நான்...கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்



நாலு பேருக்கு என்னைத் தெரியணும். இந்த எண்ணம் எனக்கு ஸ்கூல், காலேஜ்னு எல்லா வயசுலயும் இருந்துச்சு. இந்த எண்ணம்தான் இன்னைக்கு என்னை இங்க கொண்டு வந்திருக்குனு சொல்லலாம்.சோ கால்ட் மிடில் கிளாஸுக்குரிய அத்தனை டெம்பிளேட்டுகளும் அடங்கின குடும்பம். அப்பா கிருஷ்ணமாச்சாரி எலக்ட்ரிக்கல் பிஸினஸ். அம்மா இந்திரா கிருஷ்ணமாச்சாரி சதா பூஜை பெருமாள்னு இருப்பாங்க.

அப்பாவுக்கும் சரி, அம்மாவுக்கும் சரி... கிரிக்கெட்ல அ, ஆ… கூட தெரியாது. டிவில அல்லது ரேடியோவுல என்னைப் பத்தி நியூஸ் வர்றப்ப ஏதோ பையன் சாதிக்கறான்னு மட்டும்தான் அவங்களுக்கு தெரியும். ‘நல்லா படிச்சு மார்க் எடுத்துக்கிட்டே என்ன வேணும்னாலும் செய்...’ இதுதான் அப்பாவின் ஒரே மந்திரம். படிப்புதான் பிரதானம். நானும் 95% மார்க் வாங்கி மெரிட்லதான் கல்லூரில சேர்ந்தேன். அப்ப இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா எல்லாம் கிடையாது. மார்க் வாங்கினா சீட்டு நிச்சயம்.

ஸ்கூல் படிக்கும்போதே சவுத் ஸோன்ல விளையாட ஆரம்பிச்சிட்டேன். மயிலாப்பூர் வித்யா மந்திர் ஸ்கூல்லதான் பள்ளிப் படிப்பு. 1976ல இருந்து 1981 பேட்ச் கிண்டி பொறியியல் கல்லூரி. கலாக்ஷேத்ரா காலனில எங்க வீடு. அப்புறம் பெசன்ட் நகர்.கிரிக்கெட் எனக்குள்ள எப்படி வந்துச்சுனு கேட்டா... சொல்லத் தெரியலை. என்னை விடுங்க... எந்த பசங்களாலயும் சொல்ல முடியாது. அப்ப இந்த மொபைல், டிவி எதுவும் கிடையாது. ஒரே பொழுதுபோக்கு நண்பர்களோடு விளையாட்டு. அதிலும் கிரிக்கெட் அதிகம் விளையாடுவோம். லீவு விட்டா வீட்டுக்குள்ள இருக்க மாட்டேன்.

விளையாடி அடிபட்டு காயத்தோடு வீட்டுக்கு வருவது, பக்கத்து வீட்டு ஜன்னலை உடைப்பது, வீட்ல திட்டினா வீட்டுக்குள்ளயே விளையாடி சேட்டை பண்றது... இப்படி என் சின்ன வயசு வரமா அமைஞ்சுது! என் கூட பிறந்தவங்க ரெண்டு பேர். சகோதரர் பேரு ஸ்ரீநாத். தங்கை பேரு ஸ்ரீகலா. அண்ணனுக்கு கிரிக்கெட்ல பெரிய ஆர்வம் இல்ல. பிசினஸ் பக்கம் நகர்ந்துட்டார். தங்கச்சி டான்ஸர். இப்பவும் எந்த இடத்துக்குப் போனாலும் மிடில் க்ளாஸுக்குரிய எல்லா குணங்களையும் எங்க குடும்பத்துல பார்க்கலாம்.

கிரிக்கெட் மட்டுமில்ல... எல்லா விளையாட்டும் விளையாடுவேன். டென்னிஸ், வாலிபால்னு எதையும் விட்டு வைக்கலை. என்ன... கிரிக்கெட் மேல கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதுவே ஆசையாகி இப்ப வாழ்க்கையாகிடுச்சு.

ஸ்கூல்ல படிக்கிறப்ப தமிழ்நாடு டோர்னமென்ட்ல விளையாட வாய்ப்பு கிடைச்சது. இப்ப இருக்கறா மாதிரி அவ்வளவு பெரிய வாய்ப்புகள் எல்லாம் அப்ப கிடையாது. பெரிய சிட்டில இருந்தா மட்டும்தான் உங்களுக்கு இந்த டோர்னமென்ட் வாய்ப்புகள் எல்லாம் கூட அமையும். இப்ப ஐபிஎல், டிஎன்பிஎல் எல்லாம் வந்து கிராமப்புற இளைஞர்களும் கூட கிரிக்கெட்ல சாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நல்ல முன்னேற்றம். முக்கியமா டிவி சேனல்கள் இதுல பெரிய வேலை செஞ்சிருக்கு.

முன்ன ரஞ்சி  டிராஃபி விளையாடினா இந்திய டீம்ல வாய்ப்பு கிடைக்கும். ஏன், தோனி வரைக்குமே ரஞ்சி டிராஃபி மட்டும்தான் தேசிய சர்வதேச போட்டிகள்ல விளையாடக்கூடிய வாய்ப்பைக் கொடுத்துட்டு இருந்திச்சு. அப்ப லைவ்வா டிவில மேட்ச் பார்க்க முடியாது. ஸ்கோர் அப்டேட் கிடையாது. ரேடியோ கமெண்ட்ரி மட்டும்தான். மறுநாள் நியூஸ் பேப்பர்ல வர்ற ஸ்டோரியை வைச்சுதான் ஒவ்வொரு நாட்டு ப்ளேயரும் எப்படி விளையாடினாங்கனு தெரிஞ்சுக்க முடியும்.

ரசிகர்கள் மட்டுமில்ல... நாங்களும் மத்த நாட்டு ப்ளேயர்ஸ் எப்படி ஆடறாங்கனு நியூஸ் பேப்பரை படிச்சுதான் கணிப்போம். இப்ப டிவில மேட்ச்சை பார்த்தே கணிக்கலாம்.ஆனா, எங்களுக்கு இருந்த ரிஸ்க்கை விட இப்ப உள்ள ப்ளேயர்ஸுக்கு ரிஸ்க்கும் டென்ஷனும் அதிகம். ஸோ, எங்க காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிட மாட்டேன்.

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல விளையாட ஆரம்பிச்சிட்டேன். ஆனா, அப்பா என்கரேஜும் பண்ணலை; டிஸ்கரேஜும் பண்ணலை. படிப்பை கோட்டை விட்டுடாதனு மட்டும்தான் சொல்லிட்டே இருந்தார். இதனாலயே எக்சாம், செமஸ்டர் டைம்ல நடந்த போட்டிகள்ல நான் கலந்துக்கலை.

காலேஜ் முடிக்கிற நேரத்துல இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைச்சது. இதையே இப்படி சொல்லலாம்.

என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துலயும், எந்தெந்த வயசுல எது எது நடக்கணுமோ... அதெல்லாம் சரியா நடந்துச்சு. இது கடவுள் அருள்னுதான் சொல்வேன். எங்கம்மா செய்யற பூஜை எனக்கு கைகொடுத்தது. நானும் கிடைச்ச வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்டேன்.

1981ல இந்திய அணி வீரரா அறிமுகமானேன். 1983ல புரூடென்ஷியல் உலகக் கோப்பை ஜெயிச்ச அணில நானும் இருந்தேன். 1984ல கிரிக்கெட்டுல ஒரு சின்ன பிளாக். கொஞ்சம் ஒதுங்கியிருந்தேன். மறுபடியும் சாதிக்கணும்... இந்த பிளாக்கை உடைச்சே தீரணும்னு 1989ல ரீஎன்ட்ரி ஆனேன். இந்திய டீம் கேப்டனாகவும் உயர்ந்தேன்.

இங்கிலாந்துடனான போட்டில ஜெயிக்க 260 ரன்கள் வேணும். அந்த சமயம் சேதன் சர்மாவை திட்டமிட்டு முன்னரே பேட்டிங் ஆட அனுப்பினேன், ஜெயிச்சிட்டோம். அந்த வருடம்தான் சச்சின் இந்திய டீம்ல அறிமுகமானார்.நான் எதிர்மறை விமர்சனங்களையும் பாசிட்டிவ்வா பார்க்கற ஆளு. என் பேட்டிங் ஸ்டைல் கூட ஆரம்பத்துல நிறைய விமர்சனங்களை சந்திச்சது. ‘தூக்கித் தூக்கி காட்டான் மாதிரி அடிக்கிறதா’ எழுதினாங்க. ஆனா, இன்னைக்கு பாருங்க... அந்த காட்டுத்தனமான பேட்டிங் ஸ்டைலதான் பலரும் ஃபாலோ பண்றாங்க.

என்னை யாரோடயும் கம்பேர் பண்ணிக்க மாட்டேன். அப்படி கம்பேர் பண்றதும் பிடிக்காது. அதனாலயே அப்போதைய கிரிக்கெட்டையும் இப்போதைய கிரிக்கெட்டையும் பத்தின டாப்பிக்கை தவிர்த்துடுவேன். அப்போதைய சூழல்ல எங்களால என்ன முடிஞ்சதோ அதைச் செய்தோம். இப்ப இருக்கிறவங்களால் என்ன முடியுமோ அதைச் செய்யறாங்க.

சொல்லப்போனா இப்ப பிரஷர் அதிகம். அப்ப ரேடியோ, நியூஸ் பேப்பர்னு ரெண்டு மீடியாதான் இருந்தது. இப்ப க்ரவுண்டுல நடக்கற ஒவ்வொன்றையும் நொடிதோறும் அத்தனை மீடியாக்களும் அப்டேட் பண்றாங்க.

சச்சின் க்ரவுண்டுல இறங்கினா செஞ்சுரி அடிக்கணும்னு ரசிகர் விரும்பறாங்க. அப்ப சச்சினுக்கு எந்தளவுக்கு பிரஷர் இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. அவரோட குடும்பத்துக்கு எந்தளவு அழுத்தம் இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. இதனாலயே ஃபிட்னஸ் தாண்டி மன உறுதியும் இப்ப அவசியமாகுது.
கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல... எல்லா விளையாட்டுக்கும் இப்ப இது பொருந்தும். அதனாலயே 38 - 39 வயசுக்கு மேல எந்தவொரு விளையாட்டுலயும் விளையாடுவது இப்ப கேள்விக்குறியா இருக்கு. பிரஷர்... பிரஷர்... பிரஷர்...

குடும்பம்னு சொல்லும்போது என் மனைவி வித்யா பத்தி சொல்லியே ஆகணும். என் முதல் பையன் ஆதித்யா பிறக்கறப்ப நான் ஜிம்பாப்வே மேட்ச்சுல இருந்தேன். ஆதித்யா பிறந்து மூன்று நாட்கள் கழிச்சுதான் எனக்கு தகவலே கிடைச்சுது. அப்ப இந்த ஐஎஸ்டி எல்லாம் கிடையாதே... ஹை கமிஷனுக்கு சொல்லி அவங்க வழியா செய்தி எனக்குக் கிடைச்சுது. தவிர ஜிம்பாப்வே அப்பதான் சுதந்திரம் வாங்கியிருந்தது. ஸோ, தகவல் பரிமாற்றம் இன்னும் தாமதமாத்தான் நடந்திச்சு.

வித்யா இதையெல்லாம் புரிஞ்சு எனக்கு தோள் கொடுத்தாங்க.இன்னொரு விஷயம் இருக்கு. கிரிக்கெட்ல தோத்தாலும், ஜெயிச்சாலும் வீட்டு முன்னாடி ஒரு கூட்டம் கூடிடும். நாங்க நாட்டுக்கே திரும்பியிருக்க மாட்டோம். கூட்டத்தை சமாளிக்கற பொறுப்பு எங்க குடும்பத்துக்கு இருக்கும். என் மனைவிதான் சகலத்தையும் சமாளிப்பாங்க.

இத்தனைக்கும் அவங்க கூச்ச சுபாவம் உள்ளவங்க. பத்திரிகை பேட்டிக்கு எல்லாம் உடன்படவே மாட்டாங்க. கிரிக்கெட் பத்தியும் பெருசா தெரியாது. எனக்கு குடும்பம், பசங்க படிப்பு பத்தி தெரியாது. நான் கிரிக்கெட்டை பார்த்துகிட்டேன். என் மனைவி குடும்பத்தை பார்த்துகிட்டாங்க.

வித்யா, தில்லிவாழ் தமிழ்ப் பொண்ணு. பெண் பார்க்க கூட்டிட்டுப் போனாங்க. பார்த்ததும் பிடிச்சிருந்தது. திருமணமாச்சு. இதோ சமீபத்துல 60 வயசு எனக்கு ஆனது. சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடினோம்.

ஆதித்யாவுக்கு அப்புறம் அனிருத் பிறந்தார். இவரும் ஸ்டேட் வரை விளையாடியிருக்கார். அப்புறம் பிசினஸுக்கு வந்துட்டார். பேரன் பேத்திகளோடு நானும் என் மனைவி வித்யாவும் சந்தோஷமா இருக்கோம்.இந்திய கிரிக்கெட் செலக்டிங் டீம் தலைவர்... 2008ல ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பாசிடர்... இப்படி பொறுப்புகள் வகிச்சிருக்கேன். வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கிட்டேன்.

ரொம்ப வேகமான வாழ்க்கைக்குப் பிறகு இப்பதான் என்னைப் பத்தி உங்ககிட்ட முழுமையா பேசறேன்னு நினைக்கறேன். இப்ப மாதிரி அப்ப கிரிக்கெட் ஆட பணம் தேவைப்படல. ஆர்வம் இருந்தா போதும். இந்தியாவுக்காக ஜெயிக்கணும்னு போராடினோம். ஜெயிச்சா பிரைஸ் பணம் வரும். கிரிக்கெட் பிளேயர்களுக்கு இப்ப மாதிரி அப்ப பெரிய வேலைகளும் கிடையாது. இருக்குற ஒரு நாலஞ்சு பேங்க்ல கிளார்க் வேலை கிடைக்கலாம்.

இப்பவும் பணத்தை சம்பாதிக்கணும்னு யாரும் கிரிக்கெட் விளையாடல. அப்படி ஆடறவங்க குறுகிய காலத்துலயே காணாமப் போயிடுவாங்க. ஆர்வமும் வெறியும்தான் ஒவ்வொரு ப்ளேயரையும் உருவாக்குது.

என் வாழ்க்கைல இருந்து நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான். உங்களுக்கு பிடிச்ச விஷயத்துல முழு ஈடுபாட்டோடு இறங்குங்க. பிடிச்ச விஷயத்துல சாதிக்கணும்னு வெறியோடு இருங்க.கண்டிப்பா பாசிடிவ் ரிசல்ட் கிடைக்கும்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்