உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!



மினி தொடர் 4

பத்து கோடி பேர் மரணம் 200 வருடக் கொடூரம்  ஸ்டீனியக் கொள்ளை நோயின் ருத்ர தாண்டவம் ரோமானியப் பேரரசை உருவாக்கிய பேரரசர் கான்ஸ்டாண்டைன் தன் ராஜ்யத்தை கிழக்கு நோக்கி விரிவாக்கியபோது, அங்கு ஒரு நகரத்தை நிர்மாணித்து அதற்கு கான்ஸ்டாண்டிநோபில் என்ற தன் பெயரையே வைத்தார் என்று படித்திருப்பீர்கள்.

சுமார் ஐநூறு வருடங்களில் அந்த நகரமும் அது அமைந்துள்ள தேசமான துருக்கியும் முக்கியமான கேந்திரமாகியது. கிழக்கு ரோமானியப் பேரரசு என்றும் பைஜாண்டிய பேரரசு என்றும் விளிக்கப்பட்டது. கான்ஸ்டாண்டி நோபில் பின்னர் இஸ்லாமிய அரசர்கள் வசம் சென்ற பின் இஸ்தான்புல் என்றாகி இருக்கிறது.

இந்த பைஜாண்டிய பேரரசைத்தான் ஆறாம் நூற்றாண்டில் ஒரு கொடுமையான கொள்ளை நோய் தாக்கியது. அதன் பெயர் ஜஸ்டினியன் பிளேக்.

கிபி 541 முதல் கிபி 750 வரை... கிட்டதட்ட இருநூறு வருடங்கள், அதாவது ஏழெட்டு தலைமுறைகளுக்கு நின்று நரவேட்டையாடிய இக்கொடூரக் கொள்ளை நோயில் இரண்டரை கோடி முதல் பத்து கோடி பேர் வரை மரணித்திருக்கலாம் என்று வரலாறு பேஸ்தடிக்கப் பேசுகிறது.

பைஜாண்டிய பேரரசில் தொடங்கிய இந்தக் கொள்ளை நோய் அங்கிருந்து அருகில் இருந்த சசானியப் பேரரசுக்கும் பரவியது. இஸ்லாம் மதம்
உருவாவதற்கு முன்பு இருந்த ஈரானிய சாம்ராஜ்யம்தான் சசானியப் பேரரசு எனப்பட்டது.

இவ்விரு பேரரசுகளிலும் இருந்த மத்திய தரைக்கடலின் கடற்கரையோர நகரங்களிலேயே இக்கொள்ளை நோய் முதலில் நுழைந்தது. வணிகக் கப்பல்களில் இருந்த எலிகளின் மூலம் இந்நோய் தோன்றியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. இதன் முதல் பரவலில் கிட்டதட்ட ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிப் பேர் மரணித்துவிட்டார்கள். பதினான்காம் நூற்றாண்டில் யூரேஷியப் பகுதிகளில் தோன்றிய பிளேக் நோயோடு இதை ஒப்பிடுகிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.

இவ்விரு நோய்களுக்குமே எரிசினியா பெஸ்டிஸ் (Yerisinia Pesties) என்ற பாக்டீரியாதான் காரணம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். பின்னது குறுகிய காலமே பாதித்தாலும் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் காவு வாங்கியிருக்கிறது என்பதால், பழைய பாக்டீரியா பரிணாம வளர்ச்சி அடைந்து புது வலுவுடன் தாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

நுண்ணுயிர்களோடு பல கோடி வருடங்களாக நம் முன்னோர் போராடி வருகிறார்கள் என்பதற்கு இவ்விரு கொள்ளை நோய்களும் சாட்சி.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக 2013ம் ஆண்டு மத்திய ஆசியப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில், சீனா, கஜகஸ்தான், கைர்கஸ்தான் எல்லைகளில் உள்ள தியான் சான் மலைத்தொடர்களில் இந்த பாக்டீரியாவின் தடயங்கள் கிடைத்துள்ளன.

மேலும், சீனாவின் ஹன் நாடோடிகள், ஸ்டெப்பி புல்வெளிகளின் ஜியாங்னு பழங்குடிகள் ஆகியோர் உடலில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நோய் தாக்கியிருப்பதற்கான தொல்லியல் தடயங்களும் கிடைத்துள்ளன.சரி நாம் மீண்டும் ஜஸ்டீனிய கொள்ளை நோய்க்குத் திரும்புவோம். பைஜாண்டியப் பேரரசின் மாமன்னரான முதலாம் ஜஸ்டீனியனை இந்நோய் தாக்கியதால் அவரின் பெயரே இந்நோய்க்கு வைக்கப்பட்டது. ஆனால், அவர் இந்நோயிலிருந்து பிழைத்துக்கொண்டார் என்கிறார்கள்.

நமக்குக் கிடைத்திருக்கும் உலக அளவில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட கொள்ளை நோய் ஜஸ்டீனியன் மட்டும்தான். அக்காலக்கட்டத்து இடுகாடுகளின் புதைபடிவங்களில் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.எகிப்திலிருந்து மூட்டை மூட்டையாக வந்த தானியங்களில் இருந்த எலிகளில் இருந்தே இந்த நோய் வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள். அந்நகரின் தானியக் கிடங்குகளில் பல லட்சம் டன் தானியங்கள் குவிந்திருந்ததாம். தானியக் கிடங்குகளில் எலிகள் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதில் ஏதேனும் ஓர் எலி உடலில் இந்த பாக்டீரியா மரபணு முடுக்கம் பெற்று மற்றவற்றுக்கும் பரவியிருக்க வேண்டும்.

பைஜாண்டிய வரலாற்று அறிஞர் ப்ரோகோபியஸ், கிபி 541ல் எகிப்தின் சூயஸ் அருகே உள்ள பெலூசியம் என்ற துறைமுகத்தில் இந்நோய் உருவானதாக முதன் முதலில் பதிவு செய்திருக்கிறார். கிரேக்கத்தின் ஆண்டியாக் நகர சிரியன் கிறிஸ்துவ தேவாலயப் பேராயராக இருந்த இவாகிரியஸ் ஸ்கோலாசியஸ், தன் சிறுவயதில் தன்னையும் இந்நோய் தாக்கியதாகப் பதிவு செய்துள்ளார். தன் வாழ்நாளிலேயே நான்கு முறை திரும்பத் திரும்பத் தாக்கிய இந்நோயால் தன் மனைவி, குழந்தைகள் உட்பட அனைத்து உறவுகளையும் இழந்ததாக பெருந்துயருடன் சொல்கிறார்.

ப்ரோகோபியஸின் வலிமிகு வர்ணனைகள் தூசிடைடஸின் சொற்களைப் படிப்பது போலவே இருக்கின்றன. கான்ஸ்டாண்டி நோபிலில் இந்நோய் தினசரி பத்தாயிரம் பேரை காவு வாங்கிக் கொண்டிருந்ததாம்.தனது ரகசிய வரலாற்றுக் குறிப்புகளில் அரசர் ஜஸ்டீனியனை கழுவிக் கழுவி ஊற்றும் ப்ரோகோபியஸ், நகரெங்கும் பிணங்களாக இருந்தன. அவற்றில் பலவும் ஈமச் சடங்குகள் செய்யவும் ஆளின்றி நாறிக்கொண்டிருந்தன. ஊரெங்கும் பிணவாடையாக இருந்தது என்று எழுதிச் செல்கிறார்.

ரோமானிய சாம்ராஜ்யம் மட்டுமின்றி அறியப்பட்ட உலகம் முழுதுமே காலியாகிக் கொண்டிருந்தபோதும், விவசாயிகள் கொத்துக் கொத்தாக மரித்துக்கொண்டிருந்தபோதும் கருணையற்ற ஜஸ்டீனிய அரசனின் இதயம் எந்த வகை வரியையும் குறைக்கவில்லை. குறைக்காவிடிலும் பரவாயில்லை நோயுற்றவர், இறந்தவர் செலுத்த வேண்டிய நிலுவைகளை வாரிசுகளையும் அண்டை அயலாரையும் கட்டச் சொல்லி வற்புறுத்தினார் என்று அரசனின் கொடுங்கோன்மையை தோலுரிக்கிறார்.

விவசாயிகள் நோயினால் உற்பத்தியில் ஈடுபடாததால் கார்தேஜ் உள்ளிட்ட நகரங்களில் தானிய விலை உயர்ந்தன. மத்திய தரைக்கடல் பகுதி முழுமையையும் இந்த நோய் கபளீகரம் செய்ததால் பைசாண்டிய பேரரசே நிர்மூலமானது. எல்லையோரங்கள் வலுவிழந்ததால் பிற சாம்ராஜ்யங்கள் உருவாகத் தொடங்கின. ஐரோப்பியாவுக்குக் கிழக்கேயும் தெற்கேயும் உள்ள பகுதிகளில் ஐரோப்பியர் கை வலுக்குறைந்தது.

கிழக்கு மேற்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்த ரோமானிய சாம்ராஜ்யம் உடைந்தது. இத்தாலி உள்ளிட்ட பகுதிகளில் புதிய பிராந்திய அரசுகள் உருவாகின. படிப்படியாக அந்தந்த நாடுகளில் ஐரோப்பிய அரசுகள் உருவாகி வலுப்பெற்றன. இன்று நாம் காணும் ஐரோப்பிய நாடுகள் என்பவை ஆறாம் நூற்றாண்டில் ரோமானிய சாம்ராஜ்யம் உடைந்ததால் ஏற்பட்டது என்று சொன்னால் அந்த உடைவுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று கண்ணுக்குத் தெரியாத சின்னஞ் சிறு பாக்டீரியா என்பது சத்தியமான உண்மை.

உலகம் முழுக்க உள்ள எல்லா வைரஸ்களின் எடையைக் கூட்டினாலும் சில மில்லி கிராம்கள்தான் தேறும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி, மொத்தமாகவே சில நூறு கிராம் எடைகொண்ட ஒரு பாக்டீரியா கூட்டம் அவ்வளவுப் பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது என்பது மனித குல வரலாற்றில் எவ்வளவு பெரிய நகை முரண். கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான யுத்தம் எளிதல்ல. அதைதான் மனித குலம் பலகோடி ஆண்டுகளாகச் செய்து வருகிறது.

(உயிர்கொல்லிகளுக்கு
எதிரான போர் தொடரும்)

இளங்கோ கிருஷ்ணன்