பறிபோகும் வேலை வாய்ப்புகள்... பதட்டத்தில் இந்தியா!உலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்து கொள்ள எல்லா நாட்டு அரசும் கொடுத்த முதல் மருந்து ஊரடங்கு. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.கொரோனாவுக்கு அஞ்சி விடுத்த இந்த முடக்கம், இப்போது பலரது வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் எல்லாத் தரப்பினரும் அடக்கம்.

40 நாட்களுக்கு மேல் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் பல தொழிலாளர்களின் கருவிகள் தூசிபடிந்து கிடக்கின்றன. அன்றாடப் பணியாளர்களின் சேமிப்பும் மிச்சமில்லை.ஏப்ரல் மாதம் முழுவதும் நிலவிய ஊரடங்கின் விளைவாக, தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 49.8% உயர்ந்திருக்கிறது என்று சர்வே கூறுகிறது. மார்ச் மாதம் 6.3% இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஒரே மாதத்தில் 43.5% அதிகரித்துள்ளது.

மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால், பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர்.பொருளாதார தேவைகளுக்காக விவசாயம் சாராத தொழில்களை நம்பி அதிகப்படியான தொழிலாளர்கள் இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவும் வேலையின்மை விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கால் தென் - வட தமிழ்நாட்டில், முந்திரி, பீடி, தீப்பெட்டி… தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலர் வேலை இழந்து மோசமாகப் பாதிக்கப்
பட்டுள்ளனர்.  ஊரடங்கிற்கு முன்பே பொருளாதார மந்தநிலையின் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோயின. இப்போது, ஊரடங்கு ஏற்படுத்தியுள்ளது இரட்டிப்பு பின்னடைவு.கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைச் சந்தித்ததன் காரணமாகத் தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்தனர்.

அதேபோல் ஜவுளித் தொழிலும் ஊரடங்கிற்கு முன்பே கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாயப்பட்டறை தொழிற்சாலைகள், டைலர்கள் பலரும் வேலையை இழந்தனர்.நிலமை இவ்வாறு இருக்க கொரோனா ஓய்விற்கு பின், பலரது வேலைக்கு பாதுகாப்பு இருக்கிறதா... புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் உண்டா... என்ற கேள்விகளோடு பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனை அணுகினோம்.

“ஏற்கனவே என்ன பாதுகாப்பு இருந்தது என்பதுதான் கேள்வி. 90 - 95% தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. முன்பெல்லாம் ஆட்கள் தேவைப்பட்டால் வேலைக்கு வைத்து கொள்வார்கள். இப்போது எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள் - தேவை படமாட்டார்கள்
என்பது இருக்கிறது.

ஊரடங்கு முடியும் போது எதற்கெல்லாம், தேவை இருக்கும் - இருக்காது என்பது தெரியவில்லை. மக்களின் கைகளில் பணம் வரும் போதுதான் தேவை அதிகரிக்கும்.எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இருக்கும் போது, பணம் வைத்திருப்பவர்களும் அதை வெளியே விடுவதற்கு யோசித்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள். பல விஷயங்களை தள்ளி வைப்பார்கள்.

உதாரணமாக கார் வாங்க திட்டமிருந்தால் அதை நிறைவேற்ற யோசிப்பார்கள். அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்து விட்டு, பெரியப் பெரிய செலவுகளை குறைப்பார்கள்.  40 நாட்கள் வீட்டிலேயே இருப்பதால், பலர் தங்களது சேமிப்பு என்று வைத்திருந்த நகைகளை எங்கு வைக்கலாம் என்று அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்...” என்ற ஜெயரஞ்சன், இந்த ஊரடங்கால் எந்தெந்த துறைகளில் பொருளாதாரம் வீழ்ந்திருக்கிறது
என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என்கிறார்.

‘‘இந்த சூழலில் மருத்துவம் சார்ந்த தயாரிப்புகள் மஞ்சள் குளிக்கும். காய்கறி, மளிகை பொருட்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க நகரங்களில் முன் வருகிறோம். கிராமங்களில்..? எது அத்தியாவசிய தேவையாக இருக்கிறதோ அதெல்லாம் நன்றாக இருக்கும். அவை தவிர மற்றது படுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

Work from home பழக்கப்படும் ஒன்றாக மாறப் போகிறது. வீட்டில் வேலை செய்யும் போது ஆரம்பத்தில் கவனச் சிதைவுகள், அசாதாரண சூழல் இருந்தாலும், நாளை வீட்டிலிருந்தே வேலை செய்யும் கலாசாரமாக மாற அதிக வாய்ப்பினை இந்த கொரோனா கற்றுக் கொடுத்திருக்கிறது. அதற்குள் நாமும் ஓர் ஒழுங்கினை கடைபிடிக்கத் தொடங்கி விடுவோம்.

இந்த நேரத்தில் பல நிறுவன முதலாளிகளுக்கு இது ஓர் அனுபவத்தையும், பல வகையில் சேமிப்பையும் கொடுத்திருக்கும். ஆன்லைனிலேயே இன்டர்வியூ - அப்பாய்ன்மென்ட் - அவுட்புட் - பேமண்ட்… என்று மாற போகிறது.சமீபத்தில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் சங்கம் விடுத்த அறிவிப்பில், 8 மணி நேர வேலையை 12மணி நேரமாக அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஏற்கனவே 12 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்பவர்களாகதான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இப்போது அதை லீகல் ஆக்கும் வேலையை செய்கின்றனர்.  

இன்று இருக்கும் சூழலில் தங்கள் வேலையை தக்க வைக்கவே பெரும் பாடாக இருக்கும் போது, 12 மணி நேரமாக இருந்தாலும் 16 மணி நேரமாக இருந்தாலும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்...” என்ற ஜெயரஞ்சன், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும்
விளக்கினார்.

“புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்துள்ளேன். அவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும், புள்ளி விவரங்களும் யாரிடமும் கிடையாது. கண்ணால் பார்ப்பதை வைத்தே சொல்கிறோம்.இந்தியாவை பொருத்த வரை ஒரு பகுதியில் போதுமான ஆட்கள் இல்லை. இன்னொரு பகுதியில் அதிக அளவிலான ஆட்கள் இருக்கிறார்கள். தென் மாநிலங்களில் தீவிரமாக குடும்ப கட்டுப்பாட்டை அமல்படுத்தினார்கள். வடக்கு - கிழக்கு மாநிலங்களில் இந்த கட்டுப்பாடு இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அங்கு அதிகமானது.

தொழிலும், செல்வமும் மேற்கு - தெற்கு மாநிலங்களில் அதிகமாக இருப்பதால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இப்பகுதிகளில் அதிகமாக இருக்கிறது...” என்று கூறியவரிடம், இது போன்ற நெருக்கடியான காலக்கட்டங்களை சமாளிக்க இந்தியாவில், உணவு - நிதி போதுமான அளவு இருக்கிறதா என்று கேட்டோம்.

“ஒரு வருடத்துக்குத் தேவையான உணவு இருக்கிறது. அந்த ஒரு வருடத்திற்குள்ளேயே இரண்டு முறை அறுவடை வந்துவிடும். இப்போது நம்மிடம் 600 லட்சம் டன் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு தேவையானது 60 லட்சம் டன்தான்.வட இந்தியாவின் பல பகுதிகளில் இப்போது ஒரு அறுவடை முடிய போகிறது. முதல் அறுவடையில் எப்படியும் 200 லட்சம் டன் வரும். அடுத்த நான்கு மாதம் கழித்து இன்னும் ஒரு 200 லட்சம் டன்.  

இந்த 400 லட்சம் டன்னை கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் ஏற்கனவே உள்ள 600 லட்சம் டன்னை விநியோகம் செய்ய வேண்டும். அதனால் உணவு பற்றி கவலையில்லை. ஆனால், அதை எப்படி விநியோக்கிக்கப் போகிறோம் என்பதுதான் பிரச்னை.தென் மாநிலங்களில் விநியோகிப்பது போல் வட மாநிலங்களில் விநியோகிப்பதில்லை.

எடுத்துக்காட்டாக ஒன்றிய அரசு கொரோனா பாதிப்பிற்காக இவ்வளவு அரிசி இலவசமாக கொடுக்கிறோம் என்று சொன்ன போது, தென் மாநிலங்களில் தங்களுக்கு என்ன கோட்டாவோ அதை எடுத்துக் கொண்டார்கள். வட மாநிலங்களில் அப்படி எடுக்க முடியவில்லை. எடுக்க முடியவில்லை என்றால் விநியோகித்தால்தானே எடுக்க முடியும்?நமக்கென்று சில பாரம்பரியங்கள் உள்ளன. அந்த முறைப்படி கட்டமைப்பை வலிமைப் படுத்திவைத்திருக்கிறோம். நிதியை பொறுத்த வரை மத்திய அரசு அதை மர்மமாகவே வைத்துள்ளது!’’ என்கிறார் ஜெயரஞ்சன்.                        

நோபல் பரிசு பெற்றவரின் பரிந்துரைகள்

*புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளை மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் கையாள முடியாது. மத்திய அரசு அதனை மேற்பார்வை செய்யவேண்டும்.

*வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு மாதத் தவணைகளை ஒத்திவைத்தது நல்ல முடிவு. நாம், இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. நிரந்தரமாக அதனை ரத்து செய்யலாம்.

*மிகவும் ஏழை மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கவேண்டும். இதனை பரந்துபட்டு பார்க்கவேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்த மக்களை செலவழிக்கச் செய்வதுதான் சிறந்த வழி.

*கொரோனாவில் இருந்து தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்திற்கு அதிகமாக செலவு செய்கிறார்கள். மக்களுக்கும், நிறுவனங்களுக்கும், தொழில்களுக்கும் மிகப்பெரிய அளவில் சலுகைகளையும், திட்டங்களையும் அறிவிக்கிறார்கள். அமெரிக்கா அறிவித்துள்ள அளவுக்கு நாமும் அறிவிக்கவேண்டும். இப்போது இந்தியாவில் 1% அளவுக்குதான் ஜிடிபியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

*மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பணத்தை வழங்கவேண்டும். அதற்கான திட்டமிடல் வேண்டும்.

- பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி

பூர்வீகத்தை நோக்கி நகர்பவர்கள்...

நாட்டுக்குள்ளேயும், உலகில் உள்ள பல இடங்களிலிருந்தும் கொரோனா அச்சத்தால் பலர் தங்கள் பூர்வீகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். 1.3 கோடி இந்தியர்கள் உலகம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.அதிகபட்சமாக மத்திய கிழக்கு நாடுகளில் 90 லட்சம் பேர் வேலைப் பார்க்கின்றனர். சவுதி அரேபியாயில் 25 லட்சம்; குவைத், ஓமன், பக்ரின், கத்தார் ஆகிய நாடுகளில் 29 லட்சம்; ஐக்கிய அரபு
நாடுகளில் 34 லட்சம்.

இதில் சவுதி அரேபியாவிலிருந்து 5 லட்சம் பேரும், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து 1.97 லட்சம் பேரும் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து 22 லட்சம் பேர் உலகம் முழுவதும் குடியேறியுள்ளதாகவும், அவர்கள் மூலம் 61,843 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 2015ம் ஆண்டின் TMS (transportation management system) அறிக்கை கூறுகிறது.

அன்னம் அரசு