தோள் கொடுக்கிறார்கள் இரு தமிழர்கள்!



கொரோனா காலம்.. துபாயில் தவிக்கும் இந்தியர்கள்...

துபாயிலிருந்து ஆசிப்மீரான்


நம் மண், குடும்பம், உறவுகள், நண்பர்களை பிரிந்து அயல்தேசம் வருவதென்பதன் நோக்கம் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதே தவிர வேறொன்றுமில்லை. அயல்தேச புலம் பெயர் வாழ்வு என்பது திரையிசைப் பாடல்களில் வரும் வானுயுர கட்டடங்களும், பொங்கி வழியும் நீரூற்றுகளும், பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலைகளும் மட்டுமே கொண்ட வாழ்வல்ல. அது புறத்தோற்றத்திற்கு அப்படியோர் மயக்கத்தைத் தரலாம்.

பெரும்பாலான தமிழக இளைஞர்களின் அயல்தேச கனவுகள் அனைத்தும் வளைகுடா பாலைவன சுடுமணலில் பொசுங்கிப் போவதாகவே இருக்கிறது என்ற அவல உண்மையை இங்கு வந்த எத்தனையோ பேர் காலந்தோறும் எடுத்துக் கூறினாலும், ஒரு திர்ஹாமுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கூடிக் கொண்டிருப்பதாலேயே இந்த அவல வாழ்வை எதிர்பார்த்து துபாய், ரியாத், கத்தார், குவைத் நகரங்களில் ஒற்றை அறையில் அடுக்கப்பட்ட பல அடுக்குக் கட்டில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறது இந்திய இளைஞர் சமூகம்.

மாதம் தவறாமல் வரும் சம்பளத்திற்காகவும், ஓவர் டைமுக்காக வரும் கூடுதல் வருமானத்திற்காகவும் இரவு பகல் பாராது பணிபுரிகின்றனர் லட்சக்கணக்கானோர்.அகில உலகத்தை அச்சுறுத்திய, இன்றுவரை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வளைகுடா பிரதேசத்தையும் மூன்று மாதங்களுக்கு மேலாக முடக்கிப் போட்டது. நுண்ணுயிரியின் வேகமும், உயிரின் மீதான பயமும் அனைத்துத் தொழில்களை, தொழிற்சாலைகளை, வணிக நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்தியது.

இதனுடைய நேரடியான தாக்கம் ‘பங்கர் பெட்’களில் உறங்கிய தமிழர்களை, இந்தியர்களை, மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்த குடும்பத்தினரை, பெண்களை, முதியவர்களை என்று எந்தவிதத் தர நிர்ணயமும் இல்லாமல் பாதித்தது. ஓர் எதிர்பாராத பொருளாதார இக்கட்டில் இது பெரும்பாலானோரை நிறுத்தியது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் துபாய்க்கு சுற்றுலா விசாவில் வேலை தேடி வந்து தங்களின் கையிருப்பையும் இழந்து விட்டுத் தெருவில் நின்ற வேலையில்லா பட்டதாரிகளே.

இவர்களுக்கான தேவைகளை யாரிடம் கேட்பது... எப்படிக் கேட்பது... என்பதைக் கூட அறியாமல் தங்களின் இருப்பிடத்திற்கான வாடகைக்கும் பணமில்லாமல் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களிலும், மரத்தின் நிழலிலும் வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த கோடை காலத்தில் 40 முதல் 50 டிகிரி கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாடு திரும்பவும் முடியாமலும், வேலை கிடைக்காமலும் பலரும் அல்லாடினர்.

சமீபத்தில் துபாய் பேருந்து நிலையத்தில மரத்தின் அடியில் உறங்கிய ஒரு தமிழ் இளைஞர் தன் உயிரையும் இதனாலேயே இழக்க நேர்ந்தது மிகப் பெரும் கொடுமை... இங்கிருக்கும் தமிழர்களை ஆட வைத்த நிகழ்வு இது.

பல சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்தியா திரும்ப வேண்டியவர்களுக்கான விமான சேவைகளுக்காகப் பணிபுரிந்து கொண்டிருந்த சூழலில், இம்மாதிரியான குரலற்ற இளைஞர்கள், பெண்களுக்கான அடிப்படை தேவைகளுக்காகத் தன்னலமற்று, இடையறாது சமூகப் பணியாற்றி வருகின்றார் அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் பொதுச் செயலாளரும், மயிலாடுதுறையைச் சார்ந்தவருமான ஃபிர்தவ்ஸ் பாஷா.

இந்தியத் தூதரகத்தோடு இணைந்து செயல்படுவதோடு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது, தங்க இடம் ஏற்பாடு செய்வது, பயணம் செல்ல உதவுவது என்று இவரது உதவிக்கரம் நீள்கிறது.இவரது அயராத உழைப்பினாலேயே பல தென்னகத் தமிழர்களும் கேரளா வழியாகத் தமிழகம் சென்றிருக்கின்றனர்.

ஃபிர்தவ்ஸ் பாஷா தங்கள் அமைப்பு மற்றும் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் நிர்க்கதியாகி நிற்கும் பலருக்கும் நேரம் பார்க்காமல் உதவிகளைச் செய்து வருகிறார். எந்த நிமிடம் ஃபிர்தவ்ஸ் பாஷாவுக்கு அழைப்பு விடுத்தாலும் கொரோனா பாதித்தவர்களுக்கான மருத்துவ உதவி, அவர்களுக்கான பொருளாதார உதவி, நாடு திரும்ப வேண்டியவர்களுக்கான தூதரக அனுமதி, விமானப் பயணச் செலவுகளை ஏற்பாடு செய்வது என தினந்தோறும் பலருக்கு உதவி செய்து வருகிறார்.

மிகக் குறைந்த சம்பளம் வாங்கிய இளைஞர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனை சிகிச்சை முதல் அவர் இந்தியா திரும்ப வேண்டிய விமான செலவு வரை ஏற்பாடு செய்து முகமறியா ஒரு குடும்பத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தவர் ஃபிர்தவ்ஸ்.
எந்த அமைப்பின் பின்புலமுமற்று நண்பர்களின் உதவியுடன் செயல்படும் சென்னையைச் சார்ந்த கவுசர், இன்னொரு தமிழ் இளைஞர்.

இவர், துபாயில் இரவு நேரம் பணிபுரிந்து கொண்டே பகல் நேரம் முழுமையும் ஆற்றும் சமூகக் கடமைகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அடிப்படைத் தேவையான உணவற்றவர்களுக்கான ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான உணவு தேவை, இருப்பிடமற்றவர்களுக்கான இருப்பிட வசதி முன்னெடுப்பு, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களுக்கான உதவி... என அனைத்தையும் செய்கிறார்.

நேரடியாகச் சென்று சந்தித்து, அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை சூப்பர் மார்கெட்களில் அவர்களையே தேர்ந்தெடுக்க வைத்து பில்லை செட்டில் செய்கிறார், கவுசர். சமீபத்தில் மூன்று தமிழ் பட்டதாரி இளைஞர்கள் ஊரில் உள்ள ஏஜெண்டால் தூண்டப்பட்டு துபாய் வந்திறங்கினர்.

ஆனால், வேலை கிடைக்காமல் நிர்க்கதியான நிலையில் இரவுகளில் கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடி கட்டடங்களிலும், பகலில் பொது கழிப்பிடங்களையும், பேருந்து நிலையங்களிலும் கழித்தனர். ஒரு நேர உணவாக ஒரு குப்பூசை (ரொட்டித் துண்டு) மட்டும் உணவாக எடுத்துக் கொண்டனர்.

இந்தச் செய்தியை அறிந்ததும் அவர்களை நடுச்சாமத்தில் சந்தித்து, தன் காரிலேயே அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்து, அவர்கள் இந்தியா திரும்புவதற்கான பணிகளை முடித்தார்.

இப்போது அவர்கள் அரசின் கட்டுப்பாடுகளால் திருச்சியில் தங்கியிருப்பதாக உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கின்றனர். இப்போது கூட ஆந்திர, கேரளா இளைஞர்கள் இருவரை ஊருக்கு அனுப்புவதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே உணவுத் தேவைகளையும் இடையறாது செய்து வருகிறார்.

நண்பர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் ‘உங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள், அதிகம் அலைய வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்ததால், ‘‘இப்போது வரை நான் முன்னெச்சரிக்கையுடன், கையுறை, முக கவசத்துடன் தனிநபர் இடைவெளியுடனே உதவி தேவைப்படுவோர்க்கு உதவி வருகிறேன். உதவி என்று கேட்பவர்களுக்கு தட்டிக் கழிக்காமல் என்னால் இயன்றதைத் தொடர்ந்து செய்வேன்...’’ எனப் பதில் சொல்கிறார் கவுசர்.

தமிழர்களாக இருந்தாலும் இந்த கொரோனா காலத்தின் உதவிகளை மொழி, இனம், மதம் கடந்து அனைவருக்கும் பாரபட்சமின்றி தனிநபர்களாக செய்து வருவதன் மூலம் ஃபிர்தவ்ஸ் பாஷாவையும், கவுசரையும் அமீரகத் தமிழ்ச் சமூகமே வியந்து பார்க்கிறது.அவர்களைக் காலம் கடந்து பாராட்டவும், நினைவில் கொள்ளவும் இந்த அமீரகத் தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது.