உலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்!



மினி தொடர் 6

மத்திய காலத்தின் கறுப்பு மரணங்கள்…
பிளேக்கின் மறு வருகை!

உலகின் மத்திய கால வரலாற்றைப் படிப்பவர்கள் பதினான்காம் நூற்றாண்டு வரலாற்றை இதயத்தைப் பிடித்துக்கொண்டுதான் படிக்க வேண்டும்.
குறிப்பாக, ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த யூரேஷியா, மேற்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்குப் பகுதிகள் இந்த நூற்றாண்டில் அனுபவித்ததைப் போன்ற சித்ரவதையை வேறு எந்த நூற்றாண்டிலும் அனுபவித்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.இதில் ஐரோப்பாவின் கதைதான் இன்னும் கொடூரம்.

ஐரோப்பியர்களுக்கு பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கமே அமங்கலமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால், அதற்கு

முந்தைய நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அவர்கள் விளைச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்துவிட்டது.
பொதுவாக, ஐரோப்பாவில் வசந்தத்தில் பனிப் பொழிவு குறைவாக இருக்கும். சூரிய வெளிச்சம் எட்டிப்பார்க்கும். தாவரங்கள் தளிர்க்கும். கோடை காலம் ஐரோப்பாவுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். வருடம் முழுதும் கொட்டும் பனியிலும் மழையிலும் அவஸ்தைப்படுபவர்களுக்கு கோடைதான் பெரும் ஆறுதல்.

ஆனால், கி.பி. 1300களின் தொடக்கத்தில் இப்படி இருக்கவில்லை.வசந்தத்தில் இளவெயில் மண்ணில் விழவில்லை. மாறாக கடும் மழை கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து பல மாதங்கள் மழை கொட்டித் தீர்த்தது. கோடை காலம் முழுமையும் மழையாகக் கொட்டியதில் பயிர்கள் அழுகின. விளைச்சல் சுத்தமாக இல்லாமல் போனது. கடும் பஞ்சம் ஐரோப்பா முழுதும் தாண்டவமாடத் தொடங்கியது.

பனிக் காலத்தில் கால்நடைகளுக்கு விநோதமான நோய்த் தொற்றுகள் உருவாகின. ஆடுகள், மாடுகள் கொத்துக் கொத்தாக இறந்தன. விவசாயம் பொய்த்தால் என்ன... கால்நடைச் செல்வங்களைக் கொண்டு பஞ்சத்தை சமாளிக்கலாம் என்று நினைத்திருந்த விவசாயிகளுக்கு இது கடும் அதிர்ச்சியாக இருந்தது.ஐரோப்பா முழுதும் இருந்த 80% கால்நடைகள் இந்தத் தொற்றுநோய்களால் அழிந்தன. இதனால் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்தது. விவசாயமும் பொய்த்து, கால்நடைகளும் மரிக்கவே விலைவாசி விண்ணைத்தொட்டது.

வாங்கும் சக்தியை இழந்த மக்கள் குற்றச் செயல்களில் இறங்கினார்கள். கொள்ளையும் கொலையும் சர்வ சாதாரணமாகியது. பசியின் கொடுமை தாங்காமல் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று தின்றார்கள். நரமாமிசம் சாப்பிடும் கொடூரமான பழைய காட்டுமிராண்டி வாழ்க்கைக்குச் சென்றது மனித சமூகம்.

இங்கிலாந்தின் மன்னர் இரண்டாம் எட்வர்டு உண்பதற்கு ஒருவேளை ரொட்டி இல்லாமல் பசியில் வாடும் நிலை இருந்தது என்றால் எவ்வளவு மோசமான பஞ்சம் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.இங்கிலாந்து என்றில்லை; ஜெர்மன், பிரான்சு, இத்தாலி, போர்ச்சுகல் உட்பட ஒட்டுமொத்த ஐரோப்பாவுமே கடும் பஞ்சத்தில் தத்தளித்தது.

மொத்த ஐரோப்பிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் இந்த பஞ்சத்தில் இறந்தார்கள். எஞ்சியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்ததால் நிமோனியா, காசநோய் உள்ளிட்ட மோசமான வியாதிகளால் பீடிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டனர்.

மண்ணில் நரகம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான் என்று எழுதினார் நைசிபோரஸ் கிரிகோரஸ் என்ற பைஜாண்டியப் பேரரசின் அறிஞர்.
ஆனால், இன்னொரு கொடூரமான சாத்தான் அந்த மண்ணில் இறங்கி நடக்கப் போகிறது... உண்மையில் நரகம் என்பது அதுதான் என பாவம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆம்! கி.பி. 1347ம் ஆண்டில் ஐரோப்பாவுக்குள் இன்னொரு சாத்தான் நுழைந்தது. அதன் பெயர் பிளேக். வரலாறு இதனை கறுப்பு மரணம், பெஸ்டிலன்ஸ், எபிடெமிக் என்று விதவிதமான பெயர்கள் சொல்லி அழைத்தாலும் கிரேக்கத்தின் மகாகவி ஹோமர் வாக்கில் உதித்த கறுப்பு மரணம் என்ற சொல்லே இதன் முக்கியப் பெயராக நிலைத்துவிட்டது.

ஏற்கெனவே கொடூரமான பஞ்சத்தாலும், அது உருவாக்கிய வறுமையாலும் குற்றுயிரும் குலையுயிருமாக வாடிக் கொண்டிருந்தவர்கள், இந்தக் கொள்ளை நோயால் கூட்டம் கூட்டமாக செத்து மடிந்தார்கள். நான்கு ஆண்டுகள் மட்டுமே நரவேட்டையாடினாலும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 60% பேரைக் கொன்றொழித்தது இக்கொள்ளை நோய். அதாவது சுமார் இரண்டு கோடிப் பேர் மரித்தார்கள்.

பிளேக்கின் இரண்டாவது தாக்குதல் இது.இதற்கு முன்பு யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற இதே பாக்டீரியா கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஜஸ்டீனிய கொள்ளை நோயாக வந்தது. கால ஓட்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்று சுமார் எட்டு நூற்றாண்டுகள் கழித்து, எலிகள் மீது ஏறி வந்து மீண்டும் ஒரு போரைத் தொடுத்தது.

அப்போது இருநூறு ஆண்டுக் கால நெடும் போரில் சுமார் ஒரு கோடிப் பேரைக் கொன்ற இந்தத் தொற்று, இப்போது வெறும் நான்கே ஆண்டுகளில் இரண்டு கோடிப் பேரைக் கொன்றது என்றால் அதன் வீரியம் எத்தனை மடங்கு வளர்ந்திருந்தது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

முன்பே குறிப்பிட்டது போல் யூரேஷியா என்பது ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த பகுதிகள். குறிப்பாக, ஐரோப்பாவின் கிழக்கு, தென் கிழக்குப் பகுதிகள், ஆசியாவின் மேற்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளில்தான் இந்த கறுப்பு மரணங்கள் நரவேட்டையில் இறங்கின.

மத்திய ஆசியா அல்லது கிழக்கு ஆசியாவில்தான் இந்தக் கிருமி முதன் முதலாக மறு உற்பத்தியாகியிருக்க வேண்டும் என்கிறார்கள். சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்கு நீளும் பட்டுப் பாதைகள் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும்.பட்டுப் பாதை என்பது உலக வரலாற்றை உருவாக்கிய முக்கியமான வணிக வழி. அது சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளை இணைக்கும் பல்வேறு வணிக வழிகளின் தொகுப்பு.

இந்தப் பட்டுப்பாதைதான் பிளேக்கின் இரண்டாவது பரவலுக்குக் காரணம் என்பது நவீன வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.மத்திய தரைக் கடலின் எல்லையில் உள்ள கிரிமியாவில் கஃப்பா என்ற துறைமுகமுள்ளது. இந்தத் துறைமுகத்திலிருந்த ஜெனோவா வணிகர்களின் கப்பல்களில் இருந்த எலிகள் மூலமாகத்தான் பிளேக் முதன் முதலாக ஐரோப்பாவுக்குள் காலடி எடுத்து வைத்தது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

1345ம் ஆண்டு மங்கோலியர்கள் தங்கள் அரசன் ஜானி பெங் தலைமையில் கஃப்பா துறைமுகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் படைப்பிரிவில் இருந்த துருக்கியப் படைவீரர்கள் சிலருக்கு இந்த நோய் இருந்திருக்கிறது. அவர்களிடமிருந்து இந்தக் கொள்ளை நோய் கஃப்பா மக்களுக்கும் பின்னர் ஜெனோவாக்களின் கப்பலுக்கும் பரவியிருக்க வேண்டும்.

கருங்கடலைக் கடந்து கான்ஸ்டான்டிநோபிலுக்குள் நுழைந்த இந்தக் கப்பல்கள் 1347ம் ஆண்டின் கோடை காலத்தில் ஏற்கெனவே பஞ்சத்தில் நொந்திருந்த மக்களுக்கு இந்த நோயை எடுத்துச் சென்றன.பைஜாண்டிய பேரரசின் அரசர் ஆறாம் ஜான் கண்டகவ்ஜெனஸ் தன் மகனை இந்த நோய்க்குப் பறிகொடுத்தார்.

இந்நோயின் கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புகளைப் படிக்கும்போது தூசிடைடஸ் ஏதென்ஸ் பிளேக் பற்றி கி.பி. 5ம் நூற்றாண்டில் எழுதிய குறிப்புகளைப் படிப்பது போலவே உள்ளது.

இரண்டாம் முறையாக தன் நரவேட்டையை ஆடிய இந்த பிளேக் மீண்டும் மீண்டும் உலகுக்கு வந்து கொண்டே இருந்தது.நவீன மருத்துவமும் நுண்ணுயிர் தொடர்பான அறிவும் மனிதர்க்கு வளரும் காலம் வரை இந்தக் கொடூர, கண்ணுக்குப் புலனாகா எதிரியை நம்மால் வெல்லவே இயலவில்லை.(உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

இளங்கோ கிருஷ்ணன்