எச்சரிக்கை தேவை... ஆனால், பயமும் பதற்றமும் தேவையில்லை!



தமிழகத்தில் கொரோனா வைரஸ்:

டாக்டர் ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

கொரோனா வைரஸ்:
முதலில் இந்த கொரோனா வைரஸ் (தமிழில் மகுட தீநுண்மம், ஒளிவட்ட நச்சுயிரி) என்பது முற்றிலும் புதிதான ஒன்றல்ல.
மாத்திரை சாப்பிட்டால் 7 நாட்களில் சரியாகும், மாத்திரை சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும் என்று நக்கலடிக்கப்படும் சாதா சளி (காமன் கோல்ட்) காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்களில் இதுவும் ஒன்று. ஆனால், சில நேரங்களில் இந்த சாதா சளி வைரஸ் அசாதாரண வைரஸாக மாறி ரணகளமாக்கிவிடுகிறது.

வெறி பிடித்த கொரோனா வைரஸ்:
வளர்க்கும் நாயானது நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன் உங்கள் காலை நக்கும். இதில் பிரச்னை இல்லை. ஆனால், அந்த நாய்க்கு வெறிபிடித்தால் உங்களைக் கடிக்கும். அதனால் உங்களுக்கு ரேபீஸ் வரும். அதுதான் பிரச்னை.  யானை என்பது பழகுவதற்கு மிகவும் நல்ல மிருகம்தான். யானை நன்றாக இருக்கும் போது உங்களிடம் இருந்து பழத்தை வாங்கிக்கொண்டு உங்களை ஆசீர்வதிக்கும். ஆனால், அதே யானைக்கு மதம் பிடித்துவிட்டால், உங்களை மட்டுமல்ல, அந்த யானைப்பாகனையும் சேர்த்து தூக்கிப் போட்டு துவம்சம் செய்துவிடும்.

அதே போல் சில நேரங்களில் நமது கொரோனா வைரஸிற்கும் வெறி பிடித்து விடுகிறது. அப்படியாக வெறி பிடிக்கும் போது இந்த வைரஸானது சாதா சளி, காய்ச்சலை மட்டும் உண்டாக்குவதில்லை. கூடவே சேர்ந்து நுரையீரலில் சளி கட்டுவது (நிமோனியா), பல உறுப்புகளும் சேர்ந்து செயலிழப்பது (மல்டி ஆர்கன் பெயிலியர்) என்று ஏற்படுத்துகிறது.

இப்படி வெறி பிடித்த கொரோனா வைரஸ்தான் சார்ஸ், மெர்ஸ், சார்ஸ் கோவ் 2 போன்ற பல கொள்ளை நோய்களையும் (எபிடெமிக்) உலகம் முழுவதும் பரவும் நோய்களையும் (பேண்டமிக்) உண்டாக்குகிறது.தற்சமயம் சீனாவில் கொள் ளைநோயாக உருவாகி பிறகு உலகம் முழுவதும் பரவியுள்ள கோவிட் 2019 (COVID - 19) என்பதும் கொரோனா வைரஸின் வெறிபிடித்த ஒரு வடிவம்தான்.

எச்சரிக்கை தேவை, பயமும் பதற்றமும் தேவையில்லை:
சீனாவில் 3000 பேர் மரணம், இதற்கு சிகிச்சையே கிடையாது போன்ற செய்திகளால் நீங்கள் பயப்பட்டு, பதற்றமடைந்திருக்கலாம். ஆனால், பயமும் பதற்றமும் தேவையேயில்லை. எச்சரிக்கை மட்டும் போதும்.உதாரணமாக சீனாவில் அதிநவீன மருத்துவமனைகள் இருந்தாலும், அவர்கள் கடந்த சில தசாப்தங்களாக இரண்டாம் நிலை (செகண்டரி கேர்) மற்றும் மூன்றாம் நிலை (டெர்ஷியரி கேர்) ஆகியவை குறித்து மட்டுமே கவனம் செலுத்தியதால் அவர்களது ஆரம்ப சுகாதார கட்டமைப்பு மற்றும் பொது சுகாதார கட்டமைப்பு பின் தங்கிய நிலையில் இருந்தது.

இதனால்தான் அங்கு 3000 மரணங்கள் ஏற்பட்டன. தமிழகம் போல் சிறப்பான பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் செயல்பாடு உள்ள சிங்கப்பூர், கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் மரணம் வெகு குறைவு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அதேபோல் கோவிட் 2019 வைரஸிற்கு ஏற்ற குறிப்பிட்ட மருந்து இல்லை என்பது உண்மை என்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸை எதிர்த்து விடும். ஆனால், அதற்கு சில நாட்கள் ஆகும். அந்த சில நாட்கள் மட்டும் சீரிய கண்காணிப்பில், தீவிர சிகிச்சையில் இருந்தால் மரணத்தைத் தவிர்க்கலாம்.

சீனாவில் பல ஆயிரம் நபர்கள் சீரிய கண்காணிப்பில், தீவிர சிகிச்சையில் இருந்து நோயை வென்ற செய்தி வந்துகொண்டுதான் உள்ளது. அதே போல் இந்தியாவில் கூட நமது அண்டை மாநிலத்தில் கோவிட் 19 பாதிக்கப்பட்ட நபர்கள் எந்தவித நிரந்தர பாதிப்பும் இல்லாமல் நோயை வென்றுவிட்ட செய்தியையும் பார்க்கலாம்.எனவே பயமும் பதற்றமும் தேவையில்லை. எச்சரிக்கைதான் தேவை!
என்ன செய்ய வேண்டும்:

பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை எளிதுதான்.

1. பயம் வேண்டாம், பதற்றம் வேண்டாம்.
2. வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பாதீர்கள். சிக்கன், மட்டன், மீன் சாப்பிடலாம். எந்த பயமும் இல்லை.  
3. இதுவரை நீங்கள் அரசு அட்டவணைப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் (பிற நோய்களுக்கான தடுப்பூசி) இப்பொழுதாவது போட்டுக்கொள்ளவும்.
4. சாதாரண சளி பிடிக்காமல் இருக்கச் செய்யும் மழையில் நனைந்தால் தலையைத் துவட்டுவது போன்ற அனைத்து எச்சரிக்கைகளையும் செய்யவும்.
5. முடிந்தவரை குளிர்சாதன பயன்பாட்டை தவிர்க்கவும்.
6. வீட்டில் / அலுவலகத்தில் இருக்கும் குளிர்சாதன கருவியை சுத்தப்படுத்தவும்.
7. சீருந்தில் செல்லும் போது அவ்வப்போது கண்ணாடியை திறந்து விட்டு புது காற்று உள்ளே வரும்படி செய்யவும்.
8. ஏதாவது அறைக்குள் / பேருந்திற்குள் / திரையரங்கிற்குள் பூஞ்சணம் பூத்த வாசம் வருகிறது என்றால் அங்கு கோவிட் 19 உட்பட அனைத்து கொரோனாக்களும் இருப்பார்கள். உடனே அந்த இடத்தை காலி செய்யவும்.
9. தினமும் 3 முறை பல்துலக்கவும்.
10. வெளியில் சென்று விட்டு வந்தவுடன் வாயைக் கழுவவும். மவுத் வாஷ் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை வாயைக் கழுவவும். மவுத் வாஷ் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவர்கள் வெது
வெதுப்பான (மிதமான சூட்டில்) நீரில் உப்பைக் கரைத்து வாயைக் கொப்பளிக்கவும்.
11. சளி, காய்ச்சல் என்றால் உடனே அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யவும். சளி எல்லாம் கோவிட் 19 அல்ல. காய்ச்சல் எல்லாம் கோவிட் 19 அல்ல. ஆனால், கோவிட் 19 சளியாகவும், காய்ச்சலாகவும்தான் ஆரம்பிக்கும். அது நிமோனியாவாக மாறுவதைத் தடுத்தால் உயிருக்கு ஆபத்து இல்லை.

டாக்டர் குறிப்பு

Dr.J.Mariano Anto Bruno Mascarenhas, M.B.,B.S., M.Ch., (Neurosurgery).
Senior Assistant Professor of Neurosurgery, Madras Medical College.
Consultant Neurosurgeon, Tamil Nadu Government Multi Super Specialty Hospital, Omandurar Government Estate, Chennai.
Technical Team Leader, Tamil Nadu Accident and Emergency Care Initiative, Government of Tamil Nadu.
Nodal Officer for Clinical Governance, HealtheGov, HMIS National Health Mission.
Consultant (Research and Planning), Tamil Nadu Health Systems Reforms Project.