தமிழ்ப் பண்ணைக்கு நூற்றாண்டு!



இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர், பதிப்பக ஆசிரியர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா எனப் பன்முகத் திறன் கொண்ட ஆளுமை சின்ன அண்ணாமலை.
ஆனால், அவரைப் பற்றி இன்றுள்ள தலைமுறைக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.1942ல் ஆங்கிலேய அரசு இவரை திருவாடானை கிளை சிறையில் அடைத்தபோது சுமார் 20 ஆயிரம் பேர் ஒன்று திரண்டு சிறையை உடைத்து இவரை விடுதலை செய்துள்ளனர்.

அந்தளவுக்கு விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர். மகாத்மா காந்தியாலும், ராஜாஜியாலும் பாராட்டப் பெற்றவர். அப்படிப்பட்டவரின் நூற்றாண்டு இது.ஆனால், கொரோனாவால் அந்த நிகழ்வு நடக்கவில்லை.
இந்நிலையில், அவரின் நினைவுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நல்லி குப்புசாமி செட்டியார்.‘‘தேச பக்தரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான சின்ன அண்ணாமலையை என் தந்தையைப் போல் மதித்து வந்தேன். அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

அவர் மகன் கருணாநிதியும், நானும் தி.நகர் ராமகிருஷ்ண மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தோம். எங்கள் கடைக்கு அடுத்த கட்டடத்தில்தான் அவர் நடத்திய ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம் இருந்தது. எனவே வீட்டுக்குத் திரும்பும் போது அந்தப் பதிப்பகத்திற்குச் சென்று வருவேன்.

அந்தக் காலத்தில் வெவ்வேறு தலைப்புகளில் ஆன சின்னஞ் சிறு புத்தகங்களை நேர்த்தியாக அச்சிட்டு குறைந்த விலையில் வெளியிட்டு வந்தார். பல தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு அவரே ஆசான். அவர் நடத்திய ‘தமிழ்ப் பண்ணை’ தமிழ்ப் பதிப்பகங்களில் பலவகைகளில் முன்னோடி யாகத் திகழ்ந்தது.

நகரத்தாரும், பிறரும் பதிப்புத்துறையில் நுழைய அவர் ஆதர்ச வழிகாட்டியாக இருந்தார். புத்தகங்களில் வாசகர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தம் பதிப்பக வாசலில் ஒரு கரும்பலகையில் புதிய புத்தகங்களைக் குறிப்பிட்டு அவற்றில் உள்ள செய்திகளை சாக்பீசால் எழுதிவைத்திருப்பார்.

நான் அந்த வாசகங்களைப் படித்திருக்கிறேன். படிப்பவர்களை புத்தகத்தை வாங்கச் செய்யும் விளம்பர உத்தி அது.வயதில் பெரியவர், என் தந்தை போன்றவர் என்ற காரணத்தினால் அவரிடம் நெருங்கிப் பழகியதில்லை. தொலைவில் இருந்தே தரிசனம். சில சமயம் அவர் மகனுடன் சேர்ந்து அருகில் நிற்க நேர்ந்தாலும் பேசுவதற்குத் தயங்கி இருக்கிறேன். அதற்கு அவர் மீதுள்ள மரியாதையும், என் வயதும் காரணங்கள்.

பதினாறு வயதில் கடைக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்ட போது ராஜாஜி போன்ற பெரியவர்கள் அங்கு வந்து சென்றதைப் பார்த்திருக்கிறேன்.
தேசபக்தரான சின்ன அண்ணாமலை சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும்படி சில புத்தகங்களை எழுதினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவாளிகள் அவர் தன் புத்தகங்கள் மூலம் வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்ட அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இவரது ‘பூட்டை உடையுங்கள்’ என்ற நூலின் தலைப்பும் உட்கருத்தும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. முட்டுக்கட்டையை நீக்குங்கள் என்று பொருள்படும் Remove the deadlock என்ற ஆங்கிலச் சொற்றொடரை, ‘பூட்டுக்களை உடையுங்கள்’ என்று தமிழில் எழுதினார். இவர் சிறைப் பூட்டை உடைக்க சிறைவாசிகளைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு மூன்றுமாத கால தண்டனை விதித்தார்.இதுபற்றி சின்ன அண்ணாமலை ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்ற தன் புத்தகத்தில், ‘‘வழக்கு எழும்பூர் பிரதம மாகாண மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்றது. மாஜிஸ்ட்ரேட் ஒரு தெலுங்கர். பெயர் கோடீஸ்வர ராவ். சுத்தமாகத் தமிழ் தெரியாது.

‘பூட்டை உடையுங்கள்’ என்பதை அவருக்கு Break open the Lock என்று மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார்கள். இதை வைத்துக்கொண்டு அவர், ‘எதுக்கு மேன் ஜெயில் பூட்டை உடைக்கும்படி சொன்னே?’ என்று கேட்டார்.

நான் அவருக்குப் பணிவுடன், ‘பூட்டை உடையுங்கள் என்பதற்கு நான் கொள்ளும் அர்த்தம் Desolve the dead lock என்பதாகும்’ என்றேன்.அவர் அதை ஒப்புக்கொள்ளாமல், ‘பூட்டை’ என்றால் ‘lock’, ‘உடை’ என்றால் ‘Break’ என்று அர்த்தம் செய்து சொன்னார்.

சர்க்கார் வக்கீலும் என்னைக் கைதுசெய்த இன்ஸ்பெக்டரும் மாஜிஸ்ட்ரேட்டுக்குத் தலையாட்டினார்கள். உடனே நான் ‘Kicked the bucket’’ என்றால் ‘இறந்து போனான்’ என்று அர்த்தமே தவிர ‘பக்கெட்டை உதைத்தான்’ என்றா சொல்வது?’ என்றேன்.

கோர்ட் சிரித்தது. மாஜிஸ்ட்ரேட்டும் சிரித்து விட்டு, ‘வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?’ என்று கேட்டார்.உடனே நான் ‘நீங்கள் தெலுங்கர். உங்களுக்குச் சரியாகத் தமிழ் தெரியவில்லை. என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரோ கன்னடக்காரர். அவருக்கும் தமிழ் தெரியாது. கேஸ் நடத்த வந்த சர்க்கார் வக்கீலோ மலையாளி. நான் வெளியிட்டிருக்கும் புத்தகமோ தமிழ். ஆகவே, தமிழ் தெரிந்தவர்கள் இந்த வழக்கை நடத்தவேண்டுமென்று விரும்புகிறேன்’ என்றேன்.

மாஜிஸ்ட்ரேட்டுக்கு கோபம் வந்துவிட்டது. ‘வாட் டமில் - டமில்!’ என்று கூறி ஆறு மாத சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கிவிட்டார்.
என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரே என்னிடம் வந்து ‘காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே! மாஜிஸ்ட்ரேட் மூன்று மாதம்தான்தண்டனை கொடுப்பதாக இருந்தது. ஆனால், நீங்கள் தமிழ் கிமிழ் என்று பேசி ஆறு மாதம் வாங்கிக் கொண்டீர்கள்’ என்று அனுதாபப்பட்டார்.
நான் சென்னை சிறைக்குப் போனதும் அங்கிருந்த பேராசிரியர் என்.ஜி. ரங்காவிடம் மாஜிஸ்ட்ரேட் விஷயம் சொன்னேன்.

அவர் கூறியது: ‘தாய் நாட்டுப் பற்றுக்காக மூன்று மாதம், தாய் மொழிப் பற்றுக்காக மூன்று மாதம். ஆக ஆறு மாதம் சரிதான்’ என்றார்...’ இவ்வாறு தன் நூலில் சின்ன அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.பின்னர் ஒருகட்டத்தில் சின்ன அண்ணாமலையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட போது அதற்கான தொகை அவரது மகன் கருணாநிதியிடம் தரப்பட்டது. அதைத் தந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள்.

அப்போது முதல்வர் சொன்னாராம்: ‘கருணாநிதி, உன் அப்பா என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார். அவரது நூல்களுக்கான தொகையை இந்த கருணாநிதிதான் அவர் மகனான உன்னிடம் கொடுக்கிறான்!’முதல்வர் கருணாநிதியும் நகைச்சுவையாக பேசுபவர் என்பதும் நமக்குத் தெரிந்ததே. இந்த இருவரும் எதிர் எதிர் முகாம்களில் இருந்தாலும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ன அண்ணாமலை அவர்கள் ராஜாஜிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவரது நூல்களை பதிப்பித்திருக்கிறார். அவரது நட்பு வட்டம் பெரியது. அதிலிருந்த எல்லோருமே அறிவு ஜீவிகள். தன் நகைச்சுவையான பேச்சின் காரணமாக மேடைப் பேச்சிலும், கலந்துரையாடல்களிலும் அவர் எப்போதுமே நடுநாயகமாக இருந்திருக்கிறார்.

அவரது புகழ் நூற்றாண்டுகளையும் தாண்டி நிற்கும். ஏனென்றால் அவரது பணி தேசபக்தி, இலக்கியம், பதிப்புலகம், மேடைப்பேச்சு ஆகிய பல துறைகள் சார்ந்தது. பெயர்தான் சின்ன அண்ணாமலை. ஆனால், புகழில் அவர் ஒரு பெரிய அண்ணாமலை...’’ நெகிழ்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார்.

பனகல் பார்க் மார்க்கெட்டை உருவாக்கியவர்!

‘‘என் தாத்தா சின்ன அண்ணாமலை 1920ம் வருடம் ஜூன் 18ம் தேதி செட்டிநாட்டிலுள்ள சிறுவயல் என்ற கிராமத்தில் பிறந்தார். அவரின் இயற்பெயர் நாகப்பன். பிறகு தாத்தாவை தேவகோட்டையிலுள்ள ஒரு குடும்பத்தினருக்கு தத்து கொடுத்துவிட்டனர். இதனால், தாத்தாவின் பெயர் அண்ணாமலை என்றானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தாத்தாவைப் பெற்ற அப்பா, அம்மாவின் பெயர் நாச்சியப்ப செட்டியார், மீனாட்சி ஆச்சி. தத்தெடுத்த அப்பா, அம்மாவின் பெயரும் அதேதான்!

நாமக்கல் கவிஞருக்கு பணமுடிப்பு கொடுக்கும் விழாவில்தான் மூதறிஞர் ராஜாஜி, ‘சின்ன அண்ணாமலை’ என தாத்தாவுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார். இதை தாத்தா தன்னுடைய ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்…’ நூலில் குறிப்பிடுகிறார். பாட்டி பெயர் உமையாள் ஆச்சி.

தாத்தாவுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் கருணாநிதிதான் என் அப்பா. அடுத்து, சித்தப்பா ராமய்யா, அத்தை மணிமேகலை. இப்போது அத்தை மட்டுமே இருக்கிறார்.

எனக்கு பாலகங்காதர திலகர் என தாத்தாதான் பெயர் வைத்தார். ஆனால், நான் ஒரு ராசிக்காக மீனாட்சிசுந்தரம் என மாற்றி வைத்துக் கொண்டேன். இப்போது, மீனாட்சி சுந்தரம் என்கிற திலக் எனச் சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.தாத்தா சினிமாவில் ஜெமினி, சாவித்திரியை வைத்து ‘ஆயிரம் ரூபாய்’ என ஒரு படம் எடுத்தார். பிறகு, கல்யாண்குமார், ஜமுனா, நாகேஷ் நடிப்பில் ‘கடவுளின் குழந்தை’ எடுத்தார். அடுத்து, ‘தங்கமலை ரகசியம்’, ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.

இதில் முக்கியமான ஒரு விஷயம், ‘திருடாதே’ படம் தாத்தா எடுத்தது. ஆனால், அந்நேரம் எம்ஜிஆருக்கு காலில் ஒரு பிரச்னை. மூன்று மாதம் ஓய்வெடுக்க வேண்டிய நிலை. அப்போது அவர் தாத்தாவைக் கூப்பிட்டு, ‘நீங்க நிறைய பைனான்ஸ் வாங்கியிருக்கீங்க. வட்டிக்குப் பணம் கட்டணும். அதனால, நான் இந்தப் படத்தை ஏ.எல்.சீனிவாசன்கிட்ட நல்ல விலைக்கு வித்துக் கொடுக்கிறேன். ஏஎல்எஸ்கிட்ட பேசுங்க’னு சொன்னார். நல்லதொரு பணம் வாங்கிக் கொடுத்தார்.

அந்தக் காலத்தில் அவர் நடத்தின ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகத்திற்கு வராத கவிஞர்களே இல்லை. அந்தளவுக்கு தாத்தா தன் பணியைச் செய்து வந்தார். பனகல் பார்க் மார்க்கெட் கூட தாத்தாவால்தான் உருவானது. அதிகாரிகள் அந்த இடத்தை அகற்றியதும், முதல்வர் காமராசரிடம் பேசி கட்டடமாக கட்டித் தர ஏற்பாடு செய்தவர் தாத்தா சின்ன அண்ணாமலை.

அவர் அறுபதாவது கல்யாணம் 1980ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி அவர் பிறந்தநாள் அன்று நடந்தது. முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர் தலையில் தண்ணீர் ஊற்றுகிறார். அந்நேரம், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனே, நாகேஷ், ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் தூக்கிக்கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ராஜா சர் முத்தையா செட்டியாரும், முதல்வர் எம்ஜிஆரும் ஒருமணி நேரத்தில் விழாவிற்கு வரப்போவதாகத் தகவல்.

அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. பிறந்தநாள் அன்றே இறந்துவிட்டார் தாத்தா.இந்த வருடம் அவருக்கு நூற்றாண்டு. இதை நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடத்த வேண்டும் என இருந்தேன். ஆனால், கொரோனாவால் முடியாமல் போய்விட்டது. அடுத்த ஆண்டு 101வது பண்ணலாம் என நினைத்திருக்கிறேன்...’’ என்கிறார் சின்ன அண்ணாமலையின் பேரனான மீனாட்சி சுந்தரம் என்கிற திலக்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்