விக்ரம் சார் ஒரு யூனிவர்சிட்டி! நெகிழ்கிறார் ஆதித்ய வர்மா அன்புதாசன்



இது யூ டியூப் காலம். முன்பு நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தது போல் இப்போது யூ டியூப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அங்கிருந்து வெள்ளித்திரைக்கு ஜம்ப் ஆகின்றனர்.அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் அன்புதாசன். எவ்வித பின்புலமும் இல்லாத இவர், ‘மீசைய முறுக்கு’, ‘கோலமாவு கோகிலா’வில் கால் பதித்து ‘ஆதித்ய வர்மா’வில் தடம் பதித்திருக்கிறார்.

‘‘சொந்த ஊர் தஞ்சாவூர். மிடில் கிளாஸ் குடும்பம். இன்ஜினியரிங் படிக்கிறப்ப விவேகானந்தர் யூத் கிளப் தொடங்கி அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்து உதவிகளை செய்ய ஆரம்பிச்சோம்.

விக்னேஷ்காந்த் அண்ணாதான் சினிமாவுக்கு கூட்டி வந்தார். எங்க வீட்ல யாருக்கும் சினிமா பார்க்கற ஆர்வம் கூட இருந்ததில்ல. ஃபேமிலியா நாங்க சினிமாவும் பார்த்ததில்ல!ரேடியோ ஜாக்கியா ஆக விரும்பினேன். பிறகு சினிமா ஆசை வந்தது. ஆனா, நம்மால அங்க போய் எப்படி சாதிக்க முடியும்னு நினைச்சு என் விருப்பத்தை மூட்டை கட்டி வைச்சேன்...’’ சிரிக்கும் அன்புதாசன், இந்த நேரத்தில்தான் விக்னேஷ் அண்ணா யூ டியூப் சேனல் ஆரம்பித்தார் என்கிறார்.

‘‘அதுல விளையாட்டா எங்களுக்குத் தெரிஞ்சதை செய்யத் தொடங்கினோம். காதல் எபிசோடுகள்ல நான் நடிச்சேன். ‘எப்படி லவ் பண்ணணும்’னு நான் சொன்ன டிப்ஸுக்கு வரவேற்பு கிடைச்சது. பலரும் அதை தங்கள் வாழ்க்கைல அப்ளை செஞ்சு ஜெயிச்சிருக்காங்க!

இதுக்கு கிடைச்ச வரவேற்பால வெப் சீரிஸ்ல நடிக்க சான்ஸ் வந்தது. அப்பதான் ஹிப் ஹாப் ஆதி, யூ டியூப் நடிகர்களை வைச்சு ‘மீசைய முறுக்கு’ படத்தை ஆரம்பிச்சாரு. எனக்கு சின்ன ரோல். ஆனா, நல்ல என்ட்ரி. இந்தப் படத்தை பார்த்துட்டு ‘கோலமாவு கோகிலா’ ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க.
நயன்தாரா தங்கச்சிய பொண்ணு கேட்டு போற சீன் பேப்பரை கொடுத்து நடிச்சுக் காட்ட சொன்னாங்க.

செஞ்சேன். செலக்ட் ஆனேன். இயக்குநர் நெல்சனுக்கு அப்ப என்னைத் தெரியாது. ஷூட்டிங் அப்பதான் நான் நிறைய யூ டியூப் வீடியோஸ்ல நடிச்சிருக்கேன்னு தெரியும்! பாராட்டினார்...’’ என்று சொல்லும் அன்புதாசனுக்கு நயன்தாராவுடன் நடிக்கையில் ‘அல்லு கழண்டிடிச்சாம்’.

‘‘பயத்தோடயே இருந்தேன். ஆனா, அவங்க என்னை ரிலாக்ஸ் பண்ணி தன் தம்பி மாதிரி பார்க்க ஆரம்பிச்சாங்க. யோகிபாபு அண்ணனோடு சேர்ந்து நான் அடிச்ச லூட்டியை ரசிச்சாங்க.துறுதுறுனு ‘கோ கோ’ல நான் நடிச்சதைப் பார்த்து ‘ஆதித்ய வர்மா’வுக்கு கூப்பிட்டாங்க. வெளிய தெரியற அளவுக்கு அதுல நல்ல ரோல்.

இயக்குநருக்கும் விக்ரம் சாருக்கும் துருவுக்கும் தேங்க்ஸ்...’’ நெகிழும் அன்புதாசன், தனது முந்தையபடங்களைப் பார்த்துவிட்டே அடுத்த படம் கிடைப்பதால் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போலவே பயத்துடன் நடிப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்தே நானும் துருவ்வும் ஃப்ரெண்ட்ஸாகிட்டோம். நடிப்பு சார்ந்து அவ்வளவு நுணுக்கங்களை விக்ரம் சார் சொல்லிக் கொடுத்தார். வாழ்நாளுக்கான பாடம் அது!

துருவோட லவ்வர் வீட்டு முன்னாடி பிரச்னை பண்ணப்போற காட்சியை அடுத்தநாள் எடுக்கப் போறதா முதல் நாளே சொல்லிட்டாங்க. நைட் முழுக்க பிரிபேர் செஞ்சேன். மறுநாள் அதிக டேக் இல்லாம நான் நடிச்சதுக்கு விக்ரம் சார் கொடுத்த டிப்ஸ்தான் காரணம். அதே மாதிரி காதல் தோல்வியை நினைச்சு துருவ் அழற சீன்... கொஞ்சம் பெரிய காட்சி. நானும் அழணும். டேக் அப்ப துருவும் நானும் நிஜமாவே அழுதோம்!

பிரேக்குல விக்ரம் சார் ‘தில்’, ‘தூள்’ ஆக்‌ஷன் அனுபவங்களை ஜாலியா பகிர்ந்துகிட்டார். அதே மாதிரி ‘சேது’, ‘காசி’ல உணர்வை உள்வாங்கி எப்படி நடிச்சேன்னும் சொன்னார். யூனிவர்சிட்டில ஆக்டிங் பத்தி படிச்சா மாதிரி இருந்தது. நிஜமாவே விக்ரம் சார்கிட்ட இருந்து அவ்வளவு கத்துக்கிட்டேன்...’’ கண்கள் பனிக்க சொல்லும் அன்புதாசன், தொடர்ந்து யூ டியூப்பில் நடிப்பேன் என்கிறார்.‘‘இந்தளவுக்கு நான் வர யூ டியூப்தான் காரணம்... எப்பவும் அதை விடமாட்டேன்!’’  

திலீபன் புகழ்