பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!



‘‘ஒரு பைக் உதிரிப்பாகம் கூட வாங்க முடியாத அளவுக்குத் தான் என் வீட்ல நிலமை இருந்தது. ஆனா, இன்னிக்கி நான் தேசிய பைக் சாம்பியன்...’’ கண்களைச் சிமிட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த நிவேதா ஜெஸ்ஸிகா.

‘‘பிறப்பு, வளர்ப்பு எல்லாமே சென்னைலதான். அப்பா குமார், சமூக ஆர்வலர். அம்மா ஹவுஸ் ஒயிஃப். ரேசிங்கை எல்லாம் கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாத மிடில் க்ளாஸ் ஃபேமிலி. 16 வயசுல பைக் மேல ஆர்வம் வந்தது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்த அண்ணன்கள்கிட்ட பைக் வாங்கி நானா கத்துக்கிட்டேன். பைக் ரேஸ் எல்லாம் அப்ப மனசுலயே இல்ல.

காலேஜுக்கு போனப்ப ஃபேஸ்புக் எல்லாம் அறிமுகமாச்சு. அதுலதான் பெண்களும் ரேஸிங் பண்றாங்கனு தெரிஞ்சுது. அவங்க நட்பு கிடைக்க... அவங்ககிட்டயே பயிற்சி எடுத்துக்கிட்டேன். என் கோச், சரத்குமார் எனக்கு நல்ல சப்போர்ட். தெரிஞ்ச ரேஸர்ஸ்கிட்ட பைக் கடன் வாங்கித்தான் பயிற்சி எடுப்பேன். ஆரம்பித்துல தெரு ரேஸ்தான். அப்படியே மெல்ல சின்னச் சின்ன போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன்.

வீட்டுக்கு இந்த விஷயமே தெரியாது. ஏன்... நான் பைக் ஓட்டுறதே தெரியாது!’’ என்று சொல்லும் நிவேதா ஜெஸ்ஸிகா, 165 சிசி பைக் ஓட்டிப் பழகியிருக்கிறார்.‘‘இந்த பைக் வாங்கணும்னா குறைஞ்சது ரூ.1.7 லட்சம் ஆகும். இதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் அதிகம். நம்ம பைக்கை நாமதான் ரெடி பண்ணணும். நமக்குனு தனி மெக்கானிக் தேவை. ரேஸ் என்ட்ரிக்கு ரூ.4 ஆயிரமாவது ஆகும்.

சராசரி நடுத்தர குடும்பத்து பொண்ணா இதெல்லாம் கிடைக்காம ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனாலும் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. ஒவ்வொரு ரேஸ் அப்பவும் எப்படியாவது எனக்கு பைக் கிடைச்சுடும். ஆனா, சொந்தமா பைக் இல்லாததால முந்தைய நாள் பயிற்சி எடுக்க முடியாது. இந்தக் குறையைத் தாண்டித் தான் ஓசி பைக்ல ரேஸ்ல கலந்துப்பேன்.

இதுக்கிடைல கல்லூரி படிக்கிறப்ப பார்ட் டைமா ராயல் என்ஃபீல்ட்ல வேலை கிடைச்சது. டெஸ்ட் ரைடிங் கேர்ள் வேலை! இதுல சம்பாதிக்கிற பணத்தை வைச்சுதான் அடுத்தடுத்த  போட்டிகள்ல கலந்துப்பேன்.நியூஸ் பேப்பர்ல என்னைப் பத்தின செய்தி வந்தப்பதான் வீட்டுக்கே தெரிஞ்சுது! நான் சாதிக்கிறேன்னு அவங்க புரிஞ்சுகிட்டதால முழுசா சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. முக்கியமா எங்கம்மா மலர்க்
கொடியும், பெரியம்மா மாலதியும் தூணா இருந்தாங்க; இருக்காங்க.

இதுவரை நாலு சாம்பியன்ஷிப் வின் பண்ணியிருக்கேன். 2017ல ஆரம்பிச்ச ரேஸ் பயணம். பெரும்பாலும் 3 - 4 இடம் வந்திடுவேன். 2018ல வெற்றி சாத்தியப்பட ஆரம்பிச்சது. 2019ல தேசிய டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப். மொத்தம் நாலு ரவுண்ட். இதுல 2வது ரவுண்ட்ல மட்டும் 2ம் இடம். மத்த எல்லாமே முதல் இடம்.

தேசிய டிராக் சாம்பியன்ஷிப் வாங்கின முதல் பெண் நான்தான்! இந்த சாம்பியன்ஷிப்லதான் எனக்கு சொந்தமா ஒரு பைக் பரிசா கிடைச்சிருக்கு.
சர்வதேச அளவுல ரேஸ்ல கலந்துக்க இப்ப முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்!’’ உற்சாகமாக சொல்கிறார் நிவேதா ஜெஸ்ஸிகா.

ஷாலினி நியூட்டன்