கொரோனாவுக்குப் பின் வேலை வாய்ப்புகள்... புதிய எதார்த்தத்துக்கு தயாராவோம்!



கொரோனாவின் வரவு பூமிப் பந்தையே மாற்றியிருக்கிறது. சுகாதாரம் முதல் பொருளாதாரம் வரை நம் வாழ்வாதாரமே தலைகீழாகிவிட்டது.

கொரோனா கிழித்துப் போட்டவைகளில் முக்கியமானது நமது வேலைவாய்ப்புதான்.
இல்லாதவனுக்கு ஏற்கெனவே வேலை என்பது ஒட்டுப்போட்ட கந்தல்தான். அதனையும் பிய்த்துப்போட்டுப் போயிருக்கிறது கொரோனா. மறுபுறம் வேலை என்பதன் தாத்பர்யமே மாறியிருக்கிறது.ஒட்டுமொத்த உலகமும் ஒரு ‘சைபர் ஸ்ட்ரக்’ எனப்படும் கணிப்பொறி சுழலில் சிக்கிக் கொண்டுள்ளது.

காலை எழுந்ததும் ஜிம் ட்ரெய்னரிடம் ரிமோட் ஃபிட்னெஸில் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு, குழந்தைகளை ஆன்லைன் வகுப்பில் அமரச் செய்துவிட்டு, ஜூமில் அலுவலக மீட்டிங்கை நடத்தி, இமெயிலில் செய்த வேலையை மூட்டைகட்டி அனுப்பிவிட்டு, வாடிக்கையாளரிடம் வீடியோ காலில் பேசி, மாதாந்திர மளிகை சாமானை வாட்ஸ்அப்பில் ஆர்டர் போட்டுவிட்டு, இலக்கியக் கூட்டங்களை, கலை நிகழ்ச்சிகளை ஜூமில் பார்த்துவிட்டு படுக்கப் போகிறார்கள் பலர்.

இப்படி இதுவரை வாழாத புது வாழ்க்கை ஒன்றுக்கு இந்த போஸ்ட் - கொரோனா சூழல் நம்மைப் பழக்கிவிட்டிருக்கிறது.வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் கலாசாரம் பல தொழில்களில் தற்காலிகமாகவேனும் நுழைந்துவிட்டது.

டுவிட்டர், ஷாப்பிஃபை போன்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட நிரந்தரமாகவே வீட்டிலிருந்து வேலை என்ற முடிவை எடுத்திருக்கின்றன எனத் தோன்றுகிறது. ஜெட்சிந்தீஸ் போன்ற விளையாட்டுத் துறை நிறுவனங்கள் கோடிகளைக் குவித்திருக்கின்றன.

டிஜிட்டலைசேஷன் என்பதை இந்த கொரோனா வேகமாக முடுக்கிவிட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சி மற்றும் மாற்றத்தை வெறும் இரண்டே மாதங்களில் அடைந்துவிட்டது...’ என்கிறார்.

இன்று டிஜிட்டலுக்கு மாறுவது என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. உதாரணமாக, மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஒருவருக்கு தன் பொருளை டிஜிட்டலில் எப்படி விளம்பரம் செய்வது, பிரசாரம் செய்வது எனத் தெரியவில்லை என்றால், அவர் காலத்தில் பின்தங்கியிருக்கிறார் என்பதே பொருள்.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இரண்டு கோடியே எழுபது லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள் என்கிறது. புதிதாக வேலைக்குச் சேருவது ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 35 புள்ளிகளாகச் சரிந்திருக்கிறது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் வேலை வாய்ப்புக்கான போட்டி என்பது இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது.

ஜனவரியில் வேலை வாய்ப்பு தளங்களில் வேலைதேடுவோர் தினசரி 80 பேர் என்பதிலிருந்து இம்மாதம் 190 என்பதாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுவோர் முழுமையாக வேலையிழந்து வேறு துறைக்குள் நுழைய முயல்கின்றனர்.
மறுபுறம் கணிப்பொறி பொறியாளர்கள், தொழில்வளர்ச்சி நிர்வாகிகள், தொழில்நல ஆலோசகர்கள், கன்டென்ட் ரைட்டர்ஸ், ஜாவா ஸ்க்ரிப்ட் கணிப்பொறி மொழி எழுதும் பொறியியலாளர்கள் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன.

எதிர்காலம் இன்னமும் நெருக்கடியாக இருக்கும் என்கிறார்கள். எதிர்காலத்தில் ஒருவர் வாழ்க்கை முழுதும் ஒரே தொழிலைத் தெரிந்துகொண்டு வாழ்வை ஓட்டுவது சிரமமாக இருக்கக்கூடும். பாரதிதாசன் சொன்ன ‘கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்ற வரிகளின் தலையெழுத்து மாறப்போகிறது. ஒருவர், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் கூடுதலாக இன்னொரு தொழிலையும் அறிந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிடும். ஒருவர் தன் வருமானத்தில் ஒரு பகுதியை புதிய தொழிலைக் கற்றுக்கொள்ள செலவிட தயங்கக் கூடாது.

இது கொஞ்சம் அதீதமான கற்பனையாகக்கூடத் தோன்றலாம். ஆனால், இந்த சிக்கலான நிலை நோக்கிதான் உலகத் தொழில் மற்றும் வேலை வாய்ப்புச் சூழல் சென்று கொண்டிருக்கிறது.வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் முறை கூட மாறிவிட்ட காலம் இது. குவியும் பல நூறு வேலை வாய்ப்பு விண்ணப்பங்களிலிருந்து தகுதியானதை சிறப்பான பாராமீட்டர் கணக்கெடுப்போடு செயற்கை அறிவு எனப்படும் ரோபோக்கள், கணிப்பொறிகள் போன்றவை செய்து கொடுக்கின்றன.

இதனால் ஒவ்வொருவரும் தங்களது சி.வி. எனப்படும் ‘கரிக்குலம் விட்டே'வை கனமாக்கிக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டிய காலம் இது.
பணியாளர்களை நடத்தும் விதமும் முன்னிலும் மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. சம்பளப் பணியாளர்கள், உதிரித் தொழிலாளிகள், ஒருங்கிணைக்கப்பட்ட ஊழியர்கள் போன்றோரில் கிட்டத்தட்ட 70% பேர் இந்த கொரோனா காலத்தில் தாங்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று கருது கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

டெக் - ஜாப் எனப்படும் பணிகளில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு முன்பைவிட இப்போது அதிகமாகியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
உதாரணமாக, டெலி மெடிசின், கல்வி ஆகியவை டிஜிட்டல் ஆகிவிட்டது. இவ்வளவு ஏன், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் மளிகை வாங்கக்கூட ஆளில்லா இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிரடியாகச் சரிந்தும் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2019 - 20 ம் ஆண்டில் சம்பளப் பணியாளர்கள் எண்ணிக்கை 8 கோடியே 10 லட்சமாக இருந்தது. இது, இந்த ஜூலை மாதத்தில் 6 கோடியே 72 லட்சமாகக் குறைந்திருக்கிறது. ஆனால், மற்ற வேலை வாய்ப்புகளில் கடந்த ஆண்டு 31 கோடியே 76 லட்சமாக இருந்த பணியாளர்கள் எண்ணிக்கை இந்த ஜூலையில் 32 கோடியே 25 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

கணிசமானோர் நிரந்தரமான சம்பளப் பணியை இழந்து உதிரித் தொழிலுக்குள் நுழைந்திருக்கின்றனர் என்ற எதார்த்தத்தையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. பல்வேறு துறை சார்ந்த பெரு நிறுவனங்களின் தரவுகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரம் ஒன்று, இந்த ஜூன் மாதத்தில் சம்பள உயர்வு என்பது போன ஆண்டோடு ஒப்பிடும்போது சராசரியாக 2.9% உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறது. ஆனால், இது சந்தோஷப்படும் விஷயமே இல்லை.

வங்கிகள் 16.6%, பங்குச்சந்தை நிறுவனங்கள் 13.5%, தொலைத் தொடர்புத்துறை 10.7% என வளர்ந்திருக்கின்றன. மறுப்பதற்கில்லை.
ஆனால், டெக்ஸ்டைல் 29%, தோல் தொழில் 22.5%, வண்டி, வாகன உற்பத்தி 21%, சுற்றுலா 30%, ஹோட்டல்கள் 20%, கல்வி 28%, ரியல் எஸ்டேட் 21% என சம்பளத்தை அதிரடியாகக் குறைத்திருக்கின்றன. இப்படி சம்பளம் குறைக்கப்பட்ட துறைகளில் உள்ள சிறிய நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு, தொழிலாளர்கள் நடுத்தெருவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஜூனில் 5.2 என்பதிலிருந்து தற்போது -23.9 என்பதாகச் சரிந்து படுபாதாளத்தில் கிடக்கிறது. கிராமங்கள், நகரங்கள் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.கொரோனா காலத்தில் இப்போதைய சூழலுக்கு ஏற்ப சில புதிய தொழில்கள் உருவாகியிருக்கின்றன.

உதாரணமாக, மருத்துமனைப் பணிகள், செவிலியர், மருந்தக ஆய்வுகள், மைக்ரோபயாலஜி போன்ற துறைகளில் பணியாளர் தேவை கணிசமாக உயர்ந்திருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் கொரோனா காலத் தற்காலிக மாற்றங்கள்தான். நீண்ட கால அளவில் இவை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. மற்றபடி இந்தத் தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிலவரங்கள் எப்போது சீரடையும் என யாருக்கும் தெரியவில்லை.ஆக, மாறும் காலச் சூழலுக்கு ஏற்ப மக்களும் மாற வேண்டியது தான். புதிய எதார்த்தத்துக்கு தயாராவோம்!

இளங்கோ கிருஷ்ணன்