கரோனா வைரஸ் எப்படி நம்மை பாதுகாப்பது..?



பக்கம் 46ல் விரிவான செய்தியுள்ளது.அதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என இங்கு பார்த்துவிடலாம்.சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவின் வுஹான் நகரில் இருந்துதான் கரோனா வைரஸ் உலகுக்கு பரவி உள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் வரும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாக்கி, ஒரு வாரத்துக்குப் பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் நிகழும். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நான்கில் ஒருவரின் உடல்நிலை முற்றிலுமாக மோசமடையும். இதுதான் இப்போதைய நிலை.

சரி, இதை எப்படி தடுப்பது..?
கரோனா வைரஸுக்கு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே எப்படி கட்டுப்படுத்தலாம் என்றுதான் பார்க்க முடியும். அதற்கு ஒரே வழி, கரோனா வைரஸ் தாக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் பார்த்துக்கொள்வதுதான்.

எனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மருத்துவ பணியாளர்களைக் கொண்டே இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

தும்மல் வரும்போது கைக்குட்டையால் நம் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அல்லது அருகில் இருப்பவர் தும்மும்போது கைக்குட்டையால் நம் முகத்தை நாம் மூடிக் கொள்ள வேண்டும்.அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். இருமல், சளி பிரச்னை இருந்தால் முகமூடியை அணிவது நல்லது. மருந்துக் கடைகளில் இருந்து நாமாக மருந்தை வாங்காமல் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

தொடர் இருமல், சளி இருக்கும்போது எவ்வித பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம். உறவினர் அல்லது நண்பர் வீட்டுத் திருமணம் / விசேஷம் என எதுவாக இருந்தாலும் தவிர்த்து விடுங்கள். அலுவல் ரீதியான பணி எனில் மருத்துவரின் ஆலோசனையுடன் பயணம் மேற்கொள்ளுங்கள்.

உடல்நிலை சரியில்லாதவர்களிடம் நெருங்க வேண்டாம். சற்றுத் தள்ளியே இருங்கள். சரியாக சமைக்காத, பாதி வெந்த இறைச்சிகளை ஒருபோதும் சாப்பிடாதீர்கள். முழுமையாக இறைச்சியை வீட்டில் வேக வையுங்கள். ஒன்றுக்கு பலமுறை கொதிக்க விடுவது தவறில்லை. டயட் உணவு என்கிற பெயரில் பச்சையாக, வேக வைக்காமல் எதையும் சாப்பிடாதீர்கள்.

எப்போதும் வாங்கும் இறைச்சிக் கடையிலேயே வாங்குங்கள். புதிதாக முளைத்த கடையில் இறைச்சி வாங்காதீர்கள்.போலவே இறைச்சிகள் வெட்டப்படும் / விலங்குகள் கொல்லப்படும் இடங்கள் மற்றும் விலங்குப் பண்ணைகளுக்குச் செல்லாதீர்கள்; இந்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளாதீர்கள்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுங்கள். வெளியிடங்களில்தான் சாப்பிட்டாக வேண்டுமென்றால் சுகாதாரமான உணவகங்களில் உண்ணுங்கள். கொதிக்க வைத்த குடிநீரை எப்போதும் கையில் வைத்திருங்கள். கண்ட இடங்களில் குடிநீர் அருந்தாதீர்கள்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உள்ளம் ஆரோக்கியமாக இருக்கும்!