டாக்டர் நடத்தும் விலங்குகளுக்கான அனாதை இல்லம்!



பொழுதுபோக்குக்காகவும், உணவுக்காகவும் விலங்குகளும் பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன. இப்படி வேட்டையாடப்படும் விலங்குகளின் குட்டிகள் அனாதையாகிவிடுகின்றன.

மனிதனுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால் அவனைப் பராமரிக்க அனாதை இல்லங்கள் இருக்கின்றன. விலங்குகளுக்கு என்ன இருக்கிறது?
இப்படி நாம் யோசிக்கும் முன்பே விலங்குகளுக்காக ஓர் அனாதை இல்லத்தை தன் வீட்டிலேயே உருவாக்கி அதை சிறப்பாகவும் நடத்தி வருகிறார் சமூக சேவகர் பிரகாஷ் ஆம்தே.

இந்தியக் காடுகளில் பழங்குடியினரால் உணவுக்காக வேட்டையாடப்பட்ட விலங்குகளின் குட்டிகளுக்கு எல்லாம் இவர்தான் அம்மா.
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மக்களின் ஆதரவுக்கும் மத்தியில் இப்படியொரு அனாதை இல்லத்தை நடத்தி வரும் பிரகாஷ் ஆம்தே ஒரு மருத்துவர்; மகாராஷ்டிராவில் பிறந்தவர். இதுபோக, காயமடைந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சிகிச்சையும் அளித்துவருகிறார்.

‘‘எழுபதுகளின் ஆரம்பத்தில் நானும் என் மனைவியும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தோம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த பத்து பேர் வேட்டையாடப்பட்ட குரங்குகளுடன் எங்களின் எதிரே வந்தனர். அவர்களில் ஒருவரின் கையில் குட்டிக்குரங்கு உயிரோடிருப்பது தெரிந்தது. அது, இறந்துபோன அம்மா குரங்கைப் பற்றிக் கொண்டிருந்தது. அந்தக் குட்டிக் குரங்கு அம்மாவின் மார்பில் பால் குடிக்க முயற்சி செய்ததைப் பார்த்தபோது என் இதயம் நொறுங்கிப் போனது.

நான் அந்த பழங்குடிகளிடம், ‘இறந்த குரங்கை என்ன செய்வீர்கள்...’ என்று கேட்டேன். ‘அதைச் சாப்பிடுவோம்...’ என்றனர். இந்தச் சம்பவம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம்; வாழ்க்கையின் அடிப்படையான விஷயங்களை அம்மாவிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல; விலங்குகளுக்கும் பொருந்தும்.

எப்படி வேட்டையாடுவது, உணவைச் சேகரிப்பது, எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்வது போன்ற விஷயங்களை விலங்குகள் தாயிடமிருந்துதான் கற்கின்றன. ஆனால், என்னிடம் உள்ள விலங்குகள் பிறந்ததிலிருந்து அம்மாவையே பார்த்திராதவை.

எனவே அம்மாவாக அவற்றுக்கு இருக்கிறேன்...’’ என்கிற பிரகாஷ் ஆம்தேவின் சேவையைப் பாராட்டி கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளது. இந்த விருதைக் கொடுத்தவர் பில்கேட்ஸ்.                               

த.சக்திவேல்