2020ம் ஆண்டு மட்டும் 19 கோடிப் பேர் வேலையில்லாமல் தவிக்கப் போகிறார்கள்!



வேலை வாய்ப்பு மூலம் மில்லியன் கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்கித் தருவது கடினமாகி வருகிறது...

- கை ரைடர் (சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர்)

உலக அளவில் இப்போது இருந்து வரும் பொருளாதார சீர்குலைவால், உலகம் முழுவதும் 2 கோடிப் பேர் வரை கூடுதலாக வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐநா சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு - International Labour Organisation (ILO) கவலை தெரிவித்துள்ளது.  

தவிர, நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக அதிகரிக்கும் என்றும், 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிக்கும் என்றும் ILO அறிவித்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையெனில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என  எச்சரித்துள்ளது.

உலகளவில் 470 மில்லியனுக்கும் அதிகமானோர் வேலையில்லாமலும் அல்லது அண்டர் எம்ப்ளாயாக (வேலையே தேடாமல் - விரும்பியே வேலையில்லாமல் இருப்போர், பகுதி நேர வேலை செய்வோர், வேலை தேடிக் கொண்டிருப்போர், மிகக் குறைந்த ஊதியம் பெறுவோர், விரும்பிய வேலையில் இல்லாதோர்…) உள்ளனர்.

அதாவது, 2020ம் ஆண்டில் 190.5 மில்லியன் மக்கள் (கிட்டத்தட்ட 19 கோடிப் பேர்) வேலையில்லாமல் தவிக்கப் போகிறார்கள்! இதில் 15 முதல் 24 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம். பணியில் இருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நிலையற்ற வேலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சமூகத்தின் அமைதி கெடும் என அபாய மணியை ILO அடிக்கிறது.

பொருளாதார மந்தநிலை

சென்ற ஆண்டே இது குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிவித்துவிட்டது. ஆம். பல்கேரிய பொருளாதார நிபுணரான கிறிஸ்டலினா ஜார்ஜீவா, 2019ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது முதல் உரையில் அவர் பட்டியலிட்ட விஷயங்கள் அனைத்தும் கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் இப்போது அரங்கேறி வருகின்றன.

‘உலகப் பொருளாதார வளர்ச்சி 90% மந்தமாகி இருக்கிறது. எதிர்பார்த்த அளவு வளரவில்லை. மெதுவாகவே நகர்கிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது.

வளர்ந்து வரும் முக்கிய சந்தைகளாகக் கருதப்படும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சீனாவின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாகக் குறைந்து வருகிறது.

நம்பிக்கை இழப்பும் நிதிச் சந்தையின் எதிர்வினைகளும் வர்த்தகப் போரின் இரண்டாம் நிலை விளைவுகளாக இருக்கின்றன. இவை நேரடி பொருளாதாரத் தாக்கத்தை விட மிகப் பெரியவை...’

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சீனாவுடனான வர்த்தகப் போர், இருவழி வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘முடிவுகள் தெளிவாக உள்ளன. வர்த்தகப் போரில் எல்லோரும் தோற்றுவிட்டார்கள். இதன் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கிறது. இதை எதிர்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்...’ என வேண்டுகோள் வைக்கிறார் கிறிஸ்டலினா.

வேலையில்லாதோர் தற்கொலை புள்ளிவிவரம்

இந்தியாவில் வேலையில்லாதோர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2018ம் ஆண்டு 1,34,516 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2017ம் ஆண்டைவிட 3.6% அதிகம்.
இதில் முதல் ஐந்து மாநிலங்களாக, மகாராஷ்டிரா (17,972 பேர்), தமிழ்நாடு (13,896 பேர்), மேற்கு வங்கம் (13,225 பேர்), மத்தியப் பிரதேசம் (11,775 பேர்), கர்நாடகம் (11,561 பேர்) உள்ளன.  

இந்த 5 மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மொத்த இந்திய தற்கொலைகளில் சரிபாதி என்பது முகத்தில் அறையும் நிஜம். 2018ம் ஆண்டு சராசரியாக தினமும் வேலை இல்லாத 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். அந்த ஆண்டில் வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும் (9.6%), சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் (9.8 %) தற்கொலை செய்துள்ளனர்.

விவசாயத் துறையில் 10,349 பேர் (7.7%) தற்கொலை செய்துள்ளனர். இதில் 5,763 பேர் விவசாயிகள், 4,586 பேர் விவசாயத் தொழிலாளர்கள்.
தற்கொலை செய்த விவசாயிகளில் பெண்கள் 306 பேர், விவசாயத் தொழிலாளியாக இருக்கும் பெண்கள் 515 பேர்.தற்கொலை செய்த பெண்கள் 42,391. இதில் 22,937 பேர் (54.1%) குடும்பத் தலைவிகள். அரசு ஊழியர்கள் 1,707 பேர் (1.3 %),  தனியார் நிறுவன ஊழியர்கள் 8,246 பேர் (6.1 %), பொதுத்துறை ஊழியர்கள் 2,022 பேர் (1.5%), மாணவர்கள் 10,159 (7.6%) பேர்.

இந்தியாவின் நிைலமை  

தமிழகத்தில் 9,500 தட்டெழுத்தாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கு 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது. இப்பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் எட்டு லட்சம் பேர் இளநிலைப் பட்டதாரிகள். 2.5 லட்சம் பேர் முதுநிலைப் பட்டதாரிகள். 23,000 பேர் எம். ஃபில் பட்டம் பெற்றவர்கள். 992 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

அதே ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரயில்வேயில் உள்ள 90,000 காலிப் பணியிடங்களுக்கு 2.8 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இவை எல்லாம் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கான உதாரணங்கள். உண்மை இப்படி இருக்க, இந்த அவலத்துக்குக் காரணம், வேலை வாய்ப்புகள் குறித்த தவறான தகவல்களே... என அரசு சாக்கு சொல்வது கவலை அளிக்கும் விஷயம்.

இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகரித்து வருகையில், வேலைவாய்ப்புகளுக்கான சவால்களும் கடுமையாக உள்ளன.உலக வங்கியின் அறிக்கையின் படி, ஒவ்வொரு மாதமும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 13 லட்சம் அதிகரிக்கிறது.

இதை ஈடுகட்ட - அதாவது இந்தியா தனது வேலைவாய்ப்பு விகிதத்தை தக்கவைத்துக் கொள்ள - ஒவ்வொரு ஆண்டும் 81 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
 
ஒரு காலத்தில் இந்தியாவின் இளம் தலைமுறை மிக அரிய சொத்தாகக் கருதப்பட்டனர். இப்போது இந்த சொத்து, வேண்டாத அசட் ஆக கருதப்படுகிறது!  ஏனெனில் 130 கோடி இந்தியர்களில் சரி பாதிப் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் 50% பேர் வேலை தேடி வருகின்றனர்!

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் ஏற்பட்டு வரும் இன்றைய யுகத்தில் அதற்கேற்ற வேலைகளைச் செய்ய இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும். ஆனால், இங்கு கல்வித் துறை (தொடக்கக்கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி) நம்பிக்கையளிப்பதாக இல்லை.

போலவே எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன... அவற்றில் எவ்வளவு நிரப்பப்படுகின்றன... என்பது போன்ற முக்கியமான கேள்விகளை நாம் எழுப்புவதேயில்லை.

உற்பத்தித் துறை போன்ற பாரம்பரியத் துறைகளில் பணிபுரிய இளம் தலைமுறையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதேநேரம் உற்பத்தித் துறையில் போதுமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் புறக்கணிப்பதற்கில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பு நெருக்கடி தாண்டி, ஊதிய நெருக்கடி உள்ளது. அளிக்கப்படும் வேலைகளுக்கு ஏற்ற ஊதியம் இங்கு வழங்கப்படுவதில்லை.

அரசியலும் பொருளாதாரமும்

பொருளாதாரப் பிரச்னை தவிர, மொழி, பண்பாடு, பிரதேச உணர்வு, மதம், சாதி ஆகியன எப்போதுமே இந்திய அரசியலில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன. என்றாலும் அரசியல் பிரச்சினையிலிருந்து முற்றிலுமாக பொருளாதாரப் பிரச்னை  துண்டிக்கப்பட்டிருக்கவில்லை.

1998ல் முதன் முதலாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபோதும்கூட பொருளாதாரப் பிரச்னை, அரசியல் பிரச்சினையோடு சேர்ந்தே வந்தது.
2004ம் ஆண்டில் பாஜக கூட்டணி தோல்வியுற்றதற்கான முக்கியக் காரணமாக இருந்தது வாஜ்பாய் கூறிவந்த ‘ஒளிரும் இந்தியா’ பொருளாதார ரீதியில் ஒளி மங்கிப் போனதுதான்.

2014ம் ஆண்டுத் தேர்தலில் மோடியை முன்னிறுத்தி பாஜகவால் செய்யப்பட்ட கருத்துப் பரப்புரை, பொருளாதாரப் பிரச்னைகளை முதன்மைப்
படுத்தியது. அதாவது, ‘மேக் இன் இந்தியா’, ‘ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு’ என.

ஆனால், இடையில் அமலுக்கு வந்த பணமதிப்புக் குறைவும் ஜிஎஸ்டியும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் புரட்டிவிட்டன.விளைவு, இப்போது பல வேலைவாய்ப்புகள் காணாமலே போயுள்ளன. இருக்கும் வேலை வாய்ப்புகளும் மெல்ல மெல்ல மறைந்து கரைந்து வருகின்றன.

இந்நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன..? பதில் தெரியாத கேள்வியுடன் ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறான்!  

அன்னம் அரசு