உலகை அச்சுறுத்தும் கொடிய நோய்!



மனித குலத்தை ஒரு புரட்டு புரட்டி எடுக்க காத்திருக்கும் ஆபத்து டிமென்ஷியா. ஆம்; ‘‘இன்னும் சில வருடங்களில் உலகை ஆக்கிரமிக்கப் போகும் முக்கிய நோய் டிமென்ஷியாதான்...’’ என்று அடித்துச் சொல்கிறது அல்சைமர்ஸ் அமைப்பு. உலகளவில் ஒவ்வொரு 3 விநாடிக்கும் ஒருவர் டிமென்ஷியாவால் தாக்கப்படுகிறார் என்பது இன்னொரு அதிர்ச்சி.

இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவில் சுமார் ஒரு கோடிப் பேர் டிமென்ஷியாவுக்கு ஆளாகலாம். இந்த நோய் இருந்தாலும் யாரும் பரிசோதனை செய்யக்கூட முன்வருவதில்லை என்பது மருத்துவத்துறை வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. அதென்ன டிமென்ஷியா?
அன்றாட வாழ்க்கையையே பெரும் அவதிக்கும் கடினத்துக்கும் உள்ளாக்கும் மறதி நோய்தான் டிமென்ஷியா.

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் செயல்பாடு படிப்படியாகக் குறையும். அதனால் சிந்திப்பது, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது, வெளிப்படுத்துவது, நினைவாற்றல் என எல்லாமுமே பாதிக்கப்படும். டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவரால் ஒருபோதும் தனித்து இயங்க முடியாது.
அவரது ஒவ்வொரு தேவைக்கும் இன்னொருவரின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த நோயைக் குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மனிதனின் துரதிர்ஷ்டம். இதைவிட கொடுமை இந்த நோய் இருப்பதே தெரியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.  டிமென்ஷியா வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.குறிப்பாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது இது அதிகமாக ஏற்படுகிறது. பொதுவாக அறுபது வயதைக் கடந்தவர்களைத்தான் டிமென்ஷியா தாக்குகிறது.

ஆனால், இப்போது 40 வயதானவர்களைக் கூட டிமென்ஷியா தாக்குவதுதான் துயரம். வாழ்க்கை முறை மாற்றம், உணவு, மன உளைச்சல் போன்றவையும் டிமென்ஷியாவுக்கு அடித்தளம் இடுகின்றன. இதுபோல் இன்னமும் என்னென்ன ஆபத்துகள் மனிதகுலத்துக்குக் காத்திருக்கின்றனவோ?  

த.சக்திவேல்