தாராவி சமூக இடைவெளி..!



உலகின் மக்கள் நடமாட்டம் மிகுந்த மிக நெரிசலான நகரங்களில் ஒன்று மும்பை. அந்த மும்பைக்குள்ளேயே நெரிசலான பகுதி தாராவி.
மும்பையின் இதயப்பகுதியில் குடி கொண்டிருக்கும் தாராவி, ஒரு நகரத்தை போல பரந்து விரிந்திருக்கும் குடிசை பகுதி. 2.1 சதுர கிமீ பரப்பளவு கொண்ட தாராவியில் 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 30% இஸ்லாமியர்கள், 6% கிறஸ்துவர்கள், 63% இந்துக்கள்.

இவ்வளவு வேறுபாடுகள், நெரிசல்களுக்கு மத்தியில் மும்பையின் சிறு குறு தொழில்களின் முதுகெலும்பாக இருப்பதே தாராவிதான். குறிப்பாக தோல் பதனிடும் தொழில், மண்பாண்டங்கள், ஆடை உற்பத்தி, பிளாஸ்டிக் மறுசுழற்சி… என 5000 தொழில் நிறுவனங்கள் தாராவியில் இயங்குகின்றன.
தவிர, தனி அறையில் இயங்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மட்டுமே 15,000. இவற்றின் வருடாந்திர டேர்ன் ஓவர் ஒரு பில்லியன் டாலர். அதாவது 7,600 கோடி ரூபாய்!

இப்படியான ஒரு முக்கிய இடத்தை கொரோனா இன்று ஆட்டிப் படைக்கிறது. கடந்த வார நிலவரப்படி தாராவில் 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மும்பையே ஆட்டம் கண்டிருக்கிறது. கொரோனாவின் முதல் எதிரி சமூக இடைவெளி என்கிறார்கள்.
காலை நீட்டி படுப்பதற்கு கூட இடமில்லாத ஓர் அடைந்த இடத்தில், அங்குள்ளவர்களால் எவ்வாறு சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியும்? மும்பையின் மக்கள் அடர்த்தி ஒரு ஹெக்டேருக்கு 228 என்றால் தாராவியில் இது 3,846!

சமீப நாட்களில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி அதன் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் பயத்துடனும், அவநம்பிக்கையுடனும் தாராவியை அணுக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. முக்கால்வாசி வீடுகளுக்குக் கழிப்பறை கிடையாது. பொதுக் கழிப்பறையும் இங்கே கொரோனா வேகமாகப் பரவ ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வுக்கு வந்த மருத்துவர்கள்.

மும்பையின் 55% மக்கள் அதாவது 1.2 கோடி மக்கள் தாராவியை போன்ற குடிசை பகுதியிலேயே வாழ்கின்றனர். மற்ற 45% மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதின் பரப்பளவோடு ஒப்பிடும் போது இவர்கள் வாழும் நிலப்பகுதியின் பரப்பளவு 0.5% மட்டுமே. இதுதான் உண்மையான சமூக இடைவெளி. இந்த சமூக இடைவெளியால்தான் கொரோனா பரவல் தடுப்பதற்காக சொல்லப்படும் ‘சமூக இடைவெளியை’ அவர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை. சூரிய வெளிச்சம் கூட படாத இந்த குடிசைப் பகுதியில் ஒரு வளமான வாழ்க்கையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்..?

கடந்த பல வருடங்களாவே தாராவியை சீரமைக்க அரசுகள் திட்டங்கள் தீட்டின. அவை திட்டங்களாவே நின்று விட்டன. கொரோனா வைரஸின் தாக்கம் மறுபடியும் அரசின் பார்வையையும், கவனத்தையும் தாராவியின் மீது திருப்பியுள்ளது. இனி தாராவி, மீண்டெழுமா, அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கை செழுமை அடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதே சூழலில்தான் தமிழகத்தின் கோயம்பேடு, ராயபுரம், வட சென்னை… போன்ற பகுதிகள் இருக்கின்றன.

அன்னம் அரசு