மெக்சிகோ பழங்குடியினரின் செருப்புதான் இப்ப ஃபேஷன்!



ஊரடங்கு நேரத்தில் என்ன செய்தோம்..?
பழைய படங்களைப் பார்த்தோம். பழைய விளையாட்டுக்களை குடும்பத்துடன் விளையாடினோம். மலரும் நினைவுகளில் மூழ்கினோம்.
இந்த நாஸ்ட்ராலஜியை கச்சுதமாக வணிகமாக்கி இருக்கிறது மெக்சிகோ ஃபேஷன் உலகம்.

எஸ். பழமை நினைவுகளில் இருக்கும் மக்களை மேலும் சிறப்பான நினைவுகளில் கொண்டு செல்ல பழங்கால ஹூவாரச்செஸ் (Huaraches) தோல் செருப்புகளை லெதர் தவிர நைலான் உள்ளிட்ட பல மெட்டீரியல்களில் உருவாக்கி கலர்ஃபுல்லாக விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஜலிஸ்கோ(Jalisco), மிச்சாவோகான் (Michoacan), குவானாஜுவாடோ (Guanajuato) மற்றும் யுகாடான் (Yucatan) போன்ற பகுதிகளைச் சேர்ந்த மெக்ஸிகோவின் பழங்குடியினர் தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக இம்மாதிரியான கால்களைச் சுற்றி - குறிப்பாக முன்பகுதியை மூடும்படியான தோல் செருப்புகளைப் பயன்படுத்துவர்.

கைகளில் கூடை பின்னுவது போல் பின்னி செய்யப்படும் இந்த செருப்புகள் உறுதியாக இருக்கும். இவை காலப்போக்கில் மெக்ஸிகோ நாடோடிகளிடம் அறிமுகமாகி, பின் அப்படியே மெக்ஸிகோவின் ஃபேஷன் உலகிற்குள்ளும் நுழைந்தது. இந்த காலணிகள் செய்வதில் கைதேர்ந்த பழங்குடிகளை வேலைக்கு அமர்த்தி மெக்ஸிகோவின் பிரபல பிராண்டுகள் 1940களில் பெரும் டிரெண்டான காலணிகளாக இதனை
மாற்றினர்.

அதன் பிறகு இவையே பல விதங்களாக மாறி ஆன்கிள் ஸ்டிராப்புகள், முழு ஷூ, சாண்டல்கள் என பலவிதமாக மாறி 20 வருடங்களுக்கும் மேல் ஃபேஷன் உலகை ஆட்சி செய்தது. இப்போது இந்த செருப்புகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 250 டாலர்களில் விற்பனைக்கு உள்ளன. ஆனால், மெக்ஸிகோவில் பாதிக்குப் பாதியை விட குறைவான விலையில் இந்த செருப்புகளை இப்போது விற்பனை செய்கின்றனர். நேரடியாக இந்த ஃபேஷனை உருவாக்கிய கலைஞர்களிடம் இருந்து இவற்றை வாங்கலாம் என்பது ப்ளஸ்.

கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து இளவரசர் ஹேரியின் மனைவியும், நடிகையும், சமூக சேவகி மற்றும் பெண்ணியவாதியுமான மேகன் மேர்கில் தனது தென்னாப்பிரிக்க பயணத்தின் போது இந்த ஷூக்களிலேயே அங்கே இருந்த பத்து நாட்களும் சுற்றி வந்தார். போதாதா... இணையத்தில் வைரலானது. லாக் டவுனில் இதன் தேவை உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

ஹுவாரச்செஸ் என்றால் செருப்பு என்றே பொருள். பெரும்பாலும் ஆபீஸ் ஃபார்மலுடன் ஷூ, பீச் வேர், பார்ட்டி வேர்களுடன் முறையே ஆன்கிள் ஸ்டிராப் மற்றும் சாண்டல்களாக அணியலாம். முன்பகுதி பாதம் அகலமாக இருப்போருக்கு இந்த காலணிகள் சிறந்த தீர்வாக அமையும்!

ஷாலினி நியூட்டன்