முகம் மறுமுகம் - லதா மேனன் Wild life photography



விளம்பரப் பட உலகின் லேடி சூப்பர் ஸ்டார் லதா மேனன். தனது ‘ஐரிஸ் ஃபிலிம்ஸ்’ மூலம் பால், ஐஸ்கிரீம்ஸ், பிஸ்கட், காண்டம் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், ஆவண, குறும்படங்கள் என தேசிய அளவில் இயக்கியும், தயாரித்தும் கலக்கியவர்; கலக்குபவர்.
தன் கணவரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ்மேனன் இயக்கிய ‘சர்வம் தாளமயம்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் புரொமோஷன் ஆனவர் இவர்.

புகைப்படம் எடுப்பதை ஹாபியாக ஆரம்பித்த லதா, இப்போது வைல்டு லைஃப் போட்டோகிராபி, காலண்டர் ஷூட் என பன்முகமாக பள
பளக்கிறார்.‘‘வைல்டு லைஃப் ட்ரிப்புக்கு ஒண்டியா போயிட்டு வர்றது ரொம்ப கஷ்டம். ஒரு கேங்கா போறதுதான் பாதுகாப்பு. இந்த டிராவலை நம்மளோட சவுகரியத்துக்கு ப்ளான் பண்ண முடியாது. நேரம் காலம் முக்கியம்.

குளிர்காலம், மழைக்காலத்துல விலங்குகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு வெளியே வராது. தவிர மழைல புற்களும் செழித்து வளர்ந்திருக்கும். இதனால விலங்குகளின் நடமாட்டம் கண்களுக்குத் தெரியாது.வெயில் காலம் அப்படியில்ல. தண்ணீரைத் தேடி அனிமல்ஸ் வரும். கூட்டம் கூட்டமா யானை, கரடி, புலினு எல்லாம் ஓடியாடுவதை பார்க்க முடியும்...’’ கண்கள் விரிய பேசுகிறார் லதா மேனன்.

‘‘என் கணவருக்கு காஸிரங்கா, ரந்தம்பூர்ல நண்பர்கள் இருக்காங்க. அவங்களுக்கு காடுகள்ல பர்மிஷன் கிடைக்கிறப்ப எங்களையும் கூப்பிடுவாங்க. எந்த வேலையா இருந்தாலும் அதை அப்படியே போட்டுட்டு கிளம்பிடுவோம். ஏன்னா, ஃபாரஸ்ட்ல பர்மிஷன் கிடைக்கறது பெரிய விஷயம்.
ஃபாரஸ்ட் ஜீப்லதான் நம்மை சுத்திப் பார்க்க அனுமதிப்பாங்க. ஜீப்ல ஒரு உள்ளூர் கைடும், துப்பாக்கியோட ஒரு வனக்காவலரும் இருப்பாங்க.

காஸிரங்காவுல  ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அரிய இனம். அதோட கொம்புகளுக்காக அதை அங்கே வேட்டையாடறவங்க அதிகரிச்சதால, கன் வைத்த காவலரை நம்ம கூட அனுப்பறாங்க...’’ என்ற லதா மேனன், வைல்ட் லைஃப் போட்டோகிராபி கொஞ்சம் காஸ்ட்லியான ஹாபி என்கிறார்.
‘‘குறைஞ்சது ஒரு வாரமாவது காட்ல பயணிச்சாதான் புலிகள், யானைகளை எல்லாம் பார்க்க முடியும். இல்லைனா மான், குரங்குகள், பறவைகள்தான் கண்ணுலயும் கேமராவுலயும் சிக்கும்.

வெளிநாடுகள்ல இருந்து வர்ற வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர்ஸ் டெலிலென்ஸ் எல்லாம் கொண்டு வந்து ஷூட் பண்றாங்க. சிலர் மாசக்கணக்குல காத்திருந்து போட்டோ எடுக்கறாங்க. வேட்டையாடுவது முதல் குட்டி போடுவது வரை பொறுமையா காத்திருந்து க்ளிக் பண்றாங்க.
சிலர் பறவைகளின் சவுண்ட்ஸை ரெக்கார்ட் பண்றாங்க. ஒன்றிரண்டு பேர் டாக்குமெண்டரி எடுத்துட்டு இருக்காங்க.

இத்தனை பேர் ஒரே நேரத்துல வேலை செய்துட்டு இருந்தாலும் பின் டிராப் சைலன்ஸ் நிலவும். அந்தளவுக்கு இதுக்கு டெடிகேஷன் தேவை. இதையே மெடிடேஷன்னும் சொல்லலாம்! ஏன்னா, அடர்ந்த காடுகள்ல விலங்குகளுக்காக காத்திருப்பது தியானம், தவம் மாதிரி...’’ முகமெல்லாம் பிரகாசித்தபடி பேசும் லதா மேனன், வைல்டு லைஃப் போட்டோகிராபராக மாறியது சுவாரஸ்யமானது.

‘‘அந்த க்கால பிளாக் அண்ட் வொயிட் படங்களை எங்கம்மா விரும்பிப் பார்ப்பாங்க. 1940 காலகட்ட படங்களுக்கு எல்லாம் என்னையும் அழைச்சிட்டு போவாங்க. அதுல குருதத்தின் படங்கள் கவர ஆரம்பிச்சது. அந்த படங்கள் எல்லாம் ரொம்பவும் ஸ்லோவா நகரும். அதனால, ஃபிரேம் பை ஃபிரேம் ஸ்டில்ஸ் மாதிரி மனசுல பதிஞ்சது. போட்டோகிராபி மீது எனக்கு ஆர்வம் வந்தது இப்படித்தான்.

இத்தனைக்கும் அப்ப எங்ககிட்ட சொந்தமா கேமரா கூட கிடையாது. ஸோ, என் கவனம் ஓவியம் பக்கம் திரும்புச்சு. ஆயில் பெயிண்டிங், சாக்கோ, வாட்டர் கலர்னு எல்லாமே வரைவேன். ஒரு தடவ திருவனந்தபுரத்துலவிலங்கியல் பூங்காவுக்கு போயிருந்தேன். அங்க சிங்கம், புலி எல்லாம் இயற்கையான சூழல்ல அழகா, அருமையா வச்சிருந்தாங்க. அதையெல்லாம் ஷூட் செய்து நேஷனல் ஜியாக்ரபிக்ல சேரணும்னு கூட விரும்பியிருக்கேன்!

இந்த விஷுவல் கனெக்‌ஷன்ஸ்தான் அட்வர்டைஸிங் துறைல ஈடுபட வச்சது. அப்ப விஸ்காம் கிடையாது. விளம்பரப் படங்கள்னா, மார்க்கெட்டிங் கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். அதனால பி.காம்ல சேர்ந்தேன். காலேஜ்ல படிக்கிறப்ப ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் டீச்சர்ஸ்கிட்ட போய் கத்துக்கிட்டிருப்பேன்.

காலேஜ் முடிச்சதும், சொந்தமா ஒரு கேமரா வாங்கிட்டேன். அதுல இருந்து க்ளீக் டைரீஸ் ஸ்டார்ட் ஆச்சு!ஆரம்பத்துல நைகான் எஃப்.எம்.2 ஃபிலிம் கேமரா வச்சிருந்தேன். வீட்டைவிட்டு வெளிய எங்க கிளம்பினாலும் அந்த கேமராவையும் எடுத்துப்பேன். அப்புறம் கேனன்ல ஒரு கேமரா வாங்கினேன். விளம்பரப் பட நிறுவனம் தொடங்கியதும், போட்டோகிராபி பெரியளவுல கைகொடுத்துச்சு.

ரெக்கி போறப்ப, அதாவது லொகேஷன் பார்க்கப் போறப்ப எங்கெங்கே ஷூட் பண்ணணும்னு க்ளிக் பண்ணிப்பேன். அப்புறம், அந்த போட்டோஸை எல்லாம் ஒரு ஸ்டோரியா தொகுத்து, க்ளையண்ட்ஸ்கிட்ட ஸ்டோரிபோர்டு மாதிரி ‘இப்படித்தான் அவுட்புட் வரும்’னு விளக்குவேன்.
என் வீட்டுக்காரர் தன் ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து வைல்டு லைஃப் போட்டோகிராபி ட்ரிப் போவார். அது ஆல்மென்ஸ் கேங்!

ஒவ்வொரு முறையும் ட்ரிப் போயிட்டு வந்ததும் தன் பயணத்தைப் பத்தி விவரிப்பார். கேட்கக் கேட்க அடுத்த முறை நாமும் போகணும்னு தோணும்.
அப்படியே அவரோட கேங்ல ஒட்டிக்கிட்டேன். அசாமிலுள்ள காஸிரங்கா காண்டாமிருக பூங்கா, ராஜஸ்தான் ரந்தம்பூர் புலிகள் பூங்கா, கபினி காடுகள், பந்திப்பூர் புலிகள் பூங்கானு ஒரு வைல்ட் ட்ரிப் போயிட்டு வந்துட்டேன்.

அசாம்ல உள்ள காஸிரங்கா காண்டாமிருக சரணாலயத்துல இருந்துதான் என்னோட வைல்டு லைஃப் போட்டோகிராபி ஆரம்பிச்சது. ஏப்ரலுக்கு முன்னாடி மழைக்காலம். அப்ப அந்த ஜூவை க்ளோஸ் பண்ணிடுவாங்க. அதனால நாங்க முன்கூட்டியே போயிட்டோம். 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பூங்கா அது.

நாங்க அந்தக் காட்டுக்குள்ளே நுழையறதை ஒரு மரத்துக்குப் பின்னாடி இருந்து ஒரு காண்டாமிருகம் கோபத்தோட பார்த்துட்டிருந்தது. மிரண்டுட்டேன். ராஜீவ்தான், ‘ரைனோ வெஜிடேரியன். நம்ம கூட வனக்காவலரும் வர்றாரே... பயப்படாத... இதெல்லாம்தான் எக்ஸ்பீரியன்ஸ்’னு சொல்லி தைரியம் கொடுத்தார்.

காஸிரங்கா, பச்சைபசேல்னு குளுமையா இருக்கும். அதனாலதான் எங்க ‘சர்வம் தாளமய’த்துல அந்த லொகேஷனை பயன்படுத்தினோம்.ஆனா, ராஜஸ்தான் ரந்தம்பூர் புலிகள் பூங்கா அப்படியில்ல. ரொம்ப வறண்ட ஏரியா. புலிகள் ரொம்ப தொலைவுலதான் தெரியும். எங்க அதிர்ஷ்டம், ஒரு தாய்ப் புலியையும் அதோட மூணு குட்டிகளையும் ஜீப்புக்கு பக்கத்துல பார்த்தோம்.

அப்புறம் தாயிடம் இருந்து பிரிஞ்சு வந்து, தனக்கான இடத்தை ஒரு புலி தேர்வு செய்யும் முறையையும் கவனிச்சோம். இதுக்காக அன்னிக்கி 20 கிமீ அலைஞ்சிருப்போம். அந்த புலியின் நடமாட்டத்தை பொறுமையா பார்த்து கேட்ச் பண்ணினோம்...’’ என்று சொல்லும் லதா மேனன், கபினி காடுகள் டிரை ஏரியா என்கிறார்.‘‘வெக்கை பகுதி. பந்திப்பூர்ல சில இடங்கள்ல புலிகள் நம்ம ஜீப் பக்கம் வந்து உறுமிட்டுப் போகும். அங்க மயில்கள் அதிகம். புலி வரும்போது அதுதான், குரல் எழுப்பி மான்களை அலர்ட் பண்ணும்!

ஆக்சுவலா புலிகள், யானைகள்கிட்ட நிறைய நல்ல பண்புகள் இருக்கு. வயிறு நிறைய சாப்பிட்டதும் புலி அமைதியாகிடும். எதிர்ல மானே வந்து நின்னாலும் வேட்டையாடி சாப்பிடாது.ஒருமுறை ஒரு யானையைப் பார்த்தோம். பசியோடு சுத்திட்டு இருந்துச்சு. ஆனா அங்க ஒரு மரத்துல சின்ன கிளைதான் இருந்துச்சு. அதையே அது பொறுமையா வளைச்சு அந்த பசியிலயும் பதறாம, அவசரப்படாம நிறுத்தி, நிதானமாக சாப்பிட்டது.

இப்படி பல விஷயங்களை விலங்குகள் நமக்கு கத்துக் கொடுக்குது... நாமதான் இதுமாதிரியான ரசனையான தருணங்களைத் தவறவிட்டு எந்திரமா அலைஞ்சுட்டு இருக்கோம்...’’ அழுத்தமாகச் சொல்லும் லதா மேனன், தான், எடுக்கும் வைல்டு லைஃப் புகைப்படங்களை காலண்டராகவும் கொண்டு வருகிறார்.

‘‘இது எதேச்சையா நடந்த விஷயம். 2015ல வெள்ளத்தால சென்னை பாதிச்சப்ப, என் பங்களிப்பா ஏதாவது உதவ நினைச்சேன். என் க்ளையண்ட் சப்போர்ட்டோடு என் வைல்டு போட்டோஸை காலண்டரா செய்து விற்கலாம்னு தோணுச்சு. உடனே செயல்படுத்திட்டோம்.

இதன் வழியா வரும் வருமானம் நேரடியா சம்பந்தப்பட்ட அமைப்புக்கு போயிடும். இப்ப அஞ்சாவது வருஷமா கொண்டு வரேன். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு அமைப்புக்கு உதவறேன். 2வது வருஷம் கிட்னிக்கான டேங்கர் பவுண்டேஷனுக்கும், மூணாவது வருஷம் விவசாயிகள் நல அமைப்புக்கும், நாலாவது வருஷம் பூந்தமல்லி சுயம் அமைப்புக்கும், இப்ப 2020ல வைல்ட் டிரஸ்ட்டுக்கும் காலண்டர் போட்டுக் கொடுத்திருக்கேன்.

இந்த வருஷம் கொண்டு வர்ற காலண்டர்ல மறுபடியும் காஸிரங்கா படங்கள்தான். இது போக நான் வியட்நாம், சுவிட்சர்லாந்து, கேன்ஸ் ஃபெஸ்டிவல்கள்ல க்ளிக் பண்ணின போட்டோஸை எல்லாம் சின்ன வாக்கியத்துடன் அழகான போஸ்ட் கார்ட்ஸா கொண்டு வர்ற ஐடியா இருக்கு.

வியட்நாம்ல ஒருத்தர் அவசரமா சைக்கிளை எடுத்துட்டு போறதைப் பார்த்தேன். அவர் முகமெல்லாம் அவ்ளோ அழகான சிரிப்பு. அந்தத் தருணத்தை அப்படியே கேமரால கேட்ச் பண்ணிட்டேன். அதைப் பார்த்துட்டு ராஜீவ் பாராட்டினார்.

இப்ப வாட்ஸ்அப், ஈமெயில் வந்தபிறகு போஸ்ட் கார்ட் என்கிற அழகான விஷயம் மிஸ் ஆகிடுச்சு. அந்த சந்தோஷத்தை இந்த ஜெனரேஷனும் அனுபவிக்கணும். அதுக்காகவே இந்த ஐடியாவை செயல்படுத்த முயற்சி செய்துட்டு இருக்கேன்...’’ புன்னகைக்கிறார் லதா மேனன்.

மை.பாரதிராஜா

லதா மேனன்