நாலு மூலை



கொரோனா வைரஸ் அல்ல சீன வைரஸ்

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் உலகம் முழுக்க வசிக்கும் ஆசிய மக்கள் இனவாதத்தால் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரசை சீனா வைரஸ் என்று குறிப்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பொறுப்பான தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், இப்படி ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது பழி போடும் விதத்தில் முத்திரை குத்தியதை எதிர்த்து அனைத்து நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

துவைக்கப் படாத ஏசி ரயில் போர்வைகள்

ஆமாம். ஏசி ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகளும், திரைகளும் பல மாதங்களாக துவைக்கப்படுவதே இல்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.இதை வெளியிட்டது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் தகவல் என்பதுதான் ஹைலைட்.

எனவே இனி குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் மக்கள், வீட்டிலிருந்தே போர்வைகள் கொண்டு வருமாறு, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தவிர இனி போர்வை தேவைப்படாத அளவு 24 - 25 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்ப நிலை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம்

நெகிழிகள் அதிகரிக்க முக்கிய காரணங்களுள் ஒன்றாக தண்ணீர் பக்கெட்டுகளும், பாட்டில்களிலும் இருக்கின்றன. இதற்கு தீர்வாக வந்ததுதான் ஓஹோ (Ooho) தண்ணீர். இவை கடித்துச் சாப்பிடக்கூடிய தண்ணீராக ‘edible water bottle’களாக இருக்கின்றன. பலூனுக்குள் தண்ணீர் இருப்பது போல, கடற்பாசி, கால்சியம் குளோரைட் போன்ற பாதுகாப்பாக உட்கொள்ளப்படும் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. நுங்கை கடித்தால், உள்ளே தண்ணீர் இருப்பது போல, இதுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜெயண்ட் வீலில் நீராவி குளியல்

நீராவி குளியல் எனப்படும் ‘sauna’ பின்லாந்தில் மிகப்பிரபலம். பொதுவாக நீராவி குளியலுக்கு பின் உடலும் மனதும் புது மலர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.பின்லாந்தில் பல ‘sauna’ இருக்கின்றன. இந்நிலையில் வானைத்தொடும் ஜெயண்ட் வீலில், நீராவி குளியல் அறை அமைத்து, 40 மீட்டர் உயரத்தில், இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே ஓய்வெடுக்கும் புதிய ‘Sky Sauna’ சுற்றுலா பயணிகளின் அடுத்த இலக்காக அமைந்திருக்கிறது.

பாதி உலகை சுற்றி வந்த ஆமை.

மனிதனுக்கு வீடிருப்பது போல, கடல் வாழ் உயிரினங்களுக்கும் தங்குமிடம் இருக்கும். அப்படி ஒரு ஆமை, தன் வீட்டை தேடி 37 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது. 20 வருடங்களுக்கு முன் கடல் ஆமை ஒன்று தனது ஓடில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜப்பானில் காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பயிற்சியாளர்களின் முயற்சியால் மீண்டும் நீந்த கற்றுக்கொண்ட ஆமை, கடலில் கண்காணிக்கும் கருவியுடன் விடப்பட்டது. சுமார் இரண்டு வருடங்கள்... 37,000 கிமீ தொலைவு நீந்திச் சென்று தன் இருப்பிடத்தை அது அடைந்ததாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.    

விண்வெளியில் குப்பையை சேகரிக்கும் வலை

விண்வெளியில் பல மில்லியன் குப்பைகள், சேதமடைந்த ஏவுகணைகளிலிருந்தும், விண்வெளி வீரர்களால் தவறுதலாக விடப்பட்ட பொருட்களாலும் நிறைந்திருக்கிறது. இந்த குப்பைகளால், பூமிக்கும் விண்வெளிக்குமே ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் செயற்கைகோள் மூலம் ஒரு பிரமாண்ட வலையை இணைத்து குப்பைகளை அகற்றும் பணியை தொடங்கியுள்ளது.

கேயாஸ் தியரி!

கணினி யுகத்திலும் அமெரிக்க நடிகரும் ஃபிலிம் மேக்கரும் சிறுகதை எழுத்தாளருமான டாம் ஹாங்ஸ் தட்டச்சு இயந்திரத்தையே பயன்படுத்தி வந்தார்.
அவர் பயன்படுத்திய தட்டச்சு இயந்திர நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? கொரோனா! இப்போது டாமும் அவரது மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கேயாஸ் தியரி என்பது இதுதானோ.

ஸ்வேதா கண்ணன்