கொரோனா கார்னர்!



* கொரோனா வைரஸ் பீதியால் மனிதர்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான நகரங்களின் நிலை இதுதான். ஆனால், இந்த ஊரடங்கு காலம் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுதந்திரக்கதவை திறந்துவிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சான் டியேகோ உயிரியல் பூங்காவில் பெங்குவினும் ஓராங்குட்டானும் சந்தித்ததுதான் கொரோனா காலத்து வைரல்.  இப்படியான ஆச்சர்ய சம்பவங்கள் அரங்கேற கொரோனா வைரஸ்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.

* பிரான்ஸின் புகழ்பெற்ற கிராஃபிட்டி கலைஞர் சைபே. புல் தரையின் மீது ஓவியம் வரைவது இவரது ஸ்பெஷல். சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் உள்ள ஒரு புல் தரையில் ராட்சத ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார். கொரோனா காலத்தில் மனிதர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் இந்த ஓவியம் 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடையது. பாராசூட் அல்லது விமானத்தில் பறந்தபடியே பார்த்தால்தான் முழு ஓவியத்தையும் தரிசிக்க முடியும்.

* இங்கிலாந்தில் தேசிய சுகாதாரப் பணியில் இருப்பவர்கள் மருத்துவமனையே கதி என்று இருக்கிறார்கள். கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கக்கூட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.  இந்நிலையில் மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் தேசிய சுகாதாரப் பணியில் இருக்கும் ஊழியர்களின் சுமையைக் குறைப்பதற்காக மளிகைப்பொருட்களை ரோபோ மூலம் அவர்களின் வீட்டுக்கே  கொண்டுபோய் சேர்க்கிறது. இந்த ரோபோ சேவை இலவசம்.

* இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையின் ஆக்கிரமிப்பில் இருந்து இத்தாலி விடுதலையடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  கடந்த ஏப்ரல் 25ம் தேதி 75வது விடுதலை நாளை தங்களது பால்கனியில் இருந்தவாறே எதிர்ப்புக் கீதத்தைப் பாடிக் கொண்டாடியிருக்கிறார்கள் இத்தாலிய குடிமக்கள். ஒரு நாட்டின் விடுதலை நாளை வீட்டுக்குள்ளே இருந்து கொண்டாடிய நிகழ்வு வீடியோக்கள் செம வைரலாகிவிட்டது.

* கலிபோர்னியாவைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத முதியவர்களுக்கு வேண்டிய மளிகைப்பொருட்களைக் கடைகளில் வாங்கி இலவச டோர் டெலிவரி செய்திருக்கின்றனர். இந்தச் சேவை வெளியே தெரிய வர அமெரிக்காவில் உள்ள 21 நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் டோர் டெலிவரியில் இறங்கிவிட்டனர். ‘‘நாங்கள் ஜென் இஸட் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யவே இங்கிருக்கிறோம்…” என்கின்றனர் குதூகலமாக.

* அமெரிக்காவின் கேன்சஸ் மாகாணத்தைச் சேர்ந்த முதிய விவசாயி ஒருவர் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூக்கு எழுதிய கடிதம்தான் இப்போது அங்கே ஹாட் டாக். அந்த விவசாயியிடம் ஐந்து என்95 மாஸ்குகள் இருந்திருக்கின்றன. அதில் தனக்கும் மனைவிக்கும் போக மீதியை செவிலியர் அல்லது மருத்துவருக்குக் கொடுக்கச் சொல்லி கவர்னரிடம் வேண்டுகோள் வைக்கவே அந்தக் கடிதம். விவசாயியின் மனிதாபிமானச் செயலைப் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்தக் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரூ.

* அமெரிக்காவின் டாப் மருத்துவமனைகளில் ஒன்று UCLA. அங்கே உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளியின் உடல்நிலை சீராகி அவரால் வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க முடியும் என்று தெரிந்தால் மருத்துவர்களும் செவிலியர்களும் நடனமாடி நோயாளியை சாதாரண பிரிவுக்கு மாற்றுகின்றனர். இந்த நடனத்தை மருத்துவர் ஒருவர் டுவிட்டரில் பகிர, உடனே வைரலாகிவிட்டது.                                     
* ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜேஸன் வானின் அம்மா, டிமென்ஷியா நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு வயது 87. ஊரடங்கால் வெளியே செல்ல முடியாமல் மேலும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார் அந்த தாய். அம்மாவை மகிழ்ச்சிப்படுத்தவும் அவருக்கு வெளியே சென்று ஷாப்பிங் செய்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தரவும் வீட்டுக்குள்ளேயே ஒரு சூப்பர் மார்க்கெட்டை வடிவமைத்திருக்கிறார் ஜேஸன். அதில் அந்த அம்மா ஷாப்பிங் செய்யும் காட்சி பலரை நெகிழ வைத்துள்ளது.

* வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்க மளிகைக்கடைக்குச் செல்கிறீர்கள். பொருட்களை வாங்கிய பின் பில் வருகிறது. பில்லுக்கு உரிய தொகையை உங்களின்   பர்ஸிலிருந்து எடுக்கப்போகும் போது கடையிலிருப்பவர், “ பணம் வேண்டாம். உங்கள் பில்லை முன்பே ஒருவர் கட்டிவிட்டார்…” என்கிறார்.

உங்களுக்கு எப்படியிருக்கும்? அதுவும் கையில் காசில்லாத கொரோனா காலத்தில். இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோவீர்கள் அல்லவா. அதுதான் நடந்திருக்கிறது அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் நியூ ஆர்லியன்ஸ் பகுதி மக்களுக்கு. ஆம்; நடிகர் டெய்லர் பெர்ரி அட்லாண்டா, நியூ ஆர்லியன்ஸில் உள்ள 73 கடைகளுக்கு ஒரு தொகையை கொடுத்துவிட்டார். குறிப்பிட்ட ஒரு தேதியில் பொருட்கள் வாங்க வரும் முதியவர்களிடம் பணம் வாங்கக்கூடாது என்பது அவரது கட்டளை. அந்த நாளில் 3 ஆயிரம் பேர் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர்.

*டிஜிட்டல் உலகத்தில் வாழ்த்து அட்டைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஹால்மார்க் நிறுவனம் 40 லட்சம் வாழ்த்து அட்டைகளை இலவசமாக மக்களுக்கு வழங்கியுள்ளது. அதன் இணைய தளத்தில் பதிவு செய்து யார் வேண்டுமானாலும் வாழ்த்து அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாழ்த்து அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்பது கால்மார்க்கின் நோக்கம். தவிர, தங்களின் அன்புக்குரியவர்களுக்கும் இந்த வாழ்த்து அட்டையை அனுப்பலாம்.

த.சக்திவேல்