ஆந்திராவை மயக்கிய விளந்தை ஜரிகை காட்டன்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                         அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது விளந்தை. ஊரின் பெயரைச் சொன்னாலே ஆந்திரத்துப் பெண்களின் உள்ளம் குளிர்ந்து போகும். அந்த அளவுக்கு அப்பெண்களை வளைத்துப் போட்டிருக்கிறது இங்கு உற்பத்தியாகும் ஜரிகை காட்டன் சேலை!

முதலியார்களும் தேவாங்க செட்டியார்களும் நிறைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 50 நெசவாளர்கள் ஜரிகை காட்டன் சேலை நெய்கிறார்கள். தொடக்கத்தில் வேட்டி நெசவுதான் இக்கிராமத்தின் வாழ்வாதாரம். 120ம் நம்பர் காட்டன் நூலில் பளபளக்கும் விளந்தை வேட்டிக்கு தமிழகம் கடந்து டெல்லி வரை வாடிக்கையாளர்கள் உண்டு. காலப்போக்கில் வேட்டி வியாபாரம் நசிய, ஜரிகை காட்டன் சேலைக்கு மாறினார்கள். இன்று ஊருக்கே அது அடையாளம்.

80 மற்றும் 100ம் நம்பர் காட்டன் நூலில் நெய்யப்படும் சேலையில் 90 பள்ளு அளவுக்கு ஜரிகையால் அழகூட்டுகிறார்கள். சீரான நீளத்தில் ஜொலிக்கும் பார்டர்கள் சேலையின் அழகைக் கூட்டுகின்றன. சில ரகங்களில் உடலையும் ஜரிகையால் அலங்கரிக்கிறார்கள். காட்டன் நூலை பாவாகவும் ஜரிகையை ஊடையாகவும் கலந்தும் நெய்கிறார்கள்.

ஜரிகையில் பலவகை உண்டு. மலிவான ஜரிகைகள் அதிகமாக பளபளக்கும். ஆனால், சில நாட்களிலேயே கறுத்துப்போகும். இதை ‘டெக்ஸ்டர்டு ஜரிகை’ என்கிறார்கள். பட்டுநூலில் தங்கம் மற்றும் வெள்ளியைப் பூசி உருவாக்கப்படுவதே தரமான ஜரிகை. 0.6 சதம் தங்கமும், 53 முதல் 57 சதம் வெள்ளியும், 24 சதம் பட்டும் கலந்து உருவாக்கப்படும் ஜரிகையே தரமானது. இது ஒரு கிராம் 70 ரூபாய்.

ஒருகாலத்தில் இங்கு சேலைகள் ஒரிஜினல் வெள்ளி ஜரிகையால்தான் நெய்யப்பட்டன. இச்சேலை நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் கோவிந்தசாமி செட்டியார். வேட்டி வியாபாரத்துக்காக ஆந்திரா சென்றபோது, அங்கு ஜரிகை காட்டன் சேலைகளுக்கு உள்ள வரவேற்பைப் பார்த்து, அந்த நுட்பத்தை கற்றுவந்து விளந்தையில் விதைத்தார். ஆந்திராவில் நெய்ததைவிட மென்மையாகவும், தரமாகவும், டிசைனாகவும் இருந்ததால், விளந்தை தயாரிப்பை விரும்பத் தொடங்கினர் ஆந்திரப் பெண்கள். 

‘‘மாசம் ஆயிரம் சேலைக்கு மேல ஆந்திராவுக்கு அனுப்புவோம். இப்பதான் கம்ப்யூட்டர், ஜக்கார்டு பெட்டியெல்லாம். அப்போ கை டிசைன்கள்தான். அன்னம், கிளின்னு அழகழகா தறியில நெய்வோம். அதனாலதான் இன்னைக்கு டெக்ஸ்டர்டு ஜரிகை போட்டு நெய்தாலும், ஆந்திரப் பெண்கள் நம்ம புடவையை விரும்புறாங்க’’ என்கிறார் நெசவாளர் சதானந்தம். கோவிந்தசாமி செட்டியாரின் மகனான இவரிடம் 15 தறிகள் உள்ளன. ஆசிரியர் வேலையை உதறிவிட்டு நெசவு செய்தவர்.

விளந்தை சேலைகளின் சிறப்பே, அதன் நம்பமுடியாத மென்மைதான். 200 கிராம் எடை என்பதால் காற்று போல இருக்கிறது. நல்ல ஜரிகை வேலைப்பாடுள்ள சேலைகள் என்றால், கால் கிலோ. இப்போது வெள்ளி ஜரிகை நெசவு முற்றிலும் மறைந்து விட்டது. சற்று தரம் குறைந்த டெக்ஸ்டர்டு ஜரிகைதான். ஆனால், வேலைப்பாடுகளில் தனித்தன்மை மினுமினுக்கிறது. புட்டா, ஜரிகை வேலைப்பாடுகளுக்கு தகுந்தவாறு 400 முதல் 1500 ரூபாய் வரை விற்கிறார்கள்.

‘‘வெள்ளி ஜரிகை போட்டப்ப ஒரு நாளைக்கு ஒரு முழம்தான் நெய்யமுடியும். ஆனா, நல்ல கூலி. ஆந்திரா தலைவர்கள் வீடுகளுக்கு எல்லாம் இங்கேயிருந்துதான் சேலைகள் போவும். அப்போ எனக்கு வாத்தியார் வேலை கிடைச்சுச்சு. சம்பளம் 45 ரூபா. தறியில நின்னா 65 ரூபா. ‘தறியிலயே நில்லுடா, வேலை வேண்டாம்’னுட்டார்  எங்க அய்யா’’ என்று சிரிக்கிற ராதாகிருஷ்ணன், ‘‘ஜரிகை காட்டன் சேலை பூப்போல உடம்புல கிடக்கும். வதைக்காது. நல்ல ஜரிகை வேலைப்பாடுள்ள சேலையைக் கட்டிக்கிட்டு நின்னா பட்டு தோத்துப்போகும்’’ என்கிறார்.
ஜரிகை வேலைப்பாடு இல்லாமல் பிளெய்ன் காட்டன் சேலைகளும் நெய்கிறார்கள். இளம்பெண்களை ஈர்க்கும் வகையில் கம்பீரமாக இருக்கின்றன இவை. 

ஆந்திராவில் இருந்து வியாபாரிகள் நேரடியாகவே வந்து சேலைகளை அள்ளிச் செல்கிறார்கள். வாங்கும் விலையை விட இன்னொரு மடங்கு லாபம் வைத்து விற்கிறார்கள். அற்புதமான ஜரிகை வடிவமைப்பு. நம்பமுடியாத மென்மை. உள்ளத்தைக் கவரும் மிக்ஸிங் வண்ணங்கள். வதைக்காத விலை. எளிதான பராமரிப்பு. ஜரிகை காட்டனுக்கு பெண்கள் மயங்க வேறென்ன காரணங்கள் வேண்டும்!

எங்கே கிடைக்கும்?

‘‘சென்னையில் தில்லையாடி வள்ளியம்மை, வானவில் உள்ளிட்ட கோ&ஆப்டெக்ஸ் நிறுவன வளாகங்களில் கிடைக்கும். சில பெரிய ஜவுளிக்கடைகளிலும் கிடைக்கும். ஜவுளிக் கடைகளில் ‘விளந்தை ஜரிகை காட்டன்’ என்று விற்பதில்லை. ஆந்திரா காட்டன், வேங்கடகிரி காட்டன் என்று ஆந்திரா பேனரில் விற்பனை செய்கிறார்கள்’’ என்கிறார் சதானந்தம். சேலை வாங்க விரும்புபவர்கள் 94438 43997, 04331&242532 ஆகிய எண்களில் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.
வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்