நோ தியேட்டர்! ஒன்லி OTT ரிலீஸ்! சினிமா இனி சரியுமா? நிமிருமா?



லாக் டவுன்... கொரோனா அச்சத்தில் தியேட்டர்கள், மால்கள் மூடிக்கிடக்கின்றன. செப்டம்பரில்தான் இனி படப்பிடிப்பு பணிகள் என்கிறது தகவல். ரசிகர்களும் ஊரடங்கினால் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால், இந்த சூழலிலும் பரபரப்பாக இருக்கிறது கோலிவுட்.
காரணம், ‘பொன்மகள் வந்தாள்’.  தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல், நேரடியாகவே OTT (Over the top) பிளாட்ஃபார்மில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை சொல்கிறார்கள். நாலரை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஒன்பது கோடிக்கு மேல் விற்றுவிட்டார்களாம்.

‘‘தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது...’’ என சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள், அதன் இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் என பலரும் இப்போது வெல்கம் பொக்கே நீட்ட பதறிவிட்டது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம். இதனால் ‘‘சினிமாவின் நிலை இனி என்னாகும்?’’ என்ற டாபிக் கோலிவுட்டில் சலசலக்கிறது.  

பாரதிராஜா, கே.முரளிதரன், டி.சிவா, ஞானவேல் ராஜா, எச்.முரளி, பெப்சி சிவா, சஷிகாந்த், தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு... என ஒரு பெரிய டீமே ஒன்றிணைந்து ‘ஓடிடி’ ரிலீஸை வரவேற்கிறார்கள். ‘‘இதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். திரையரங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும். இப்படி பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாங்கள் வரவேற்கிறோம்...’’ என 30 தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள்.

திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஆர்.பன்னீர் செல்வம் தன் சங்க உறுப்பினருடன் கலந்து பேசி, ‘‘மொத்த திரையரங்கமும் நெருக்கடியில் இருக்கும் போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து ஆயிரம் திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். தயாரிப்பாளரை தொடர்பு கொண்டால், அவர் நமது கோரிக்கைகளை ஏற்பதாக இல்லை.

ஆகையால் இனி அந்தத் தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் நடிக்கும் எல்லா படங்களையும் ஓடிடி பிளாட்ஃபார்மில் மட்டுமே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்பதே அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது...’’ என்கிறார் சீரியஸாக.. ஓடிடியை வரவேற்கும் தயாரிப்பாளர்களுக்கு பதிலடியும் இங்கே கொடுக்கிறார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம்.

‘‘அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு சரியான பதிலை சொல்லாததால்தான், பொதுச் செயலாளர் இப்படி சொல்லியிருக்கார். இதுவும் அவருடைய கருத்து அல்ல. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் கருத்து. ‘நீங்க எங்க சுதந்திரத்தில் குறுக்கிடுறீங்க. நாங்க பணம் போட்டு எடுத்திருக்கோம். அதை ஓடிடில ரிலீஸ் செய்யக் கூடாதுனு நீங்க எப்படி சொல்லலாம்’ என்று சில தயாரிப்பாளர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்.

நாங்கள் அப்படி சொன்னதே கிடையாது. உங்கள் விஷயத்தில் நாங்கள் தலையிடவில்லை. உங்களுக்கு எப்படி வியாபார சுதந்திரம் இருக்கிறதோ அப்படி எங்களுக்கும் இருக்கிறது. நீங்கள் மூன்று கோடியில் படமெடுத்து வைத்துள்ளீர்கள். நாங்கள் முப்பது கோடியில் தியேட்டர் கட்டி வைத்திருக்கிறோம். உங்களுக்கு இருக்கும் சுதந்திரம் எங்களுக்கு இல்லையா? எங்கள் தியேட்டர்ல என்ன படம் போடுவது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்.

என் தியேட்டரிலேயே ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் ரூ.28 லட்சங்களுக்கு மேல் வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் மின்சார செலவாக மினிமம் ஒரு தொகையை செலுத்த வேண்டும். அதுபோக தியேட்டர் பராமரிப்பு செலவு.

மூன்று மாதங்கள் லாக் டவுன் ஆனால், எனக்கு ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி வரை நஷ்டம் வரும். தயாரிப்பாளர்கள் இப்படி எத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்? உங்களிடம் இருப்பவர்கள் கான்ட்ராக்ட் லேபர்ஸ்! இந்த கொரோனா காலத்தில் வட்டி கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறீர்கள். எங்களால் அப்படி சொல்ல முடியாது. கை பணத்தை அல்லது கடன் வாங்கிதான் திரையரங்கை பராமரிக்கிறோம்.

இப்போது ஓடிடியில் வெளியாக இருக்கும் படம், சின்னப் படமல்ல. பாபுலரான சின்னப் படம்! அதில் நடித்திருக்கும் ஹீரோயினுக்கு ஓடிடி வழியாகவா இந்த பாபுலாரிட்டி கிடைத்தது? திரையரங்கம் வழியாகத்தானே இவ்வளவு புகழை அவர் பெற்றார்? நடிகர்கள் பல கோடிகளில் சம்பளம் வாங்க யார் காரணம்? திரையரங்குக்கு வரும் ரசிகர்கள்தானே?

தெரிந்த நடிகர் இல்லாத படம் தியேட்டருக்கு வரும் போது, மக்கள் திரையரங்குக்கு வருவதில்லை. இதனால் நான்காயிரம் திரையரங்குகள் இருந்த தமிழகத்தில் இன்று ஆயிரம் தியேட்டர்கள்தான் இருக்கின்றன. இதிலும் எழுநூறு தியேட்டர்களுக்கு பிரேக் ஈவன் வருமானம் கூட கிடையாது. ஊருக்குள் தியேட்டரை மூடிவிட்டால் கேவலம் என நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே எங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்லோரிடமும் கலந்து பேசி சொன்னதுபோல் ‘தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிடுவோம்’ என உறுதிக் கொடுக்கும் படங்களை மட்டுமே வெளியிடுவோம்...’’ கறாராகச் சொல்கிறார் திருப்பூர்
சுப்ரமணியம்.

‘‘இது விஞ்ஞான மாற்றம். இதை இப்போது விரிவு படுத்தியிருக்கிறது கொரோனா...’’ என்றபடி ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளர் பி.ஆறுமுககுமார். அருள்நிதியின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, விஜய்சேதுபதியின் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’, ‘லாபம்’ ஆகிய படங்களின்
தயாரிப்பாளர் இவர்.‘‘தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வருவது சந்தோஷமான விஷயம்தான். நல்ல லாபத்துக்கு படங்கள் விற்கும் போது, அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க முடியும். ஓடிடி வியாபாரம் தமிழ் சினிமாவுக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம். ஆனால், இந்திய சினிமா அளவில் இது பழைய விஷயம்தான்...’’ என்கிறார் ஆறுமுககுமார்.

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் அறிமுக இயக்குநரான ஜே.ஜே.ப்ரட்ரிக் என்ன சொல்கிறார்..?   
‘‘தியேட்டரில் படம் பார்ப்பதுதான் நம் கலாசாரம். எல்லோருமே திரையரங்கில் தங்கள் படம் வெளியாக வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். எங்கள் ‘பொன்மகள் வந்தாள்’ கடந்த மார்ச் 27ம் தேதி தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டும். எல்லாருக்குமே இது தெரியும்.

ஆனால், எதிர்பாராத வகையில் உலகெங்கும் லாக் டவுன் வந்துவிட்டது. மலேசியா, சிங்கப்பூரில் ஆகஸ்ட்டுக்கு பிறகும், மற்ற சில நாடுகளில் டிசம்பர் மாதமும்தான் தியேட்டர்கள் இயங்க முடியும் என்ற நிலை இருக்கிறது.இந்த சூழலில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் பார்த்த நண்பர்கள் அத்தனை பேரும் ‘படம் பிடிச்சிருக்கு’ என்று பாராட்டினார்கள். லாக் டவுன் சீரானதும் ரிலீஸ் படங்கள் வரிசைகட்டி நிற்கும். அப்போது ‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸ் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

மக்கள் எல்லோரும் இப்போது வீட்டில் படம் பார்க்கும் மனநிலையில் இருக்கிறார்கள். நல்லப் படங்களை எதிர்பார்க்கிறார்கள். ‘இந்த நேரத்தில் உங்கள் படத்தை ஓடிடியில் வெளியிட்டால் உலகமே பார்த்து ரசிக்குமே’ என்று படம் பார்த்தவர்கள் சொன்னதோடு அதற்கான முயற்சிகளையும் அவர்களே எடுத்தார்கள்.

மற்றபடி ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை ஓடிடியில்தான் ரிலீஸ் செய்வோம் என்ற உள்நோக்கத்தோடு நாங்கள் எடுக்கவில்லை. தியேட்டரில் வெளியாகவே விரும்பினோம்...’’ என்கிறார் இயக்குநர் ப்ரட்ரிக். எந்தவொரு டெக்னாலஜியும் வரமா சாபமா என்பதை காலமே நிரூபிக்கும். இப்பொழுதும்!   

மை.பாரதிராஜா