மர்ம தேசம்-இது வட கொரியாவின் இன்றைய கதை



கடந்த மாத இறுதியில் உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும் ஒரு வதந்தி பிரபஞ்சம் முழுக்க வைரலாக சுற்றிக் கொண்டிருந்தது.அது, வட கொரிய அதிபர் கிம் இறந்துவிட்டார் என்ற செய்தி.ஆனால், அந்த வதந்திக்கு அதிக ஆயுள் இல்லை. கடந்த மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தன்று உலகம் வியக்க அதிரடியாகத் தோன்றினார் கிம்.

வடகொரியாவின் பியோங்கியாங் நகருக்கு வெளியே உள்ள உரத் தயாரிப்பு ஆலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கிம் ரிப்பன் வெட்டும் புகைப்படத்தை வடகொரிய அரசு வெளியிட்ட பின்புதான் கிம் குறித்த வதந்தி அடங்கியது.அந்த வதந்தி அடங்கினாலும் இப்போது கிம்மிற்குப் பிறகு அதிகாரத்துக்கு வரப்போவது யார் என்பது தொடர்பான பேச்சுக்கள் உலக அரசியல் அரங்கில் உலவத் தொடங்கிவிட்டன.

உண்மையில் வடகொரியா குறித்த வதந்திகளுக்கும் இப்போதைய அதிபர் கிம் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த அலசலுக்கும் பஞ்சமே இல்லை. எதுவுமே அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை. அந்தளவுக்கு வட கொரியா தேசமே ரகசியம் காக்கிறது.என்றாலும் உலக ஊடகங்களில் கால இடைவெளி இல்லாமல் 24 X 7, வட கொரியா குறித்தும் அதன் இப்போதைய அதிபர் கிம் பற்றியும் ‘கதைகள்’ அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன!

எனவே, அதிபர் கிம் அவர்களின் மூதாதையர் குறித்தும் வட கொரியா பற்றியும், கிம்முக்கு அடுத்து யார் என இன்றைய தேதியில் விவாதிக்கப்படும் விஷயம் குறித்தும் பார்த்து விடுவது உலக செய்திகளில் நாம் அப்டேட்டாக இருக்க உதவும்!

வட கொரியாவை கிம் இல் - சங் 1948ல் உருவாக்கியதில் இருந்தே அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றனர். அவருடைய குடும்பம்தான் ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை வட கொரிய மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
அந்தக் குடும்பத்தின் மீதான மரியாதை என்பது அந்த நாட்டு மக்கள் படிக்கத் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பமாகி விடுகிறது. சரியாகச் சொன்னால், அதைத் திட்டமிட்டு ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் விதைக்கிறார்கள்.

பள்ளிக் கல்விக்கு முந்தைய வயதில் உள்ள குழந்தைகளும்கூட ``நான் கிம் ஜோங் - உன் அவர்களைப் பார்க்க விரும்புகிறேன்...’’ என்ற பாடலை சிறுவயதிலேயே பாடுகின்றனர்!இப்படி விவரம் புரியும் வயதுக்கு முன்பே ஒவ்வொரு வடகொரியருக்கும் கிம் குடும்பம்தான் நம்மை ஆளவேண்டும் என்ற கருத்தியல் வலுவாக மனதில் ஊன்றப்படுகிறது.

எனவே, யாராவது ஒரு கிம் எப்போதும் உண்டு என்ற மனநிலை அங்கு உருவாகியிருக்கிறது.ஆட்சி நிர்வாகத்துக்கு கிம் ஜோங் - உன் தயார்படுத்தப்பட்ட காலத்திலேயே `பாயெக்டு ரத்த வாரிசு’ என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
பாயெக்டு என்பது வட கொரிய மக்களால் புனித மலையாகக் கருதப்படுகிறது. முதல் அதிபர் கிம் இல் - சங் அங்குதான் கொரில்லா போர் நடத்தினார் என்றும், கிம் ஜாங் - இன் அங்குதான் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கும்போது அதை உறுதிப்படுத்திக்கொள்ள கிம் ஜாங் - உன் இப்போதும் அங்கு சென்று வருகிறார் என்று சொல்லப்படுகிறது.இப்படி, வட கொரியர்களின் ஆன்மிக நம்பிக்கைகளோடும் தொடர்புடையவர்களாக கிம் குடும்பத்தினர் உள்ளனர்.
இப்படியான சூழலில்தான் கிம்முக்குப் பிறகு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிம் குடும்ப வாரிசுகள் என்பதில் மறு பேச்சு இல்லை. ஆனால், அவர்களில் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 36 வயதான இப்போதைய அதிபர் கிம் ஜோங் - உன் அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் குறைந்த வயதுடையவர்கள். அவருடைய 3 குழந்தைகளில் மூத்த குழந்தைக்கு 10 வயதும், கடைசி குழந்தைக்கு 3 வயதும் இருக்கும் என்று தெரிகிறது.

ஆமாம். எல்லாமே தெரிகிறதுதான்! மற்றபடி வேறு விவரங்கள் உலகத்தின் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. ரகசியம் காக்கிறார்கள்!
அவ்வளவு ஏன்... கிம் ஜாங் - உன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது அவரேகூட இள வயதில் ஆட்சிக்கு வந்தவராகத்தான் இருந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தேழுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது அப்படி ஆட்சி செய்யும் வயதில் கிம்மின் ரத்த வாரிசுகள் இல்லை என்ற சூழலில் வியட்நாமைப் போல, ஒரு குழு ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம். நாட்டை உருவாக்கியவர்களின் தத்துவங்களைப் பின்பற்றி நிர்வாகத்தை நடத்துவது என்ற அணுகுமுறையில் அப்படி நடக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.ஆனால், இதெல்லாம் வடகொரியாவின் விஷயத்தில் நடவாத காரியம்.

வட கொரிய மக்களுக்குத் தேவை வலுவான ஒற்றைத் தலைமை. அது யார் என்பதுதான் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதிலாக மூன்று கிம்களைச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.அதில் ஒருவர் பெண். கிம்மின் தங்கை. ஆம், தலைமைப் பதவி நிலையில் இருக்கும் ஒரே பெண்மணியான கிம் யோ - ஜாங் மீதுதான இப்போது அனைவர் கவனமும் திரும்பியுள்ளது.

கிம் ஜாங் - உன் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் வட கொரியாவில் ஆட்சி நிர்வாகத்துக்கு வரக்கூடிய நிலையில் அவருடைய குடும்பத்தில் உள்ள மூவரில் இவரே முதன்மையானவர் என்கிறார்கள்.விஷயங்களை வேகமாகப் புரிந்துகொள்வது, அரசியலில் ஆர்வம் காட்டுவது என்று பொதுவாழ்க்கைக்கு இளவயதிலேயே தயாராகி விட்டவர். இதை அவருடைய தந்தையே குறிப்பிட்டிருக்கிறார்.

செயல்திறன் மிக்கவராகவும், மிதவாத அணுகுமுறை கொண்டவராகவும் எல்லா விஷயங்களையும் நன்கு கவனித்துச் செயல்படக்கூடியவராகவும் கருதப்படும் கிம் யோ - ஜாங் தனது சகோதரரான அதிபர் கிம்முக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்குத்தான் அடுத்த தலைமைக்கு வாய்ப்பு என்று சத்தியம் செய்கிறார்கள்.

சிங்கப்பூரில் டிரம்ப் - கிம் சந்திப்பு நடந்தபோது, கையெழுத்திடுவதற்கு பேனாவை இந்தப் பெண்தான் கிம்மிடம் கொடுத்தார். அடுத்து ஹனோய் மாநாட்டில், பின்வரிசையில் இருந்த அவர், தன்னுடைய சகோதரர் மிடுக்கான தோற்றத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோது முன்னால் வந்து நின்றார்.

வடகொரிய உழைப்பாளர் கட்சியின் பொலிட்பீரோவில் மாற்று உறுப்பினராக இருக்கிறார். மேலும் இக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் போராட்டப் பிரிவின் துணை இயக்குநரும் இவர்தான்.இந்த வடகொரிய அரசியல் நமக்குப் புரிந்துகொள்ள சிக்கலானது என்றாலும் ஒருபுறம் வடகொரியாவின் சக்தி வாய்ந்த கட்சி ஒன்றின் சக்தி வாய்ந்த பெண்மணியாகவும் மறுபுறம் ஆளும் அதிபரின் சகோதரியாகவும் யோ - ஜாங் இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு பேட்டியில் தென் கொரியாவை கடுமையாகச் சாடினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வெகுவாகப் புகழ்ந்தார். இவை எல்லாம் அதிபர் கிம்மின் அனுமதி இல்லாமல் நிச்சயம் நடந்திருக்க முடியாது என்றும், தனக்குப் பிறகு தன் சகோதரி அதிகாரத்துக்கு வருவதற்கான சமிக்ஞையாகவே கிம் இதைச் செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க கிம் குடும்பத்திலேயே இன்னொருவர் அடுத்த தலைமை என முணுமுணுக்கப்படுகிறார். அவர், கிம் ஜோங் - ச்சுல்.
இவர் கிம் ஜாங் - உன்னின் அண்ணன். ஆனால், அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் ஒருபோதும் ஆர்வம் காட்டியது இல்லை. ஜோக்ங் - ச்சுல், தீவிர இசைப் பிரியர். அவருக்கு கித்தார் இசைக் கலைஞர் எரிக் கிளாப்டன் மீது அபாரமான பிரியம் உண்டு. அதிகபட்சமாக, இவர் கிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு அப்பால் ஜோக்ங் - ச்சுல் குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

கிம் குடும்பத்தில் உள்ள மூன்றாவது நபர் கிம் பியோங் - இல்.இவர் கிம் ஜோங் - இல் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். அதிபர் கிம்மின் அப்பாவின் மரணத்துக்குப் பிறகு இவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கிம்மின் மாற்றாந்தாய் விரும்பினார். ஆனால், அன்று கிம் ஜோங் - இன்னுக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கு காரணமாக அவருக்கு அது சாத்தியப்படாமல் போயிற்று.

1979ல் கிம் பியோங் - இல் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தூதரக பொறுப்புகள் பலவற்றை அவர் வகித்துள்ளார். கடந்த ஆண்டுதான் அவர் வட கொரியா திரும்பினார்.எனவே, நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு அவருக்குச் செல்வாக்கு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்து சோயே ரியோங் - ஹேயே இருக்கிறார். இந்த அதிபர் போட்டியில் குறிப்பிடப்படும் இன்னொரு முக்கிய ஆளுமை.அரசாங்க விவகார கமிஷனின் முதல்நிலை துணைத் தலைவராக இருக்கும் இவர், கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் நாடாளுமன்றத்தின் தலைவராக கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.இவர் ராணுவத்தில் உயர் பொறுப்புகள் வகித்துள்ளார்.

கொரிய தொழிலாளர் கட்சியின் அமைப்பு மற்றும் வழிகாட்டுதல் பிரிவிலும் முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். சர்வதேச நிகழ்வுகளில் வட கொரியாவின் பிரதிநிதியாக இவர்தான் இப்போது பங்கேற்று வருகிறார்.

இந்தக் காரணங்களால் அதிபர் கிம்மின் தங்கைக்குப் பிறகு இவர்தான் வட கொரியாவில் இப்போது அதிகார பலம் மிகுந்த இரண்டாவது நபராகக் கருதப்படுகிறார்.ஆனால், காலம் இவர்களில் யாரையாவது ஆட்சிக் கட்டிலில் அமர வைக்குமா, புதிதாக வேறு ஒருவரைக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.வரலாறு என்பதே எதிர்பார்ப்புகள் போலவே எதிர்பாராதவைகளின் சுவாரஸ்யமும்தானே.

இளங்கோ கிருஷ்ணன்