யானைகளுக்காக ஒரு காட்டை உருவாக்கிய மனிதனின் கதை!



கிட்டத்தட்ட 26 யானைகள். மூணு மொழிப் படமா உருவாகுது ‘காடன்’. தமிழ் சினிமாவின் முக்கியமான படம்னு நிச்சயம் மக்கள் உணர
முடியும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி காடுகளைத் தடுத்து ஒரு டவுன்ஷிப் உருவாக்கினாங்க. அதுக்காக ஒரு பெரிய சுவர் கட்டி பிரிச்சாங்க. அது யானைகளின் வழித்தடத்துக்கு குறுக்கே வந்தது.

கிட்டத்தட்ட 200 வருஷங்களா யானைகள் குடும்பமா போயிட்டிருந்த பாதையை அடைச்சதும் அவைகள் குழம்பிவிட்டன. வழித்தடங்களை மறிச்சி ரிசார்ட்ஸ் கட்டியாச்சு. ஆள்துளைக் கிணறுகள் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி யானைகளின் நீர்நிலைகளை எல்லாம் காலி பண்ணியாச்சு.
ஒரு யானை மட்டுமே ஒரு நாளைக்கு 100 லிட்டருக்கு மேல தண்ணீர் குடிக்கும். ஆனால், மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கிறதுக்காக நாம அந்த யானைகளைப் போட்டு படுத்தி எடுக்கிறோம். யானைகள் அந்தப்பக்கம் தவறிப் போனால் ஆக்கிரமிப்பு செய்தவங்க நெருப்பை வீசி, கல்லெடுத்து எறிஞ்சு யானைகளை கஷ்டப்படுத்திட்டாங்க.

இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தட்டிக்கேட்டாங்க. அங்கே இருந்த ஜாதவ் பியாங் என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு காடுகளை உருவாக்கினார். அவரையும் யானைகளையும் முடிச்சுப் போட்டு ஒரு திரைக்கதை உருவாக்கினேன். அதுதான் ‘காடன்’ படம்...’’ யானைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவற்றின் மீதான கரிசனம் அப்படியே படர்கிறது இயக்குநர் பிரபு சாலமனிடம்! ‘மைனா’, ‘கும்கி’க்குப் பிறகு ‘காடனு’க்காக மீண்டும் காட்டுக்குள் இவர் தஞ்சம் அடைந்திருக்கிறார்.  

ஜாதவ்வாக ராணா கம்பீரமா இருக்கார்…‘பாகுபலி’க்குப் பிறகு அவர் மிகவும் வித்தியாசமான படங்களைத்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் குடும்பமே படங்கள் தயாரிக்கிறதும் அதன் வெளியீட்டிலும் இத்தனை வருஷங்களா சிறந்து நிற்கிறாங்க. அவரே நடிக்கறதுக்கு மிகவும் செலக்டிவாக இருக்கிறார்.

யானை பக்கத்துல நிக்கிறதுக்கு உயரமும் கம்பீரமும் தெம்பும் இணைஞ்சு ஒரு தோற்றம் வேணும். இந்த ஸ்கிரிப்டை அவர் கேட்டதும் ரொம்ப சந்தோஷமா சம்மதிச்சார். ஒரு தனி மனிதனா உருவாகி எப்படி யானைகளுக்கு வழிவகை செய்து கொடுத்தார்னு கதை போகும். நடிக்க ரொம்ப பொறுமை வேணும். ஆறு கிலோமீட்டர் காம்பவுண்ட் கட்டினோம். முப்பது யானைகள் மொத்தமா கிடைக்க வாய்ப்பே இல்லை. அதனால தாய்லாந்துல படப்பிடிப்பு நடத்தினோம். யானைகளின் மனநிலையை சந்தோஷமா வெச்சிக்கணும். ஒரு நாளைக்கு நாலைஞ்சு மணிநேரத்துக்கு மேல யானைங்க பாகன் கட்டுப்பாட்டில் இருக்காது.

‘மைனா’வுக்கு காட்டுக்குள்ள போகும்போது காட்டுக் கிழங்கும் தேனும் சாப்பிட்டுட்டு நல்ல துணியில்லாமல் சந்தோஷமா நடமாடுற மக்களைப் பார்த்தேன். அவங்க சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி இருக்கறதுனாலதான் நகரத்துக்குள்ள நாம அழகா திரியுறோம். இப்பவும் நாங்க காட்டுக்குள்ள அப்படித்தான் திரிஞ்சோம். யானைகள் மாதிரி அப்பப்ப வெளியே வந்தோம்.

உங்களுக்கு யானைகளைப் பத்தி அவ்வளவு விஷயம் தெரியும்னு சொல்றாங்க…  இதில் விஷ்ணு விஷால்கிட்ட இருக்கற யானை எனக்கு ரொம்ப தோஸ்த். என்னைப் பார்த்ததும் தோள்மேல தும்பிக்கையைப் போடும். அப்ப அவங்க கண்களைப் பார்த்தால் அப்படியே ப்ரியம் பொங்கி வழியும்.
தினமும் 50 கிலோமீட்டர் நடக்கக்கூட யானைகள் தயங்காது. அவைகள் போடுகிற சாணத்தில் நிறைய விதைகள் இருக்கும். அதனால் காடுகள் தொடர்ந்து பெருக வாய்ப்பு இருக்கு.

ஆண் யானைகள் தனியா பிரிஞ்சுடும். சேர்ந்து கூட்டம் கூட்டமா வருகிற யானைகள் பெண் யானைகளாகவே இருக்கும். அவைகளும் உறவு யானைகளாகவே இருக்கும். இதில் எதிலும் சேராமல், தான் தோன்றியா திரியுற யானைகளை ரௌடி யானைகள்னு சொல்வாங்க.
யானைகளுக்கு சென்டிமென்ட், ஆசாபாசம், ஞாபகம், எமோஷன், காதல், பழிவாங்கும் உணர்ச்சி எல்லாம் உண்டு. ஆக அது மனிதன் மாதிரிதான். உங்கள் மேல் ப்ரியம் இருப்பதை அவைகளால் உணர்த்த முடியும். யானைகள் சிரிக்கும். கோவம் வருகிற அதே அளவு கனிவும் இருக்கும்.
 
இங்கே ‘யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்’னு செய்திகள் போடுறாங்க. நியாயமா அது ‘யானைகளின் வீட்டில் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்’னு இருக்கணும். யானைகளை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்க. ஆனால், அதில் உண்மை இல்லை.

யானைக்கு சின்ன சத்தம்கூட பிடிக்காது. யானைகள் மனிதர்களின் பாசத்தை பதிவு பண்ணி வைக்கும். எங்கே சோளம் நெல்லு விளைஞ்சிருக்குன்னு அவங்களுக்குத் தெரியும். பரம்பரையாக யானைகளின் ஜீன்களிலேயே வழித்தடத்துக்கான மேப் ரூட் இருக்கு. இப்படி யானைகளைப் பத்தி சொல்லிகிட்டே போகலாம். இன்னும் எக்கச்சக்கதகவல்கள் இருக்கு..

விஷ்ணு விஷால் இந்தப் படத்துக்குள்ள எப்படி வந்தார்..?

யார் வந்தாலும் காட்டுக்குள்ள சிரமப்பட்டுதான் ஆகணும். விஷ்ணு விஷால் ரொம்ப மெனக்கெட்டு ஆர்வமா நடிச்சார். ஒரு யானைகிட்ட இயல்பா பழகுவது சாதாரண வேலையில்ல. அவங்க எந்த மனநிலையில இருக்காங்கன்னு பார்த்து அறியணும். அவங்க மேல ஏறி உட்கார்றதும் அவங்களை வழி நடத்துவதும் ஆகப் பெரிய வேலை.

அதை அருமையா செய்திருக்கார். சோயா, ஸ்ரேயானு ஸ்கூல் ட்ராமா பொண்ணுங்க நடிக்கிறாங்க. யாரையும் ஹீரோ, ஹீரோயின்னு சொல்லிக்க முடியாது. எல்லாமே கதாபாத்திரங்கள்தான்.

இதில் ஒளிப்பதிவாளரின் பணி கடுமையா இருக்குமே…

அசோக்குமாரை ஒளிப்பதிவாளரா இந்தப் படத்தில் அறிமுகம் பண்றேன். கிடைக்கிற லைட்டிங், காட்டின் அடர்த்தியை வெச்சுட்டுதான் ஒளிப்பதிவு பண்ணணும். கூடவே 30க்கும் மேற்பட்ட யானைகள் அவைகளின் நடமாட்டம், உணர்வுகளைப் புரிஞ்சி நடக்கணும். யானைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதுவா நடிக்க வந்தாதான் நடிப்பு. இல்லைன்னா அன்னைக்கு முழுநாள் வேஸ்ட்தான். சில யானைகள் சில குறிப்பிட்ட சூழலில்தான் இயல்பா இருக்கும். இப்படி ஒரு படத்தை தயாரிக்கவும் இத்தனை யானைகளை மனம் கோணாமல் கவனிக்கவும் ஈராஸ் மாதிரியான நிறுவனம் முன்வந்ததால் இது சாத்தியம் ஆச்சு.

இது மாதிரி காடுகள் யானைன்னு போனா காலம் அதிகம் எடுக்குமே!எனக்கு காடுகள் பிடிக்கும். கிட்டத்தட்ட நாலு வருஷங்களா இந்த படத்துக்குள்ளே இருக்கேன். இந்தக் காடு என்னை இழுத்து அரவணைச்சு புத்துணர்ச்சி கொடுத்துக்கிட்டே இருக்கு. காட்டில் வாழும் மனிதர்களே உண்மையான மண்ணின் மைந்தர்கள்.

காடுகளை அழிச்சு தொலைச்சு இயற்கையை சிதைச்சா அவங்க கோபப்பட்டு சுனாமி, கொரோனான்னு கோபமா நம்மை நோக்கும் போது பூஜ்யம் மாதிரி அடங்கிப் போயிடுறோம். இனிமேல் இயற்கையை கொண்டாடினால் மட்டுமே நமக்கு வாழ்க்கை. தவறினால் மரத்தை அறுத்து வீட்டை கட்டிட்டு நுரையீரலுக்கு பாதுகாப்பா மாஸ்க் போட்டுட்டு திரிய வேண்டியதுதான். இயற்கை விட்ட டீசருக்கே இப்படி அலறுகிறோம். முழுப்படம் வந்தா என்ன ஆகும்? ஆக இயற்கையை ஆராதிப்பவனே எங்கள் ‘காடன்’!