தமிழ் Dan Brown!



ஆங்கில நாளிதழில் Managing Editor ஆகபணிபுரியும் இவர்தான்தமிழ் வெகுஜன நாவல்களின் முடிசூடா மன்னராக இன்று இருக்கிறார்!

தமிழ் இலக்கிய உலகில் இப்போது அதிகம் கவனம் கொள்ள வைக்கிறார் டி.ஏ.நரசிம்மன். இப்படிச் சொன்னால் யாருக்கும் தெரியாது. அதுவே ‘காலச்சக்கரம்’ நரசிம்மா என்று சொல்லிப் பாருங்கள்... அடடே... அவரா என முகம் மலர்வார்கள். ஆம். ‘கலைமகள்’, ‘அமுதசுரபி’யில் எழுதிய ஒன்றிரண்டு சிறுகதைகள் தவிர வேறு எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் இதுவரை இவர் ஒரேயொரு சிறுகதையைக் கூட எழுதவில்லை. அவ்வளவு ஏன்... சின்ன துணுக்குகூட இவர் பெயரில் வரவில்லை. தொடர்கதைகள்..? மூச்.

ஆனால், இன்று இவர்தான் தமிழ் வெகுஜன எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்! ஆங்கில வாசகர்கள் எப்படி டான் பிரவுனை கொண்டாடுகிறார்களோ அப்படி தமிழ் வாசகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து இன்று ஆராதிக்கிறார்கள்.தன் முதல் படைப்பான ‘காலச்சக்கரம்’ முதல் சமீபத்தில் ஐந்து பாகங்களாக வெளியாகி இருக்கும் ‘அத்திமலைத் தேவன்’ வரை எல்லாமே நேரடியாக இவர் எழுதி, ‘வானதி பதிப்பகம்’ வழியே வெளியானவைதான். பலப் பல பதிப்புகளைக் கண்டு வருபவைதான். இவரது நாவல்கள் அச்சாகி வருவதற்கு முன்பே வாசகர்கள் போட்டி போட்டுக்கொண்டு புக்கிங் செய்கிறார்கள்!

எவரும் பயன்படுத்தாத கதைக்கரு, புராணத்தோடு இணைந்த தொன்மம், வரலாறு, இவற்றுடன் சமகாலம்... என இவர் ஏவலில் சிந்தனைகள் விரிகின்றன.எதையும் தலைக்கு ஏற்றாத தன்னிறைவில், அனுபவ சாந்தத்தில் திருவான்மியூர் வீட்டில் நடந்தது இந்தச் சந்திப்பு.

ஆங்கில ‘தி இந்து’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர்; பிரபல திரைப்பட கதை வசனகர்த்தா + இயக்குநர் சித்ராலயா கோபு - பிரபல எழுத்தாளர் கமலா சடகோபன் தம்பதியரின் புதல்வர் என்பது டி.ஏ.நரசிம்மனின் சிறப்பு.

பத்து நாவல்களை எழுதி, பல பதிப்புகள் கண்டு அமைதியோடு இருக்கிறீர்கள்…
தாத்தா, ஆங்கில நர்சரி ரைம்களை தமிழுக்கு மாற்றியவர். அம்மா கமலா சடகோபன் பெண்களின் அக உலகை வெளியே கொண்டு வந்தவர்.

பாத்ரூம், துணி துவைக்கிற கல்லில் உட்கார்ந்து சாமி காலண்டரின் பின்பக்கத்தில் எழுதி அதிலேயே கதையை அனுப்பிவிடுவார்! இன்றும் அம்மா எழுதிய ‘கதவு’ நாவலைக் குறித்து மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!கல்ட் க்ளாசிக்காக இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கதை, வசனத்தை எழுதிய என் அப்பா, மிக மிக எளிமையானவர். சாதாரண வேஷ்டி சட்டையில் காய்கறி வாங்க மார்க்கெட் செல்வார்.

இப்படி என் மூத்தோர்கள் அனைவரும் சாதாரணமாக இருப்பதைப் பார்த்தே வளர்ந்த எனக்கும் பப்ளிசிட்டி மீது நாட்டம் ஏற்படவில்லை.
அப்பா ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ எழுதும்போதுதான் நான் பிறந்தேன். சில சீரியல்களுக்கு எழுதினேன்.

அம்மாதான் உன்னால் நாவல் எழுத முடியும் என உத்வேகம் கொடுத்தார். அப்படி முதல் நாவலாக எழுதினதுதான் ‘காலச்சக்கரம்’. நாவல் வெற்றி யடைந்து ‘காலச்சக்கரம்’ நரசிம்மா ஆகிவிட்டேன்.அதற்கான உரையாடலைக் கூட நீங்கள் துவக்கவில்லை...

நான் எதுவுமே செய்யவில்லை. இதோ நீங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க. ஏதோ நடந்திருக்கே. இது திறமையை விக்கிற காலம்தான். இல்லைன்னு சொல்லவில்லை. என் எழுத்து எல்லாரையும் போய்ச் சேரும்னு நம்பினேன். எழுத்தாளர்கள் தங்களை முன்னெடுக்கக்கூடாது. படைப்புதான் எல்லாம் தாண்டி முன்னே போகணும். இதோ பாருங்க ‘அத்தி மலைத்தேவன்’ படிச்சிட்டு துபாயிலிருந்து ஒருத்தர் ‘இது பொக்கிஷம்’னு டுவிட் பண்ணியிருக்கார். எனக்கு இது போதும்னு தோணும்.

நான் எழுதுவது சிறந்ததா இல்லையா என்பதல்ல விஷயம். நான் எழுதியது உண்மை என்பதே முக்கியம்! ஒரு வரலாற்று ஆசிரியனைப் போல நான் என்னைப் பிரதிபலிக்கிறேன். என் முடிவுகள், தீர்வுகள், எழுத்து மக்களுக்கு சில விடையறிதல்களை நடத்திக் காட்டியிருக்கிறது.வீட்டிற்கு வந்துவிட்டால் தமிழ்தான்.

தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் இரும்புத்திரை போட்டு வைத்திருக்கிறேன். அம்மா இருக்கும்போது வீட்டில் ஆங்கிலம் கலந்து பேசினால் உண்டியலில் பணம் போடச் சொல்வார். அப்படி உண்டியலில் சேர்ந்த பணம், உருமாறி என்னிடம் தமிழாய் வந்திருக்கிறது! என் குழந்தைகளுக்கு தூய தமிழில் பேசவும் தெரியும், ஆங்கிலத்தில் அட்டகாசமாக உரையாடவும் தெரியும்.

இன்றைய இளைஞர்களைப் படிக்க வைச்சிருக்கீங்க...
என் டார்கெட் ஆடியன்ஸ் இன்னார் என  சொல்லவே முடியாது. 90 வயது பாட்டி முதற்கொண்டு 15 வயசு பையன் வரை இருக்கான். இன்றைய இளைஞர்கள் லாஜிக்காக சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். வழிவழியா வந்தது எனச் சொன்னால் பின்னாடி வரமாட்டார்கள். தர்க்கமா, நம்பிக்கைக்கான காரணத்தைச் சொல்வதால் என் எழுத்து பிடித்திருக்கு.

நான் யாரையும் கேலி பேசுவதில்லை. புண்படுத்துவதில்லை. இப்படி ஒரு விளக்கம், உண்மை இருக்கு என விளக்குவேன். எனக்கு ஆன்மீகம் பிடிக்குது. வரலாறு, தொன்மத்தில் நிறைய பிடிப்பிருக்கு. அதில் புனைவை கொஞ்சம் முன்னிருத்தி எழுதுகிறேன்.

எல்லாவற்றையும் மூன்றாவது கண்ணால் பார்க்கிறேன். என் படைப்பு அதிகமும் அப்சர்வேஷனில் இருக்கிறது. என் கதைகள் கற்பனைக் கதைகள் அல்ல. ஆனால், தொய்வில்லாமல் எழுத கற்பனையும் வேண்டும். இதில் தெளிஞ்சு, தெளிஞ்சு ஒரு நல்ல இடத்தில் இருக்கிற தளம் ஒன்று இருக்கிறது. அந்த நிலையை அடைவதில் ஒரு பரிபக்குவம் எனக்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

சரித்திர நாவல்களில் மர்மங்களை உடைச்சு உண்மைகளைக் கொண்டு வர்றீங்க...
பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்படுகிறான். 1000 வருஷங்கள் ஆகியும் யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை. அந்த மர்மங்களை உடைக்க வேண்டும். ஆதித்ய கரிகாலனை  பாண்டிய ஆபத்துதவிகள் கொல்றாங்கனு கல்கி சொல்கிறார்.

கண்பார்வை இல்லாதவன் யானையைத் தடவிப் பார்த்த மாதிரி இங்கே பல விஷயங்கள் நடந்திருக்கிறது. மாபெரும் வீரன் இரண்டாம் புலிகேசியை இப்படித்தான் காமெடி பண்ணி படம் எடுத்தோம். பல்லவர்களுக்கு மன்னரே இல்லாமல் கம்போடியாவில் இருந்து கொண்டு வருகிறார்கள். அவ்வளவு சுவாரஸ்யங்கள் இங்கே இருக்கிறது. ஆராயப் புகுந்தால் அவ்வளவு தெளிவுகள் கிடைக்கும்.

அதைத்தான் ஒவ்வொரு விஷயமாக எடுத்துக்கொண்டு இறங்குகிறேன். என்னடா, யாரும் செய்யாததை இவர் செய்கிறாரே என்றுதான் என் வாசகர்கள் கூடுகிறார்கள். ‘அத்தி மலைத் தேவன்’ 5 பாகங்கள் வந்துவிட்டன. அத்திவரதரின் மகத்துவம் பற்றிப் பேச அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!
சிறு வயதில் சினிமாத்துறையினர் நிறைந்த வாழ்வு எப்படி யிருந்தது..?

அப்பாவும், இயக்குநர் ஸ்ரீதரும் ஒன்றாகப் படித்தவர்கள். ‘உத்தமபுத்திர’னில் தர் வசனம் எழுதி வெளிப்பட, அப்பாவையும் துணைக்கு இழுத்தார். பிறகு ‘காதலிக்க நேரமில்லை’, ‘கல்யாணப்பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ என வெளியாக எல்லாம் வெற்றிதான். அப்பா கதை வசனத்தில், ஸ்ரீதர் இயக்க அந்தக் கூட்டணிக்குத்தான் அப்போது பரபரப்பு. காந்தி சிலைக்குப் பின்னால் காரில் உட்கார்ந்து எழுதிய கதைகள் அனேகம். நான் சிவாஜி கணேசன் மடியில் உட்கார்ந்து விளையாடியிருக்கிறேன்.

‘கலாட்டா கல்யாணம்’ வெற்றி விழாவில் என் அண்ணன் விருது வாங்க, நான் அழுதேன். ஜெயலலிதா என் கண்களைத் துடைத்து, அவர் ஷீல்டை விழா முடிகிறவரைக்கும் என் கையில் கொடுத்து வைத்திருந்தார். காஞ்சனா, ராஜ, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், முத்துராமன் எல்லோரும் வீட்டிற்கு சரளமாக வந்து போவார்கள். ராஜ்கபூர், வஹீதா ரஹ்மான், மீனாகுமாரி போன்றவர்களை வைத்து படம் எடுத்து ஸ்ரீதரும், அப்பாவும் புகழ் பெற்று இருந்தார்கள்.

அப்பா இன்னமும் அந்த இனிய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் மனைவி சுதா ஆய்வுகளில் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். என் பிள்ளைகள் ஷியாம், ஸ்ரீயந்தா இருவரையும் அவர்கள் விருப்பப்படி சினிமாவில் செயல்பட அனுமதித்து, அடுத்த சினிமா தலைமுறைக்கு வழிகாட்டியிருக்கிறேன்!

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்