கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்... தமன்னாவின் கோவிட் பாசிட்டிவ் அனுபவங்கள்



சினிமாவில் வெற்றிகரமாக 15வது ஆண்டை கொண்டாடுகிறார் தமன்னா. மும்பை ஹீரோயின்களில் தமிழில் பேசும் தங்கத் தாரகை. கொரோனா பாசிட்டிவிற்குப் பின், முகத்தில் தேஜஸ் கூடியிருக்கிறது. தன்னம்பிக்கை துள்ளலாக புன்னகைக்கிறார்.
இப்போது ‘குயின்’ தெலுங்கு ரீமேக்கான ‘தட்ஸ் மகாலட்சுமி’ ரிலீஸுக்கு ரெடி. கோபிசந்துடன் ‘சீட்டிமார்’, இந்தியில் நவாஸுதின் சித்திக்குடன் ‘போல் சுடியான்’, தமிழில் வெப்சீரீஸ் என அதேஸ்பீடில் பரபரக்கிறார்.

‘‘நடிக்க வந்து பதினைஞ்சு வருஷங்களாகிடுச்சு. இத்தனை வருஷமும் வேலை வேலைனு வீட்ல ரிலாக்ஸா இருக்க டைம் கிடைக்காம பறந்துட்டிருந்தேன். என் கேரியர்ல அவ்ளோ பிசியா இருந்தது, இருக்கறது சந்தோஷம்தான். ஆனா, ஷூட்டிங்கிற்கு இடையே எப்ப வீட்டிற்கு வந்தாலும், கிட்டத்தட்ட ஒரு பேயிங் கெஸ்ட் மாதிரிதான் வந்துட்டு போயிருக்கேன்னு இந்த பேண்டமிக் டைம்லதான் உணர்ந்தேன்.  

கொரோனா பாசிட்டிவ்னு வந்தப்ப நம்பிக்கை இழக்கல. அதை தைரியமா எதிர்கொண்டேன். லைஃப்ல எல்லாத்தையும் எதிர்கொள்ளணும்... பயம்தான் நம்ம முதல் எதிரி. ஃபேஸ் பண்ணாத வரைதான் எல்லாமே பூதாகரமா தெரியும். நேருக்கு நேர் அதை எதிர்கொள்ளும்போதுதான், ‘அட இதுக்கா அப்படி பயந்தோம்’னு புரியும்.

இந்தப் புரிதல், பக்குவம் இப்ப வந்திருக்கு. எதைப் பார்த்தும் அச்சப்படத் தேவையில்லைனு கோவிட் தொற்று எனக்கு உணர்த்தியிருக்கு. நான் எப்பவும் பாசிட்டிவ் கேர்ள். கொரோனா பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்து... சிகிச்சை எடுத்து அதுல இருந்து மீண்ட பிறகும் என் மனசுல நெகட்டிவ் எண்ணங்கள் ஆக்கிரமிக்கலை. அதே பழைய தமன்னாவாகத் தான் பாசிட்டிவ் எனர்ஜியோட இப்பவும் இருக்கேன்..!’’ ஃபீல் ஃப்ரீயாகப் பேசுகிறார் தமன்னா.
லாக்டவுன் எப்படிப் போச்சு..?

எந்த பிரெஷ்ஷரும் இல்லாம ஹேப்பியா வீட்ல இருந்தேன். என் ரூம், அலமாரி, பீரோனு எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து க்ளீன் பண்ணினேன். அழகா சுத்தப்படுத்தும் வாய்ப்பு கிடைச்சது. என் முன்னேற்றத்துல, லைஃப்ல பெரும் பங்கு வகிச்சது என் அம்மாதான். அவங்களுக்கு என் கையால சமைச்சுக் கொடுத்தேன். இடையே மதர்ஸ் டே வந்ததால, அன்னிக்கு அம்மாவை எந்த வேலையும் பண்ண வைக்காம வாஷிங்ல இருந்து கிச்சன் க்ளீனிங் வரை எல்லாத்தையும் நானே பாத்துக்கிட்டேன்.

இப்படி நான் விழுந்து விழுந்து வேலை செஞ்சதை பார்த்து எங்க அம்மாவுக்கே ஆச்சரியம்.
ஹெல்த் பத்தியும் இந்த பேண்டமிக் நிறைய யோசிக்க வச்சிடுச்சு. ஹெல்த்தி லைஃப் பத்தி அதிகம் தெரிஞ்சுக்கிட்டேன். எங்க டிரைவரை வேலைக்கு வரச் சொல்லாததால, கார் டிரைவிங் கத்துக்கற வாய்ப்பும் அமைஞ்சது. ரொம்ப நாள் ஆசை நிறைவேறிடுச்சு.

நார்மல் டைமை விட, இந்த டைம்ல ஒர்க் அவுட்டுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தேன். யூ டியூப்பை பார்த்து கிக் பாக்ஸிங் ஒர்க் அவுட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்.உங்க ப்ளஸ்... மைனஸ் தெரிஞ்சுக்கலாமா..?தாராளமா. எப்பவும் பாசிட்டிவிட்டி எனர்ஜிதான் என் ப்ளஸ். ஒரு விஷயம் வரலைனா அது வரும் வரை அதுக்கான முயற்சில இறங்கிடுவேன். இந்த விஷயம் வரலையேனு கன்னத்துல கை வச்சு, கவலைப்பட மாட்டேன். விடாமுயற்சியுடன் ட்ரை பண்ணி வரவழைச்சிடுவேன். இது என் பலம்.

மைனஸ்னா, எதையும் ஒளிவு மறைவில்லாம பேசுவது. பட்பட்னு தோணினதை சொல்லிடுறது என் பலவீனம்.சமீபத்துல ரசிச்ச கிசுகிசு?நிறையவே இருக்கு. அதுல ஒண்ணு இது. ‘அவதார் 2’ல நான் நடிக்கப் போறேன்னு சொல்லி, என் முகத்தை அவதார் ஹீரோயின் மாதிரி ப்ளூ கலர் ஷேட்ல டிசைன் பண்ணியிருந்தாங்க! பார்த்ததும், சிரிப்பு வந்திடுச்சு. அந்த தகவல் பொய். ஆனாலும், இன்ட்ரஸ்ட்டிங் ரூமர்.
உங்களுக்கு செல்லப் பெயர்கள் நிறைய இருக்காமே..?

யெஸ். நம்ம க்ளோஸ் சர்க்கிளை செல்லப் பெயர்கள் சொல்லி கூப்பிடுறது ஒரு தனிக்கலை. யாருக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கறதே சுவாரஸ்யமா இருக்கும். Pet names வைச்சு அந்த ரிலேஷன்ஷிப்பின் நெருக்கத்தை உணரலாம். ஸ்கூல் படிக்கும் போது, எல்லாருமே என்னை ‘தம்மு’னு கூப்பிடுவாங்க. அப்பா டின்ட்லி, டிமன்ட்டுனு கூப்பிட்டார். அப்புறம் டேமி, டேம்ஸ்னு சொல்லி கூப்பிடுவாங்க. இப்பவும் டேமி, டேம்ஸ்னுதான் சொல்றாங்க. எதனால அப்படிச் சொல்ல ஆரம்பிச்சாங்க? அதுக்கு அர்த்தம்... இதெல்லாம் எனக்கு மட்டுமில்ல... என்னை அப்படி கூப்பிடற க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கும் கூடத் தெரியாது.

அதே டைம்ல என்னை தம்முனு கூப்பிடுறவங்களைப் பிடிக்கும். தம்முனாலே என் மைண்ட் ஆட்டோமெடிக்கா ஸ்கூல் டேஸ் மெமரீஸுக்கு போயிடும்.சமீபத்துல படிச்ச புத்தகம்..?

எனக்கு புக்ஸ் படிக்கற பழக்கம் கிடையாது. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் ரெஃபர் பண்ற புக்ஸை வாங்கி படிச்சிடுவேன். அப்படி சமீபத்துல ‘ஃபார்ட்டி ரூல்ஸ் ஆஃப் லவ்’ படிச்சேன். அப்புறம், ரூமி ஸ்டோரீஸையும் படிச்சேன். வீட்ல கொஞ்சம் புக்ஸ் கலெக்‌ஷனும் வச்சிருக்கேன்.

ஒரு உண்மையை சொல்றேன். கொஞ்சம் டைம் கிடைச்சாலும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கத்தான் பிடிக்கும்! அப்புறம் டைம் கிடைக்கும் போது யூ டியூப்ல பழைய நடிகர் நடிகைகளின் பேட்டி களைப் பார்த்து ரசிப்பேன். அதைத் தவிர ஹாலிவுட், நம்ம இண்டஸ்ட்ரி படங்களின் பிஹைண்ட் த சீன்ஸ், மூவி மேக்கிங் வீடியோஸ் அதிகமா பார்ப்பேன். என் கேரியருக்கு இது பயனுள்ளதா இருக்கு.

மை.பாரதிராஜா