அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது அவசியமா?



உலகின் தலைசிறந்த பல்கலைக்கழங்களுள் ஒன்று, இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களின் வரிசையில் ஆறாவது இடம், பொறியியல் கல்லூரிகள் பிரிவில் எட்டாவது இடம்... எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்.

சுமார் நாற்பத்தியொரு ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகத்தைஇப்போது இரண்டாகப் பிரிப்பதற்கான வேலைகள் நடந்து வருவதுதான் சமீபத்திய பரபரப்பு!இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் இதற்கு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும், பேராசிரியர்களும் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் உரையிலேயே இதற்கான விதை தூவப்பட்டுவிட்டது. அப்போதைய நிதி அமைச்சர் அருண் ெஜட்லி, ‘உயர்கல்வியை மேம்படுத்த கற்பித்தலையும், ஆராய்ச்சியையும் உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டியது அவசியமாகிறது’ என்றார். பின்னர் 2017ம் ஆண்டு அவரின் அறிவிப்பு விரிவாக்கப்பட்டு IoE எனப்படும் ‘இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எமினன்ஸ்’ என்னும் கான்செப்ட்டைக் கொண்டு வந்தனர்.

அதாவது, இந்தியாவிலுள்ள பத்து பொது மற்றும் பத்து தனியார் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து IoE என்கிற சிறப்புமிக்க அந்தஸ்து வழங்கி உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த பத்து பொது நிறுவனங்களுள் ஒன்றாகத்தான் அண்ணா பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஐந்தாண்டுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இருக்கிறது மத்திய அரசு. உலகின் சிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற இந்த நிதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், சில பேராசிரியர்கள் உலகத் தரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தைக் கொண்டு போக வேண்டுமென ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான முனைவர் பி.வி.நவநீதகிருஷ்ணன், ‘‘நிர்வாகக் காரணத்திற்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக அல்ல… மூன்றாகக் கூட பிரிக்கலாம். அப்போதுதான் பழையபடி அதன் தரம் சிறப்பாக மாறும்.

இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எமினன்ஸ் அந்தஸ்தை ஐநூறு கல்லூரிகளை வச்சிக்கிட்டு செய்ய முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தனி இன்ஸ்டிடியூஷனாக இருந்தால்தான் முடியும்னு இந்த முடிவை எடுத்திருக்காங்க. அதன் தரத்தைத் தக்கவைக்கவும், வரக்கூடிய நிதியைப் பயன்படுத்தி உயர்நிலைக்குக் கொண்டு போகவும், முன்பு  நான்கு கல்லூரிகளாக இருந்தப்ப உள்ள அண்ணா பல்கலைக்கழகமாக மாற்றவும், மற்ற கல்லூரிகளை ஒரு குடையின் கீழ் ெகாண்டு வரவும் பண்ணியிருக்கிற இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது...’’ என்கிறார்.   

‘‘1978ம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டி டக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் குரோம்பேட்டையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜினு நான்கு பொறியியல் கல்லூரிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே அண்ணா பல்கலைக்கழகம்!

மற்ற பொறியியல் கல்லூரிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட்டன. அதனால், வெவ்வேறுபாடத்திட்டங்கள், விதிமுறைகள், தேர்வுகள் எல்லாம் இருந்தன.  2001ல் தமிழகத்திலுள்ள எல்லா பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதும் ஒரே பாடத்திட்டமானது.

இதனால், அதன் தரம் குறைஞ்சுபோச்சு. முதல்ல, பாஸ் மார்க்கை 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக மாத்தினாங்க. ஏன்னா, மற்ற கல்லூரிகள் பாடத்திட்டம் ரொம்ப கஷ்டமா இருக்குனு சொன்னாங்க. முன்னாடி 50 சதவீதம் பாஸ் மார்க்கை நாங்க ஒழுங்கா தக்கவச்சு உலக அளவுல திகழ்ந்தோம். இன்னைக்கு அந்தப் பெயரை இழந்திட்டு இருக்கோம்.

அடுத்து, நிறைய கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதால இங்குள்ள பேராசிரியர்களுக்கு வேலைப் பளு அதிகமாகி நல்ல ஆய்வுகள் கூட வரமுடியாமப் போகுது.

இருந்தும் இன்னைக்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ந்ததா இருக்கக் காரணம், அந்த நான்கு கல்லூரிகளும் தங்கள் தரத்தை பராமரிச்சிட்டு வர்றதுதான். அதனால, இப்ப உள்ள குறைபாடுகளைக் களைய இந்த எமினன்ஸ் அந்தஸ்து வாய்ப்பு ஒரு வரப்பிரசாதம்.

இதைப் பயன்படுத்தி தனி பல்கலைக்கழகமா மாத்தணும். பிறகு, அண்ணா பல்கலைக்கழக மற்ற கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றை இணைத்து ஒரு பல்கலைக்கழகமும், சுயநிதி எஞ்சினியரிங் கல்லூரிகளுக்கென ஒரு பல்கலைக்கழகமும் தனியா ெகாண்டு வந்து நிர்வாகக் கஷ்டத்தைக் குறைக்கணும்.

இப்ப மத்திய அரசும், மாநில அரசின் இடஒதுக்கீடான 69 சதவீதத்தை இந்த அந்தஸ்து பல்கலைக்கழகத்தில் பின்பற்றலாம்னு கிரீன் சிக்னல் காட்டிடுச்சு. அப்புறம் ஏன் தயக்கம்னு தெரியல...’’ என்கிறார் அவர். ஆனால், இதிலுள்ள பாதகங்களை எடுத்து வைக்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்.

‘‘இந்தத் திட்டத்துல தனியார் பல்கலைக்கழங்களுக்கு வெறும் IoE அந்தஸ்து மட்டும்தான். நிதி தரமாட்டாங்க. அந்த அந்தஸ்து கிடைச்சதும் அவங்க வெளிநாட்டு ஆசிரியர்களை நியமிச்சுக்கலாம். கட்டணங்களையும் உயர்த்திக்கலாம். மொத்தத்துல முழு சுதந்திரம் கொடுத்திடுவாங்க.

அப்புறம், மத்திய அரசின் கீழ் வருகிற ஐஐடி மாதிரியான நிறுவனங்களுக்கு நேரடியா நிதி கொடுத்திடுறாங்க. ஆனா, அண்ணா பல்கலைக்கழகம் மாநில பல்கலைக்கழகம்ங்கிறதால மாநில அரசும் ஒரு பங்களிப்பு செய்யணும்னு சொல்றாங்க. இதுக்கு மாநில அரசு நிதி கொடுக்கிறேன்னு கமிட்மெண்ட் லெட்டர் கொடுக்கணும். ஆனா, அதுக்கு முன்பு இங்குள்ள இடஒதுக்கீடான 69 சதவீதத்தை கட்டாயம் பின்பற்றணும்னு மத்திய மனிதவளத் துறைக்கு கடிதம் எழுதினாங்க.  

அவங்க மாநில இடஒதுக்கீட்டையே பின்பற்றிக்கலாம்னு பதில் கடிதம் அனுப்பினாங்க. ஆனா, அதுல 69 சதவீதம்னு நம்பர் குறிப்பிடப்படல. அதனால, 69 சதவீதம் என்கிற எண்ணுடன் போட்டு கடிதம் அனுப்பச் சொல்லி மாநில அரசு கேட்டது. இதுக்கு மத்திய அரசுகிட்ட இருந்து கடிதம் வந்தமாதிரி தெரியல.

இதுக்கிடையில்தான் ஐந்து அமைச்சர்கள் கொண்ட கமிட்டியை தமிழக அரசு அமைச்சிருக்கு. இந்த ஐந்து பேர்ல நான்கு பேர் துறைக்கு சம்பந்தம் இல்லாதவங்க. இவங்களுக்கு உதவி செய்ய மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளைப் போட்டிருக்காங்க. இதிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரை போடல. அவருக்குக் கீழ்தான் எஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் வருது. நாளைக்கு புது பல்கலைக்கழகம் வந்தாலும் அவருக்குக் கீழ்தான் வரும். ஆனா, அவர் கமிட்டியில உறுப்பினரா இல்ல.

இப்படி ஒரு கல்வி சார்ந்த கொள்கை முடிவு எடுக்கிறப்ப கல்வியாளர்களோ, முன்னாள் துணைவேந்தர்களோ, பேராசிரியர்களோ குழுவுல இருக்கணும். ஆனா, அப்படி யாரும் இடம்பெறல. அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கூட இல்ல. இதெல்லாம்தான் இப்ப கேள்வியா வருது.

அடுத்து, ஐந்து பேர் கமிட்டினு அரசு போட்ட உத்தரவுல, அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எமினன்ஸ்னு ரெண்டா பிரிச்சு பெயரே சூட்டிட்டாங்க. இதுலதான் இப்ப சிக்கலே!

பழைய அண்ணா பல்கலைக்கழகத்துல வர்ற நான்கு கல்லூரிகளும் அண்ணா இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எமினன்ஸ் உள்ளே வருது. அண்ணா பல்
கலைக்கழகம் மற்ற பொறியியல் கல்லூரிகளை இணைக்கிற ஒரு பல்கலைக்கழகமா மாறுது. இது தவறானது. புதுசா பிறக்கிற குழந்தைக்குதானே பொதுவா பெயர் வைக்கணும். ஆனா, இங்க தகப்பனுக்கு பெயர் வைச்சிருக்கிறது என்ன நியாயம்?

அப்புறம், அண்ணா பல்கலைக்கழகத்தின் சாதனைகளை எல்லாம் பார்த்திட்டுதான் ஆயிரம் கோடி ரூபாய் நிதி தர்றாங்க. இப்ப அண்ணா இன்டிடியூஷன் ஆஃப் எமினன்ஸ்னு பெயர் மாத்திட்டா தொடர்புகள் எல்லாம் அறுந்து போயிடும். குறிப்பா, அண்ணா பல்கலைக்கழகத்துல இதுவரை வெளியான ஆய்வுகளை எல்லாம் வச்சுதான் h indexனு ஒரு அளவுகோல் கொடுப்பாங்க. இந்த h index அதிகமா இருந்தா அந்தப் பல்கலைக்கழகம் ஆய்வுகள்ல சிறப்பா இருக்காங்கனு அர்த்தம்.

இப்ப பெயரை மாத்தினா இந்த h index ஜீரோனு மாறிடும். ஆக, அடுத்த ஐந்து வருஷத்துக்குள்ள எப்படி நீங்க h index-ஐ மேம்படுத்துவீங்க? கடந்த நாற்பது வருஷமா அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில்தான் எல்லா ஆய்வுக் கட்டுரைகளும் வெளியாகி இருக்கு. ஆக, உலகத் தரத்துக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை மட்டுமல்ல. புது நிறுவனத்தைக் கூட கொண்டு போகமுடியாது.

அப்புறம், அண்ணா பல்கலைக்கழகப் பழைய மாணவர்கள்னு நிறைய குரூப் இருக்கு. அவங்க பல்கலைக்கழகத்துக்கு அதிகம் உதவி செய்திட்டு வர்றாங்க. இப்ப அவங்களுக்கு ‘Alumini’னு சொல்ற வாய்ப்பும் பறிபோகுது. அடுத்து, பல்கலைக்கழகம்தான் பட்டமளிக்க முடியும்னு விதி இருக்கு. இப்ப புதுசா ஆரம்பிக்க உள்ளது இன்ஸ்டிடியூஷன்.

அதாவது நிறுவனம். ஒருவேளை நாளைக்கு பல்கலைக்கழகம்தான் பட்டமளிக்க முடியும்னு சொன்னா, இந்த புது நிறுவனம் இன்னொரு பல்கலைக்கழகத்துடன் இணைகிற மாதிரி ஆகிடும். அப்ப தன்னாட்சி என்பது பறிபோயிடும்.

அப்புறம், அண்ணா பல்கலைக்கழகத்துல செனட் கிடையாது. சிண்டிகேட் மட்டும்தான். இதுல, சிண்டிகேட்டை எடுத்திட்டு கவர்னிங் கவுன்சில்னு கொண்டு வர்றாங்க. அப்ப அடிப்படை சட்டமே மாறுது. அடுத்து, புது சட்டம் கொண்டு வந்தா துணைவேந்தர் பதவி பறிபோய் ஐஐடி மாதிரி இயக்குநர்னு வந்திடும். இப்ப ஐஐடிகள்ல இடஒதுக்கீடு இருந்தும் பார்னு சொல்லப்படுகிற கல்வித் தகுதியை உயர்த்தி வச்சிருக்காங்க.

அதனால, இடஒதுக்கீடு இருந்தும் அளவுகோல் இல்லனு மாணவர்களை நிராகரிக்கிறாங்க. அதாவது இடஒதுக்கீட்ைட மறைமுகமா பின்பற்றாமல் விடுறாங்க.அதனால, இந்த புதுசா வர்ற அண்ணா இன்ஸ்டிடியூஷன்லயும் இதுமாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு. தவிர, கல்விக் கட்டணத்தை நிச்சயம் உயர்த்திடுவாங்க. ஐஐடியில பி.ெடக் படிக்க வருஷம் இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகும். இந்த மாதிரி கட்டணம் வச்சா தன்னாலேயே யாரும் இங்க வரமாட்டாங்க. ஏழை மாணவர்களுக்கு இது ஒரு பாதகம்.

ஆனா, உலகத் தரமான பல்கலைக்கழகம் இந்தியாவுல இல்லைனு சொல்லும்போது அது வருத்தமானதுதான். அதுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் அடையாளத்தையோ, பெயரையோ விட்டுத்தர முடியாது. அதனால, இப்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்காமல் அதே பெயரில் IoE அந்தஸ்து கொடுக்கணும்னு கேட்குறோம்.

வேறொரு பெயரில் புதுசா ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதன்கீழ் மற்ற பொறியியல் கல்லூரிகளைக் கொண்டு போகலாம். அப்படிச்செய்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழும் சிதையாது;தரமும் உலகளவில் உயரும்; மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் நேராது...’’ என்கிறார் அவர் அழுத்தமாக!

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்