சினிமா கல்யாண கவரேஜ் கிடையாது..!



அழுத்தமாக சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்

“திருத்துறைப்பூண்டி என் ஊரு! சினிமாவுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குடும்பம். சொல்லப்போனா சினிமாவே அதிகம் பார்க்காத கம்யூனிஸ்ட் குடும்பம். ஓரங்க நாடகம், தெரு நாடகம், சமூக நாடகம்னு ஊரெல்லாம் அனல் பறக்கும். இப்படி சமூக உணர்வுகளோடு வளர்ந்தேன்.
கம்ப்யூட்டர் இஞ்சி னியரிங் டிப்ளமா படிச்சிட்டு சென்னை வந்தேன். இங்கே வந்து தான் எங்க ஊர்க்காரர் கேமராமேன் ஜீவாவைப் பார்த்தேன். ‘இன்ஸ்டிடியூட்டில் படிச்சிட்டு வா, அது முக்கியம். கேமரா பத்திய கூர்மை இருந்தா உனக்கே ஈஸியாக இருக்கும். நான் சொல்றதைச் செய்’னு சொன்னதை நம்பினேன்.

இன்ஸ்டிடியூட்டில் படிச்சா சினிமாவே வேறயாயிருக்கு. அப்புறம் ஜீவா சாரோடு பயணம். நல்லா கத்துக்கிற இடமாக அமைஞ்சது. முதல் படமே ஜீவா சார் வழிகாட்டி ‘தமிழன்’ படம். விஜய் சார் படம்னு செம டேக் ஆஃப்… ஜீவா சாருக்கு என் மரியாதையும், நன்றியும், வணக்கங்களும் போய்ச் சேரணும்.

அப்பேர்ப்பட்ட மனுஷனை இனி தேடினாலும் பார்க்க முடியாது...”
குருவின்  ஞாபகத்தில் மூழ்கிப் போகிறார் ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம். ‘தமிழன்’, ‘இயற்கை’ என ஆரம்பித்து இப்போது ‘க.பெ.ரணசிங்கம்’ வரை பெரும் பயணம். 28 படங்கள் செய்திருக்கிறார்.

எப்படி கேமராமேனாக உருவெடுத்தீங்க..?
நாங்க விவசாயக் குடும்பம். எந்த வேலையும் செய்யத் தயங்காத மனசுதான் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்திருக்கணும். மக்களைப் பிடிக்கும். அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு பார்த்தபோது, அவங்களுக்கு சினிமாவைப் பிடிச்சிருக்கு.

கம்ப்யூட்டர் இஞ்சினியராக வேலை பார்த்தேன். மனசு ஒட்டல. 25 வயது வரைக்கும் ஒரு ஸ்டில் கேமராவைக் கூட தொட்டதில்லை. எதிலும் ஆழமா இறங்கி, மனசையும், உழைப்பையும், நம்பிக்கையையும் போட்டால் தன்னால அதில் பெரிய ஆளாக வந்திடலாம்.

எதுகை, மோனை, நாலு கவிதைப் புத்தகத்தையும் படித்து, இலக்கியத்தையும் பாரதியாரையும் சேர்த்துப் படிச்சா கவிஞன் ஆயிடலாம். மியூசிக் டைரக்டர் ஆகணுமா, அதிலே கிடந்து உழன்று திரிஞ்சால் போதும். ஆர்வம், டெடிகேஷன், உழைப்பு முழுசாக வேணும். அவ்வளவுதான். அங்கிட்டு இங்கிட்டு திரும்பிப் பார்க்காமல் உழைக்கணும்.

நான் கம்ப்யூட்டர் வேலையை விட்டு இதில் வந்தேன். ஜீவா மாதிரியானவங்க கண்ணில் பட்டு பெரிய படங்களில் வேலை செய்து, பெரிய செட்டை ஹேண்டில் பண்ணி, மல்ட்டி ஸ்டார்ஸ்னு பழகி ஒரு பயம் இல்லாத நிலைமைக்கு வந்திருக்கேன். யாரும் எந்தத் தொழிலும் செய்யலாம். எதுவும் கம்ப
சூத்திரம் கிடையாது. உங்க மனசுக்குப் பிடிச்ச விஷயமாகப் பிடிங்க. அதை மத்தவங்க மனசுக்கும் பிடிக்கும்படி சொல்ல முடியுமான்னு பாருங்க. எல்லோரும் எழுதுறாங்க, வரையுறாங்க, விளையாடுறாங்க, சிலபேர் மட்டும்தானே செதுக்குறாங்க…

காரணம் கிராஃப்ட். அந்த நுட்பம் பழகணும். அவ்வளவுதான்.

ஒளிப்பதிவு படத்திற்கு எப்படி அமையணும்..?
‘இயற்கை’னு ஜனநாதன் சார் படம் பண்ணேன். கடலும், கடல் சார்ந்த இடமும் அந்தப்படம். அது சம்பந்தமாக சிலதைப் படிச்சேன். அந்த வகையில் படங்களை எப்படி எடுத்திருக்காங்கன்னு ஒரு நோட்டம் விட்டேன். ஜனநாதன் விளக்கம் தெளிவா இருக்கும். அப்படியே எல்லாத்தையும் போட்டுக் கலந்து மனதுக்குள் ஓட்டிப் பார்த்தால், தன்னால ஒரு பார்வை வந்திடும்.

இந்திப்படம், மலையாளம், தமிழ்னு எக்கச்சக்கமாக பண்ணிட்டாலும், இன்னமும் ‘இயற்கை’ ஏகாம்பரம்னுதான் அடிப்படையான ரசிகன் சொல்றான். நாங்க படத்தில் தெரியக்கூடாது. நம்ம வேலையை பாடல், சண்டைக் காட்சிகளில் வைச்சுக்கலாம். அதில் டான்ஸ் மாஸ்டர், ஃபைட் மாஸ்டரோடு உட்கார்ந்து வித்தை காட்டலாம்.

‘புறம்போக்கு’ படமெல்லாம் சும்மா செய்திட முடியாது. பாளையங்கோட்டை ஜெயில் பார்த்து, லைட்டிங் பண்ணின விஷயம். ஜெயில் காரிடாரில் இருக்கிற வெளிச்சத்தை வைச்சு தான் அதில் வேலை இருக்கு. ‘க.பெ.ரணசிங்கம்’ பாருங்க... படம் முழுக்க வெப்பம் தெரியும். கருவேல மரம், செம்மண்ணுனு புழுதி கிளப்பும். மழை இருக்கிற படம்னா சின்னக்குளிர் எடுக்கணும். அந்தந்த ஃபீலை படத்துக்குள் கொண்டு வரணும்.
பிரியதர்ஷனுடன் நிறைய படங்கள் செய்திருக்கீங்க…

அவர் நூறு படம் போல செய்திட்டார். புது இயக்குநர்களுக்கு நிறைய ஷாட்ஸ் எடுக்கணும்னு ஆசையிருக்கும். இரண்டு கேமரா, அதிலேயே பல விதமாக எடுத்துப் பார்ப்பாங்க. பிரியன் சாருக்கு ஒரு கேமரா போதும். இரண்டாவது கேமரா எதுக்கும்பார்.

இந்திப் படமாக இருந்தாலும் அவர் அப்படித்தான். ‘ஒரு கண்ணால் பார்க்கிறதுதானய்யா சினிமா’னு சொல்வார். ‘இது கல்யாண கவரேஜ் கிடையாது, மூணு கேமராவெல்லாம் வேண்டாம்’னு சொல்வார். ‘நீ பார்க்கிற சினிமாதான், நாங்க பார்க்கிற சினிமா’னு சொல்லிட்டு சிரிப்பார். அவர் எடுக்கிறதை Start to End எடுத்து முன்ன பின்ன கட் பண்ணிட்டா அப்படியே சினிமா வந்து நிக்கும். ‘ஒரு குளோசப் எடுக்கவா’ன்னு கேட்டால், ‘அது டஸ்ட் பின்னுக்குதான் போகும், எடுக்கிறியா’னு கேட்பார்.

தன் சினிமாவின் மீது அவ்வளவு நம்பிக்கை. மேக்ஸிமம் இரண்டு டேக்கில் ஓகே பண்ணுவார். நிறைய டேக் போனால் நடிகர்களின் ஒரிஜினல் போயிடும்னு சொல்வார். அவர் படங்களில் மேக்கிங் நல்லா இருக்கிறதுக்கு காரணம் அதுதான். மேக்கிங்கில் கவனம் செலுத்தாமல் வருகிற இயக்குநர்களுக்கு இனி சங்கடம் இருக்கு. நெட்பிளிக்ஸ்னு சினிமாவுக்கு நிகராக இப்போ வர்றாங்க. புது நவீனம், விஞ்ஞானத்திற்கு தகுந்த மாதிரி மாறியே ஆகணும்.வெர்ச்சுவல் ரியாலிடினு சொல்றாங்க…

போக முடியாத இடத்தை படம் பிடித்துக் கொண்டு வந்து கொஞ்சமா அதில் செய்து பார்க்கலாம். ஒரு படமே அதில் செய்றது கஷ்டம். அவ்வளவு இயல்பு வருமான்னு தெரியலை. சில காட்சிகளை, அபூர்வமான இடங்களை மிக்ஸ் பண்ணிக்கலாம். ஆத்தில் போய் காலை வைக்கிற மாதிரி எடுக்கணும்னா என்ன செய்றது! அதுக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் இன்னும் முழுசாத் தெரியவில்லை. ஒருசில பகுதிகள்  செய்து பார்க்கலாம். போகப்போகத்தான் தெரியும்.

மேலும் உங்களைப் பற்றி அறியலாமா?

காட்டுல மேட்ல திரிஞ்சு நாலு புத்தகத்தைப் படிச்சிட்டு சென்னைக்கு வந்தேன். லட்சம் பேர் சினிமாவுக்கு வரணும்னு திரியுற இடத்தில் நமக்கு ஒரு
ஸ்ட்ராங்கான இடம் கிடைச்சதே பெரிய விஷயம். எளிமையான வாழ்க்கைதான் வாழ்றேன். கொரோனா டயத்தில் ஊருக்குப் போய் மனைவி லட்சுமி, பிள்ளைங்க முகிலன், உதயனோடு வயலில் இறங்கி வேலை செய்தேன். சினிமாவை விட்டால் நமக்குப் பிடிச்சது விவசாயம்தான்.

நா.கதிர்வேலன்