Face B(JP)ook - மினி தொடர் 5



ஊடக அறமும் ஃபேஸ்புக் அத்துமீறலும்

செய்தி ஊடகம் என்பதன் தலையாய கடமை செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதுதான். பல்வேறு தரப்பினரின் அதிகாரக் கைப்பற்றலுக்கான ஓயாத போராட்டமே அரசியல் யுத்தம். இந்த யுத்தத்தில் எல்லாத் தரப்பினரின் குரலையும் ஜனநாயகத்துடன் அனுமதிப்பதே நவீன ஊடக தர்மம். ஆனால், ஃபேஸ்புக் இந்த தர்மத்தை என்றும் போற்றியதும் இல்லை பேணியதும் இல்லை என்பதற்கு, உலகம் முழுக்க எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.

தோற்றம் முதலே பாஜகவின் கைப்பாவையாகவும் வலதுசாரி சக்திகளின் பிரசார வாகனமாக இருக்கவுமே ஃபேஸ்புக் விரும்பியது தற்செயல் அல்ல. அது ஒரு திட்டமிட்ட வியூகம். ‘தி கேரவன்’ கட்டுரை ஒன்று ஃபேஸ்புக்கில் பூஸ்ட் செய்ய விண்ணப்பிக்கப்பட்டபோது எப்படி திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டது... அதன் மூலம் எப்படி அதன் சாரம் வாசகர்களை, பொதுமக்களை சரியான தருணத்தில் சென்று சேராமல் போனதன் மூலம் அக்கட்டுரை தோற்கடிக்கப்பட்டது என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

இதுதான் மறைப்பதன் மூலம் தோன்றச் செய்வது. அதாவது, உண்மையான செய்தியை மக்களின் கண்களிலிருந்து மறைக்கும்போது, உண்மையற்ற ஒரு செய்தி அல்லது கருத்தை மக்களிடம் சேர்ப்பது. அரசியல் சாணக்கியத்தனங்களில் ஒன்று இது. ‘கேரவன்’ கட்டுரை பூஸ்ட் செய்ய அனுமதியளிக்கப்படாத அந்நாட்களில் மேலும் பல பத்திரிகையாளர்களின் முகநூல் கணக்குகள் பூட்டப்பட்டன. ஆனால், இதற்கான முறையான காரணங்கள் சொல்லப்படவில்லை.

இப்படி, ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒற்றுமை இவர்கள் ஆளும் பாஜக அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரான கருத்துகளை எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான். ஜனதா கா ரிப்போர்ட் டரின் ரிஃபாட் ஜவாத், ஜன்ஜவாரின் பிரேமா நாகி, அஜய் பிரகாஷ் போன்ற குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களும் இதில் அடக்கம்.

ஜாவித் என்ற பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னது இது: ‘‘2017ம் ஆண்டின் செப்டம்பர் மாதம், கொல்கத்தாவைச் சேர்ந்த ‘தி டெலிகிராப்’ நாளிதழின் முகநூல் பக்கம் திடீரென காணாமல் போனது. ரஃபேல் ராணுவ விமான ஊழல் தொடர்பான ஒரு கட்டுரை பிரசுரமான பிறகே இந்த திடீர் மாயம் நிகழ்ந்தது.

ஃபேஸ்புக்கின் இந்தத் தடைக்கு எதிராக தொடர்ச்சியான புகார்கள் சென்ற பிறகே தடை நீக்கப்பட்டது. அதேபோல் அயோத்தியா தீர்ப்பை ஒட்டி நான் ஒரு பதிவு போட்டதும் என்னுடைய ஃபேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டது...’’ இவை எல்லாம் மிகச் சில ஆதாரங்கள்தான். இப்படி பல நூறு சொல்ல முடியும். ‘கேரவன் டெய்லி’, ‘ஜான்ஜுவர்’ போன்ற ஊடகங்களுக்கு ஃபேஸ்புக்கில் பல்லாயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இவர்களிடம் தங்கள் செய்திகள் போகாதவாறு தடுத்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக். போல்டா ஹிந்துஸ்தான் பத்திரிகையும் தங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டது என்று கூறியது.

என்டிடிவியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர், எப்போதெல்லாம் ரவீஷ்குமாரின் ‘ப்ரைம் டைம்’ என்ற நிகழ்ச்சியில் ஆளும் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான நிகழ்ச்சிகள், அவர்களை விமர்சிக்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறதோ அந்த இரவுகளில் எல்லாம் அதன் பார்வையாளர் எண்ணிக்கை ஃபேஸ்புக்கில் குறைகிறது என்கிறார். தொழில்நுட்பரீதியாக இது எப்படிச் சாத்தியம் என்பது நமக்குப் புரியவில்லை. ஆனால், நிச்சயம் மார்க்குக்கும் ஃபேஸ்புக்குக்கும் தெரிந்திருக்கும்.

ஃபேஸ்புக் தன்னை அரசியல் சார்பற்ற இணையதளம் என்றே சொல்கிறது. ஆனால், கடந்த 2012 - 2019ம் ஆண்டு வரை பாஜகவையும் மோடியையும் இந்தியாவைக் காக்க வந்த மீட்பன் என்றும் இந்துக்களின் ஆபத்பாந்தவன் என்றும் கூறிக்கொள்ளும் பதிவுகள் வெள்ளம் போல் ஃபேஸ்புக்கில் பெருகின.
இந்தச் செய்திகள் பல தருணங்களில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே கடும் பதற்றத்தை உருவாக்கின. ஒரு சில இடங்களில் சிறு சிறு கலவரங்கள்கூட நடந்தன.

பசுக்களைக் கொல்கிறார்கள், கால்நடைகளைத் திருடுகிறார்கள், குழந்தைகளைக் கடத்துகிறார்கள் என்று மாற்று மதத்தவர் மீது காழ்ப்புகளையும் காரணமற்ற வெறுப்பையும் விதைக்கும் பொய்களை அவிழ்த்துவிட்டது ஆளும் பாஜகவின் சமூக வலைத்தள அடியாள் படை.
ஃபேஸ்புக்கைவிட இந்தப் புரளிகள் வாட்ஸ்அப்பில் பரவிய வேகம் அதிகம். வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும் இந்தப் பாதகம் மிக வேகமாகப் பரவியது.

இந்தியா ஸ்பெண்ட் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் 2014 - 2017 ஆண்டுகளில் இப்படியான வன்முறைகள் 28% வரை உயர்ந்திருப்பதாகவும், இவை பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலேயே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
திறமையற்ற ஓர் அரசுதான் மக்களைப் பிரித்தாளும் தந்திரங்கள் மூலம் தங்கள் போதாமையை மூடி அதிகாரத்தில் ஒட்டிக் கொள்ள கணக்கிடும்.

ஃபேஸ்புக் செயல்பாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும் பொய்யான, தவறான தகவல்களைத் தருபவர்களுக்கு ஃபேஸ்புக் உடந்தையாக இருக்கிறது என்பதுமான குற்றச்சாட்டுகளை எல்லாம் ஏற்கெனவே பல உலக நாடுகள் ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஐந்து கமிட்டிகள், பொய்யான தகவல்களைப் பரப்பியதற்காக சர்வதேச ஆணைக் குழுவின் முன்பு மார்க் ஜூகர்பெர்க் ஆஜராக வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. சிங்கப்பூர் அரசும் ஃபேஸ்புக் மீது கடுமையான தணிக்கைகளும் கண்டனங்களும் வைத்திருக்கிறது.

இந்திய அரசுமே கூட ஃபேஸ்புக்கை விமர்சித்திருக்கிறது. ஆனால், டெக்னிக்கல் சொல்யூஷன் வழியாக இந்தப் பிரச்னையை, தானே தீர்க்க முன்வர வேண்டும் என்றுதான் சொதப்பலாக அறிவுறுத்துகிறது. வாட்ஸ்அப்பில் பரவும் போலிச் செய்திகள் அதிகரித்ததைத் தொடர்ந்து 2018ம் ஆண்டின் மே மற்றும் ஜூன் மாதத்தில் இப்படி போலிச் செய்திகள் பரப்புவோர் மீது மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை தொடங்கியது. ஆனால், இதற்காக மூன்று உயிர்கள் பலியாக வேண்டியதாக இருந்தது.

ஃபேஸ்புக் உண்மையாகவே தார்மீக ஜனநாயகத்தை மதிக்கிறதா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஃபேஸ்புக்கில் வேலை செய்யும் சில குறிப்பிட்ட மூத்த மற்றும் தலைமை அதிகாரிகள் பாஜக ஆதரவாளர்கள். மோடி பிரதமர் ஆகும் முன்பே தங்கள் நலனுக்காக ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தியது பாஜக. கடந்த செப்டம்பர் 2017ல் ட்ரம்ப் ஃபேஸ்புக்கை சாடினார். ஃபேஸ்புக் தனக்கு எதிராக இருப்பதாக டுவீட் செய்தார். மார்க் ஜூகர்பெர்க் இதனை மறுத்தார். ‘ட்ரம்ப் தனக்கு எதிராக செயல்படுவதாகச் சொல்கிறார். மறுபுறம் நான் ட்ரம்புக்கு உதவுவதாக லிபரல்கள் சொல்கின்றனர். உண்மை இவ்விரண்டிலும் இல்லை...’ என்று முழங்கினார்.

ஆனால், இது உண்மையில்லை என்று நிறுவ அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஃபேஸ்புக்குக்கும் ஜூகர்பெர்க்குக்கும் அரசியல் மனச் சாய்வு உண்டு. ஆனால், அது அவர்கள் தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து வருவதல்ல. வருமானம், அதிகாரம் போன்றவற்றைத் தக்கவைப்பதற்கான வெறியில் கார்ப்பரேட் யுகத்துடன் இழைவதில் இருந்து வருவது. ஒரு முழுமையான கள்ளக் கூட்டு இது.

(தொடர்ந்து தேடுவோம்)

- இளங்கோ கிருஷ்ணன்