நியூஸ் சாண்ட்விச்



நூற்றாண்டு பழமையான சர்ச்சில் ஸ்கேட்டிங்

ஸ்பேனிஷ் நகரில், நூறு ஆண்டு பழமையான தேவாலயம் ஒன்று பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் கைவிடப்பட்டிருந்தது.
தவிர நகரில் பல காலி இடங்கள் பராமரிப்பின்றி அங்கு சட்டவிரோத செயல்களும் நடந்து வந்துள்ளன. இதனால், மக்களும் இந்த இடங்களுக்குச் செல்ல பயந்து தவிர்த்துள்ளனர். இந்த நிலையை மாற்ற உலகில் பல அமைப்புகள் இதுபோன்ற காலி இடங்களுக்கு புது வடிவம் தந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முயன்று வருகின்றன.

அந்த வகையில் ‘தி சர்ச் ப்ரிகேட்’ என்ற அமைப்பு, ஒகுடா சான் மிகுவல் என்ற கலைஞரின் உதவியுடன் பாழடைந்த இந்த சர்ச் கட்டடத்தை வண்ணமிகுமையமாக அமைத்து, ஸ்கேட்டிங் பூங்காவாக மாற்றியுள்ளனர்!

உயிருடன் சவப்பெட்டிக்குள் 10 நிமிடங்கள்!

தென் கொரியாவில்தான் இந்த சம்பவம் நடக்கிறது. இறந்த பின்னர் ஏற்படும் அனுபவத்தைப் பெற விரும்பும் மக்கள், தங்களுக்குத் தாங்களே இறுதிச் சடங்கு நடத்திக் கொள்கின்றனர்!தங்கள் கடைசி ஆசையை எழுதி உயிலைத் தயாரித்து இறுதிச் சடங்குக்கான உடையை அணிந்து சவப்பெட்டிக்குள் 10 நிமிடங்கள் இருக்கின்றனர். இதில் கிடைக்கும் அனுபவம் தங்களை பக்குவப்படுத்துவதாகவும்; கோபம், பொறாமை ஆகியவை அகல்வதாகவும் மக்கள் சொல்கின்றனர். இதனால் ‘சவப்பெட்டியில் வசிக்கும்’ நிகழ்வு அங்கு தொடர்ந்தபடி இருக்கிறது!

தினம் 9 மணி நேரம் தூங்கினால், ஒரு லட்சம் சம்பளம்!

இந்தியாவில் வேக்ஃபிட் (Wakefit) என்ற மெத்தை உருவாக்கும் நிறுவனம், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது 100 நாட்கள் வேலைத் திட்டம்!இதன்படி தொடர்ந்து 100 நாட்கள் தினமும்  9 மணி நேரம், இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். விடுமுறை கிடையாது. 100 நாட்களின் முடிவில் ரூபாய் ஒரு லட்சம் தரப்படும். இதற்கு எந்த தகுதியும் படிப்பும் தேவையில்லை.

அந்த ஒன்பது மணி நேரமும் தூங்குவது மட்டும்தான் வேலை!இரவு ஒன்பது மணி நேரம் அவர்கள் உறங்குவதை கண்காணிக்கிறார்கள். ‘வேக்ஃபிட் மெத்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் தூக்கம் எப்படி இருந்தது; பயன்படுத்தியபின் எப்படி மாறியிருக்கிறது’ என்பதை கணக்கிடுகின்றனர்!

போக்குவரத்தை கட்டுப்படுத்த காவலர் பொம்மைகள்

பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவலர்கள் மேற்கொள்ளும் வினோதமான முயற்சி டுவிட்டரில் டிரெண்டாகி உள்ளது.சாலை விதிகளைப் பின்பற்றி, முறையாக சிக்னலை மதித்து பாதுகாப்பாக பயணிக்க, ஆறு அடி பொம்மைக்கு போலீஸ் சீருடை அணிவித்து, சாலையின் நடுவே வைத்திருக்கின்றனர்.

காவலரை தொலைவில் பார்த்ததுமே ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் மக்கள் பயணிப்பதை கவனித்த பிறகே அதிகாரிகளுக்கு இந்த புது ஐடியா தோன்றியதாம்!

பாட்டிலில் விற்கப்படும் சுத்தமான காற்று

எதையுமே பிஸினஸ் யுக்தியாக மாற்றி லாபம் பார்க்க நினைக்கும் மனிதன், இப்போது காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளான். உலகிலுள்ள பல நிறுவனங்கள் இந்தத் துறையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். முதலில் சீனாவில் அறிமுகமாகி இப்போது இந்த சுத்தமான பாட்டில் காற்று இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. 10 லிட்டர் பாட்டிலின் விலை ரூ.550. இதில் 160 முறை சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்!

வெங்காயத்தை வழிபடும் மக்கள்

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பலரும் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இதைச் சார்ந்த மீம்ஸ்களும், செய்திகளும் ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்நிலையில் பீகார் மாநில மக்கள், வெங்காயத்தை வாங்க முடியாமல், கண்ணால் பார்த்து வழிபட மட்டும்தான் முடியும் என்று கூறி நூதன முறையில் வெங்காயத்தை பூஜை செய்து வழிபட்டும், மாலையாக அணிவித்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்!

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்