ஆயில் ரேகையின் ஆயுள் ரேகை!



2020ம் ஆண்டு சர்வதேச சமூகத்தை உலுக்கி இருக்கும் கொலை எது?

சர்வநிச்சயமாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதியான காசிம் சுலைமானி கொல்லப்பட்டதுதான்.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இவர் கொலை செய்யப்பட்டார்.  

இதனைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போர் மூளுமா... கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொடுமா... என நிபுணர்கள் விவாதிக்கிறார்கள்.
என்னதான் நடக்கிறது..?

எதற்காக வளைகுடா நாடுகளில் தொடர்ந்து அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது..?

வரலாறுஇரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகளில் இருக்கும் வளங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பங்கு போட ஆரம்பித்தன. அந்நேரம் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மொஹமது மொசாடக், அந்நாட்டின் எண்ணெய் வளத்தை தேசியமயமாக்க நினைத்தார்.  இது தங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அமெரிக்கா, இங்கிலாந்தின் உளவுத்துறை அமைப்புகளான சிஐஏவும், எம்16ம் களத்தில் இறங்கின. சில ஈரானியர்கள் உதவியோடு 1953ம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்து முஹம்மத் ரெஸா ஷாவை ஈரான் பிரதமராக அமர வைத்தன.  
 
அதன்பின் ஷா, தனக்கு எதிராக இருந்தவர்களை ‘ஷவாக்’ என்ற ரகசிய போலீஸ் அமைப்பைக் கொண்டு அடக்கினார். ஷாவுக்கு எதிராக இஸ்லாமிய தலைவராக உருவெடுத்தார் அயதுல்லா அலி கொமேனி. இவர், ஷாவை கடுமையாக சாடிய காரணத்திற்காக நாடு  கடத்தப்பட்டார். அமெரிக்க ஆதரவில் ஆட்சிக்கு வந்த முஹம்மத் ரெஸா ஷாவின் ஆட்சி 26ஆண்டுகளுக்குப்பின் முடிவுக்கு வந்தது. இதற்கு ஈரான் புரட்சியை சந்திக்க வேண்டியிருந்தது.

பல மாத போராட்டங்களின் விளைவால் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஷாவுக்கு ஏற்பட்டது. அவர் வெளியேறிய அடுத்த இரு வாரங்கள் கழித்து இஸ்லாமிய மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி தாய்நாடு திரும்பினார். 1979 ஏப்ரல் 1ம் தேதி ஈரான் இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1979 ஜனவரி 16 அன்று நாட்டை விட்டு வெளியேறிய முஹம்மத் ரெஸா ஷா, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது ஈரானில் செய்த குற்றங்களுக்காக ஷாவை ஒப்படைக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்தது.
ஷா அங்கிருந்து எகிப்து சென்றதால் இந்த ஒப்படைப்பு நடக்கவில்லை.

இதனால் அயதுல்லா அலி கொமேனிக்கு ஆதரவாக இருந்த மாணவர் படை 1979ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க தூதரகத்திலிருந்தவர்களை பிணைக் கைதிகளாக சுற்றி வளைத்தது. 444 நாட்கள் நீடித்த இந்த முற்றுகையால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் 1981ம் ஆண்டு ஜனவரியில் தூதரகத்திலிருந்து 52 பேர் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் பதவியேற்பின் போது விடுவிக்கப்பட்டனர்.
ஈரான் - ஈராக் போரில் மூக்கை நுழைத்த அமெரிக்கா1980ம் ஆண்டு ஈரான் மீது ஈராக் போர் தொடுத்தது. இதில் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். நீண்ட காலம் நீடித்த இந்தப் போரில் ஈராக் தரப்புக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. எட்டு ஆண்டுகள் கழித்து ஈரானின் தலைவர் கொமேனி சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டார்.

லெபனான் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் அங்குள்ள இஸ்புல்லா அமைப்பால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்க ஈரான், அமெரிக்காவிற்கு உதவியது. அதற்கு கைமாறாக அமெரிக்கா, ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பியது. இதில் கிடைத்த லாபம் அங்குள்ள போராளிகளுக்கு அனுப்பப்பட்டதால், அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகனுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது.

1988ம் ஆண்டு அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று வளைகுடா நாட்டில் ஈரானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. விமானத்திலிருந்த 290 பேர் இறந்தனர்.
இதிலிருந்த பெரும்பான்மையான ஈரானிய பயணிகள் மெக்காவுக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இந்த விமானத்தை போர் விமானம் என்று சுட்டதாகக் கூறியது. ஆனால், மன்னிப்பு கோரவில்லை.

Axis of Evil & அணு ஆயுதம் 2002ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், “ஈரான், ஈராக் மற்றும் வடகொரியா ஆகியவை இணைந்து (Axis of Evil) தீமையின் அச்சை உருவாகி இருக்கிறது...’’ என்றார். இந்த உரை ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரான் ரகசியமாக அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. ஈரானோ இதை மறுத்தது. இதனையடுத்து பத்து ஆண்டுகள் ஈரானின் அரசியல் நடவடிக்கைகள், சர்வதேச அணு ஆயுத அமைப்பின் கண்காணிப்பில் இருந்தது.

இதற்கு நடுவில் பலமுறை ஐநா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் ஈரானின் நாணய மதிப்பு 2 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வீழ்ந்தது.

30 ஆண்டுகளுக்குப் பின் பேசிய தலைவர்கள்

2013ம் ஆண்டு செப்டம்பரில் ஈரானின் புதிய அதிபர் ஹசன் ருஹானி பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரும் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டனர். சுமார் 30 ஆண்டுகள் கழித்த உயர்மட்ட பேச்சு வார்த்தையாக இது கருதப்பட்டது.
அதன்பின் 2015ம் ஆண்டு, P5+1 எனப்படும் உலக சக்திகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் ஓர் அணு ஆயுத  ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

அந்த ஒப்பந்தத்தில்; ஈரான் அணுஆயுத நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வதாகவும், சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்கு பதிலாக ஈரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

வளைகுடா பதற்றம்

2018ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 2015ம் ஆண்டில் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி, ஈராக் மற்றும் ஈரானோடு வணிகம் செய்யும் அனைத்து நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதித்தார்.இதன் பின் அமெரிக்க மற்றும் ஈரான் உறவு மோசமானது. 2019 மே, ஜூன் மாதங்களில் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த 6 எண்ணெய் டேங்கர்கள் ஓமன் வளைகுடாவில் வெடித்துச் சிதறின. இதற்கு அமெரிக்கா, ஈரானைக் குற்றம் சுமத்தியது.

பின் ஜூன் 20 அன்று ஹார்மஸ் நீர் அணைக்கு மேல் பறந்த அமெரிக்காவின் ஆள் இல்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. தங்கள் நாட்டு பிராந்தியத்தில் அது பறந்ததாக ஈரான் கூறியது. ஆனால், அது சர்வதேச பிராந்தியத்தில் பறந்ததாக அமெரிக்கா மறுத்தது.

எண்ணெய் அரசியல்

1970ம் ஆண்டிலிருந்து எண்ணெயை பதுக்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, இப்போது விற்கத் தொடங்கியிருக்கிறது. 2017ல் விற்பனையைத் தொடங்கியபோது அது 140 கோடி டன் அளவை ஏற்றுமதி செய்தது. அடுத்த ஆண்டு அது 640 கோடி டன் ஆனது. இந்தியாவுக்கு மட்டும் அமெரிக்காவின் ஏற்றுமதி அளவு 72% ஆக உயர்ந்திருக்கிறது.

இப்படியான வியாபாரப் போட்டி வெறுமனே நடந்தால் என்னவாகும்? எண்ணெய் வள நாடுகளோடு போட்டி போடுவதால் சந்தையில் விலை குறையும். அப்படி விலை குறைந்துவிடாமலும் கணிசமான லாபம் ஈட்டும் வகையிலும் வியாபாரத்தை மேற்கொள்ளத்தான் அமெரிக்கா ஈரானைச் சீண்டுகிறது. அந்நாட்டை போர்ச்சூழலில் சிக்க வைத்து, எண்ணெய் சந்தைக்கு அந்நாடு வராமல் பார்த்துக்கொள்கிறது.

அமெரிக்கா எதற்கு கையிருப்பை விற்றுத் தீர்க்க முனைகிறது?

காரணம் சிம்பிள். உலகம் இப்போது பெட்ரோலிய பயன்பாட்டிலிருந்து மின்சார பயன்பாட்டுக்கு மாறிக்கொண்டிருக்கிறது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் வளர்ந்த நாடுகள் போட்டி போடுகின்றன. இப்படி பெட்ரோலுக்கு மாற்று உருவாகும் போது பெருமளவு கையிருப்பாக கச்சா எண்ணெயை வைத்திருக்கும் ஒரு நாடு அதை விற்றுத் தீர்க்க வேண்டாமா..? அதுவும் பெரும் லாபத்தோடு..?

எனவேதான் அமெரிக்கா பதுக்கியதை விற்கிறது.  

இதுதவிர, ஈரானில் புதிய இயற்கை வாயு உள்ள பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.3,00,000 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் சொல்கிறார்கள். போலவே ஒரே மாதத்தில் குஸெஸ்தானில் 53 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் இதனால் 150+ பில்லியன் பேரலாக ஈரானின் இருப்பு உயரும் என்றும் சொல்கிறார்கள். இது உண்மையெனில் உலகப் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக ஈரான் உருவெடுக்கும்.எனவேதான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இப்போது தொடை தட்டுகிறது.

காசிம் சுலைமானி

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் செல்வாக்கு மிக்க நாடாக உருவெடுக்க முக்கிய காரணியாக விளங்கியவர் 62 வயதான காசிம் சுலைமானி.
ஈரானின் இரண்டாவது அதிகாரமிக்க நபராக விளங்கிய இவர், அந்நாட்டின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனியுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற அமைப்புகளை ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் முற்றிலுமாக ஒழித்தவர்.

மத்திய கிழக்கில் இருக்கும் எல்லா நாடுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்காவால், ஈரானை தன் பிடிக்குள் கொண்டு வர முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் 20 ஆண்டுகளாக ஈரான் ராணுவத்தின் முதுகெலும்பாக இருந்த சுலைமானி. எனவேதான் அவரை அமெரிக்கா கொன்றிருக்கிறது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இதை பல லட்சம் கோடிகளில்தான் கணக்கிட முடியும். அதிக அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், ஈரான் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் கூட்டமைப்பில் உள்ள ஈரான், ஆண்டுக்கு சுமார் 155.60 பில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,700 கோடி கூடுதலாகும். இது ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரபு நாடுகளில் இருக்கும், இந்தியர்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.2,87,000 கோடி இந்தியாவிற்குள் வருகிறது. போர் வந்தால் இந்த பண வரவு பாதிக்கப்படும்.மற்றொரு புறம் அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகும். 1990களில் ஏற்பட்ட போரின் போது இந்திய அரசு, விமானங்களை அனுப்பி சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை அழைத்து வந்ததுபோல் இப்போதும் செயல்பட வேண்டியிருக்கும்.  

கிளிண்டன் முதல் ட்ரம்ப் வரை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர். கீழ் அவையில் நீக்கப்பட்டவர், மேல் அவையில் தனது கட்சியின் ஆதரவால் தப்பித்துள்ளார்.இதற்கு முன், டிசம்பர் 17, 1998ம் ஆண்டு பில் கிளிண்டன் இதே போன்று அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் அவையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அப்போது தன்மீது அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்களின் கவனத்தையும் உலக நாடுகளின் கவனத்தையும் திசைதிருப்ப, “மனித குலத்தை அழிக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஈராக் வைத்திருக்கிறது... அங்கு ஆய்வுக்காகச் செல்லவிருந்த அதிகாரிகளை அந்நாடு தடுத்து நிறுத்தியிருக்கிறது...’’ என்ற தவறான குற்றச்சாட்டைக் கூறி ஈராக் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினார்.  இதே வழியைத்தான் இப்போது ட்ரம்ப் பின்பற்றுகிறார்.    
         
அன்னம் அரசு