ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்



கடந்த வருடம் வெளியாகி மெகா ஹிட் அடித்த மலையாளப் படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. காலம் காலமாக சொல்லப்படும் அப்பா - மகன் கதைதான். ஆனால், டெக் உலகுக்குத் தகுந்த மாதிரி மாற்றப்பட்ட புது வெர்ஷன் இது. கேரளாவில் உள்ள பய்யனூரே ஒதுங்கி நிற்கும் ஓர் ஆள் பாஸ்கரா. வயதானவர்; பிடிவாதக்காரர்.

அவருக்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்த சுப்ரமணியன் என்ற ஒரு மகன் இருக்கிறான். அவன் படிப்புக்குத் தகுந்த வேலை கேரளாவில் இல்லை. வெளியூர்களில் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வேலைக்குச் செல்வான்.

பாஸ்கராவுக்குத் தனியாக இருக்க பயம். அதனால் மகன் வேலைக்குச் சேர்ந்த பத்து நாட்களுக்குள் போன் செய்து வேலையை விட்டு விட்டு ஊருக்கு வரும்படி சொல்வார். மகனும் வேறு வழியில்லாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு வந்து சும்மா இருப்பான்.

இது ரொம்ப நாட்களாகவே நடக்கும் வழக்கம். சுப்ரமணியனுக்கு ரஷ்யாவில் உள்ள ஜப்பானிய கம்பெனியில் வேலை கிடைக்கிறது. சம்பளம் லட்சங்களில். தயங்கித் தயங்கி அப்பாவிடம் புது வேலையைப் பற்றி சுப்ரமணியன் சொல்கிறான். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு அரை மனதுடன் ரஷ்யாவுக்குக் கிளம்பி விடுகிறான். அப்பாவைக் கவனித்துக் கொள்ள உதவியாளரை வேலைக்கு வைக்க, பாஸ்கரா இன்னும் கடுப்பாகிறார். மகன் வேலைக்கு வைத்த எல்லா உதவியாளர்களையும் துரத்தி விடுகிறார். தனியாக இருந்து வெறுமையில் தவிக்கிறார் பாஸ்கரா.

இதை அறியும் சுப்ரமணியத்தால் ரஷ்யாவில் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. அங்கேயும் வேலையைவிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பலாம் என்று நினைக்கிறான். ஆனால், அவன் வேலை செய்யும் இடத்தில் அறிமுகமாகும் தோழி ஒருத்தி கொடுக்கும் ஐடியாவால் ஒரு ரோபோவை அப்பாவுக்குத் துணையாக அனுப்புகிறான்.

நாட்கள் செல்லச் செல்ல ரோபோவுக்குக் குஞ்சப்பன் என்று பெயர் வைத்து அதனுடன் ஒன்றிவிடுகிறார் பாஸ்கரா. ஒரு இயந்திரம் எப்படி உயிருள்ள ஒரு மகனின் இடத்தைப் பிடிக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது திரைக்கதை.  

கடைக்கோடி கிராமத்தில் வாழ்கின்ற சாமான்ய மனிதனின் வாழ்க்கைக்குள் டெக்னாலஜி எப்படி புகுந்து அவனது குடும்பத்தில் ஓர் அங்கமாக மாறிவிடுகிறது என்பதையும், முதுமையின் வெறுமையையும். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன். இவரது முதல் படம் இது என்பது ஆச்சர்யம்.‘Robot & Frank’ என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்கிறார்கள்! அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது.