திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் பீஸ் வொர்க் மாதிரி ஐடி இண்டஸ்ட்ரி மலிவாகும்!



கொரோனாவுக்குப் பிறகு ஐடி துறை எப்படியிருக்கும் என்ற கேள்வியுடன் மென்பொறியாளர்களுக்கான தொழிற்சங்கத்தின் (FITE  Forum for IT Employee) முழுநேர செயல்பாட்டாளரான பரிமளாவைச் சந்தித்தோம். இனி வருபவை அனைத்தும் அவரது வார்த்தைகளில்...

இந்தியாவில் மட்டும் 40 லட்சம் பேர் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள். இந்த இரண்டு மாத லாக்டவுனில் இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருவது புதுவித அனுபவத்தையே கொடுத்துள்ளது. மற்ற நிறுவன ஊழியர்களைப் போல் கண்டிப்பாக அலுவலகம் சென்றுதான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை ஐடி ஊழியர்களுக்கு இல்லை.

இணையம் கைகளில் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் பணியாற்றலாம்.இவ்வளவு பெரிய ஒர்க் ஃபோர்ஸை வீட்டில் இருந்தே வேலை பார்க்க வைத்த இந்த லாக்டவுன் நேர அனுபவத்தை நாஸ்காம் (NASSCOM) எனப்படும் ஐடி நிறுவனங்களின் அசோசியேஷன் ஆராய்ந்ததில், ஐடி நிறுவனங்கள் மட்டுமே தங்கள் பரிவர்த்தனையை எந்த இடையூறுமின்றி நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

இந்த நீண்ட லாக்டவுன் ஐடி நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை. வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் இடையூறில்லை என்றே வாடிக்கையாளர்களிடம் இருந்து ஃபீட்பேக் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதால் புரொடக்டிவிட்டியும் அதிகரித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம், 25 சதவிகிதம் ஊழியர்கள் அலுவலகம் வருவார்கள்; மீதி 75 சதவிகிதம் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என ஏற்கனவே அறிவித்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு இனி எதிர்காலத்தில் 50 முதல் 75 சதவிகிதம் வரை ஊழியர்களை வீடடிலிருந்தே வேலை செய்ய வைப்பதற்கான வாய்ப்பை நோக்கி ஐடி இண்டஸ்ட்ரி நகரத் தொடங்கியுள்ளது.

குறைந்தது 25 சதவிகித ஊழியர்கள் அலுவலகம் வந்தால் போதும். மீதி 75 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்து பணியாற்ற தொழிலாளர் சட்டங்களில் எந்தெந்த விதத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என ஆராயத் தொடங்கிவிட்டார்கள்.ஊழியர்களைப் பொறுத்தவரை ஒருவர் ஒரு நிறுவனத்தில் மட்டும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். அல்லது ஒரே ஆள் ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ராஜெக்ட்ஸை கையில் எடுத்து முடித்துக் கொடுக்கலாம்.

இது ஃப்ரீலான்ஸிங் மற்றும் கான்ட்ராக்ட் பேஸில் வேலை செய்வது போன்ற நிலையை நோக்கி ஐடி ஊழியர்களை நகர்த்தத் தொடங்கி, ப்ராஜெக்ட்டுக்கு ஏற்ற கூலிக்கு அழைத்துச் செல்லும். ஏற்கனவே ஃப்ரீலான்ஸ் செய்பவர்களும் ஐடி துறையில் இருக்கிறார்கள். அதாவது ப்ராஜெக்டை பிட் (bit) பண்ணுவது. யார் குறைவாக பிட் பண்ணுவார்களோ அவர்களுக்கே அந்த ப்ராஜெக்ட். அதாவது தன் உழைப்பை குறைந்த விலைக்கு விற்பவருக்கே வாய்ப்பு கிடைக்கும்! ஓலா, ஊபெர் நிறுவனங்கள் மாதிரியான கிக் வொர்க்கர்ஸ் (gig workers) திட்டங்களும் இதில் அடங்கும்.

ஐடி ஊழியர்களுக்கான பிஎஃப் சிஸ்டத்தை நீக்கிவிட்டு நேஷனல் பென்ஷன் திட்டம் மாதிரியான முறையினை கொண்டு வரலாமா என பரிசீலித்து வருகிறார்கள். ஆக, இனி ஐடி ஊழியர்களுக்கு பணி நிரத்தரம், பணிப் பாதுகாப்பு இல்லா நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பக்கம் வேலை இல்லாத் திண்டாட்டமும் இன்னொரு பக்கம் அந்த வேலையைப் பெறுவதற்கான போட்டியும் நிலவும்.

திருப்பூர் மாவட்ட பின்னலாடை உற்பத்தியாளர்களின் பீஸ் வொர்க் மாதிரி, ஐடி இண்டஸ்ட்ரி மலிவாகப் போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. வேலை தனக்கு நிரந்தரமில்லை என்ற அச்சத்தையே இளைஞர்கள் மத்தியில் இது உருவாக்கும்.ஒரே வேலைக்கு அமெரிக்காவில் கொடுக்கும் சம்பளம் வேறு, இந்தியாவில் வழங்கப்படும் தொகை வேறு. இந்தியாவிலேயே நகரத்துக்கும், சிறு நகரங்களில் இருப்பவருக்கும் கொடுக்கும் ஊதியம் வேறு வேறாக இருக்கிறது.

இந்நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டியிருக்கும். குறிப்பிட்ட ப்ராஜெக்ட்டுக்காக வெளிநாட்டுக்கு அல்லது வேறு இந்திய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இதன் காரணமாக ஸ்டேண்டர்ட் ஊதியத்தை ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்களால் வழங்க முடியும். இது நிறுவனங்களுக்கு சாதகமான விஷயம்.

சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே மாதிரி ஒருசில நகரங் களில்தான் ஐடி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. மற்ற இந்திய நகரங்களில் இவற்றின் செயல்பாடுகள் குறைவு.

இந்த சூழல் மாறும். எல்லா இந்திய நகரங்களிலும் இனி ஐடி நிறுவனங்கள் ஒன்றிரண்டு முழு நேர ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கும்.
ஒட்டு மொத்த ஐடி நிறுவனங்களின் பிரதிநிதியாக நாஸ்காம் இதனை அறிவித்துள்ளது.இனி இப்படித்தான் ஐடி நிறுவனங்கள் இயங்கப் போகின்றன. இது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிய குறைந்தது 5 ஆண்டுகளாகும்!  

மகேஸ்வரி நாகராஜன்