோம்.

இதுதவிர ரீகிரியேஷனும் செய்றேன். அதாவது, ஒருவரை மாதிரி மற்றவருக்கு மேக்கப் போட்டு அந்த சாயலைக் கொண்டு வருவது.அப்படி நடிகை லதா ராவுக்கு தீபிகா படுகோன் சாயலைக் கொண்டு வந்தோம். இப்ப சில கல்யாணப் பெண்கள் நயன்தாரா, த்ரிஷா போல் லுக் வேணும்னு கேட்கறாங்க...’’ என்றவர் மாடலிங் துறையில் நுழைய இருக்கும் பெண்களின் அடிப்படைத் தகுதி என்ன என்றும் கூறுகிறார்.


‘‘மாடலோ விளம்பரத் துறையோ எதுல நுழைய விரும்பறவங்களும் முதல்ல தங்களுக்கான போர்ட்ஃேபாலியோவை தயார் செய்யணும். போட்டோல பார்க்க நல்லா இருந்தாதான் அவங்களை தேர்வு செய்வாங்க. அப்புறம் மாடலிங்கா, நடிப்பானு ஆடிஷன்ல முடிவாகும். ஆனா, ஆடிஷனுக்கு போகவே போட்டோ தேவை.

போர்ட்ஃபோலியோ எடுக்கறப்ப அவங்க முகம், சரும அமைப்பை ஆய்வு செய்வோம். சிலருக்கு எண்ணெய் சருமம் இருக்கும். ஒரு சிலருக்கு சருமம்
வறண்டிருக்கும். பெரும்பாலானவர்களின் சருமம் சென்சிடிவ்வா இருக்கும். ஆக, சருமத்துக்கு தகுந்தா மாதிரிதான் மேக்கப் போடணும். வறண்ட சருமம்னா கிளாசி மேக்கப். அப்பதான் முகம் பளபளனு இருக்கும். இதுவே எண்ணெய் சருமம்னா மேட்ஃபினிஷ். லிப்ஸ்டிக் மட்டும் கிளாசியா போடணும்.

சென்சிடிவ் சருமம் உள்ளவங்களுக்கு முகத்துல பருக்கள் அதிகமா இருக்கும். அதுக்கான சிகிச்சையை அவங்க முதல்ல எடுத்துக்கணும். அடுத்து சிகை அலங்காரம், அவங்க முக அமைப்புக்கு ஏற்ப செய்யணும்.ஒருவர் புதுசா மாடலிங் துறைக்கு வர்றாங்கன்னா, அவங்க உடலமைப்பு அதுக்கு ஏற்ப இருக்கணும். இடுப்பளவு 28 அல்லது 30; உயரம் 5.4 இஞ்ச் குறைந்தபட்சம் இருக்கணும். உதடுகளும் மூக்கும் எடுப்பா இருக்கணும்.

சிலருக்கு இரண்டு உதடுகளும் பெரிசா இருக்கும். மூக்கு சின்னதா இருக்கும். இதை மேக்கப் மூலம் சரி செய்து போட்டோ மட்டும் எடுத்துத் தரலாம். மத்தபடி இவங்க மேடைல ஏறுவதோ ராம்ப் ஷோவுல பங்கேற்பதோ கஷ்டம். செட் ஆகாது...’’ என்கிறார் பிரியா.

செய்திகள்: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்